தனிமை.


னிமை ஒரு சாபக்கேடு, தனிமை ஒரு சாத்தான், தனிமை ஒரு நோய். மெல்ல மெல்ல இறப்பதை போன்று மனிதனை வஞ்சிக்கும் அது கருவறையிலே தோன்றியது. தாழ்வு மனப்பான்மை, பயம், நோய், அன்புக்குரியவர்களின் இழப்பு, நரம்பியல் குறைபாடுகள், நம்பிக்கையற்ற விரக்தி, சமுதாயத்தோடு ஒத்துப்போகாத நிலை இவைகளே தனிமைக்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன. இதனையும் தவிர்த்து அவசரகால நவீன யுகத்தில் தனிமைக்கு மேலும் சில காரணங்களும் இருக்கக்கூடும். Keep Yourself Busy என்பதே இந்த தனிமையை விரட்டும் தாரக மந்திரமாக இருக்க அந்த தனிமையின் கொடுமையையும் மற்றவர்களிடமிருந்து தனித்து அந்நியப்படுதலையும் இந்த திரைப்படம் இருவரின் வாழ்வியலோடு அழகாக காட்டுகிறது.



நாற்பது வயது கடந்த தொழில்முறை புகைப்படக்காரரான முகமது என்பவர் துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் வசித்து வருகிறார். ஓரளவிற்கு வசதி வாய்ப்பில் குறைவில்லாத அவர் தனது மனைவியுடனான விவாகரத்திற்கு பின் தனிமையில் ஒரு பிடிப்பில்லாத இலக்கற்ற வாழ்க்கையை நடத்துகிறார். ஒரு நாள் அவரைத்தேடி அவரது தூரத்து உறவினரான யூசுப் என்பவன் வருகிறான். இளைஞனான யூசுப்பின் தந்தை இறந்தவுடன் அவனது குடும்பம் கடனில் மூழ்குகிறது. அவனது தொழில்சாலை வேலையும் பறிபோக புதிய வேலையைத் தேடியே அங்கு வருகிறான். யூசுப்பிற்கு நகரத்தில் உள்ள துறைமுகத்தில் கப்பலில் வேலை செய்யும் ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால் அவனது குறைந்த கல்வித் தகுதியினாலும் நகரத்தோடு ஒட்டாத தன்மையாலும் வேலை கிடைக்காத நிலை தொடர்கிறது. முகமது மற்றும் யூசுப் இருவரும் ஓரே வீட்டில் தங்கியிருக்க இருவருக்கும் ஏதோ ஒருவிதத்தில் தங்கள் அன்றாட வாழ்கையில் பழகிய தனிமை அவர்களை அந்நியப்பட வைக்கிறது. இருந்தும் முகமது தனது புகைப்படங்களைப் பற்றியும் தனது காதல் கதையைப்பற்றியும் கிடைத்த சந்தர்ப்பங்களில் யூசுப்புடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறார். ஆனால் இதில் எதிலும் லயிக்காத யூசுப் ஒருநாள் சொல்லிக் கொள்ளாமல் அவரை விட்டு பிரிகிறான். 



ஒரு நகரம், ஒரு சில தெருக்கள், ஒரு வீடு, இரண்டு முக்கிய கதாபாத்திரங்களோடு இந்த திரைப்படம் முடிவு தெரியாது நிறைவு பெருகிறது. பெரிதான கதை, கதை திருப்பம், தேவையற்ற வசணம், இசை என எந்த திணிப்பும் இந்த திரைப்படத்தில் இல்லை. திரைப்படத்தின் நீளத்தில் வெறும் 22 நிமிடங்கள் மட்டுமே வசணமும், காட்சிகளில் வரும் தொலைக்காட்சி பாடல்கள் மட்மே இசையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் என்னடா இது என எழுந்து போக நினைத்தால் காட்சிகளில் வரும் இடங்கள் (குளிர்காலத்தில் பனிவிழும் இஸ்தான்புல் நகரம்) சிறு சிறு பொருட்கள், அது உணர்த்தும் குறியீடுகள், முகமது மற்றும் யூசுப் இருவரின் இயல்பான நடிப்பு என அனைத்தும் நம்மை நகரவிடாமல் செய்கிறது. அந்த காட்சிகள் அனைத்தும் தனிமையை உணர்த்தி அந்த தனிமை உணர்விற்குள் நம்மையும் இழுத்துச் செல்கிறது.

 
பாரம்பரியம் மற்றும் மேற்கத்திய கலாச்சார இவற்றை தராசு தட்டில் சமமாக வைத்திருக்கும் நாடு துருக்கி. அந்நாட்டின் நிலவும் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், நகரமயமாதல், வேலையில்லா திண்டாட்டம், இவற்றோடு அங்கு வசிக்கும் இருவரின் தனிமையும் அந்நியப்படுதலையும் இந்த திரைப்படம் சுட்டிக்காட்டினாலும் ஒரே அறை, ஒரே குடியிருப்பு, ஒரே அலுவலகம், ஒரே வகுப்பறை இருந்தும் சிலரிடம் முக காட்டாது நான் எனது என தன்னை மட்டும் சார்ந்து வாழும் தற்போதைய நமது கொண்டாட்ட வாழ்கையோடும் அது பொருந்திப் போகிறது. என்றுமே தனிமை ஒரு சாபக்கேடு, தனிமை ஒரு சாத்தான், தனிமை ஒரு நோய். அது பீடிக்காதவர்கள் எவருமே இல்லை. அதை உணர இந்த திரைப்படத்தை காணத் தவறாதீர்கள். 


Uzak
(Distant)
Written & Directed by - Nuri Bilge Ceylan
Cinematography - Nuri Bilge Ceylan
Art - Adhan Sachin
Year - 2002
Country - Turkey
Language - Turkish