மனைவி - இல்லாள்.



னை - வீடு, வி- விளங்கச் செய்பவள் மனைவி. இல் - இல்லம், ஆள் - ஆள்பவள் இல்லாள். திருமணம் என்ற பந்தத்திற்கு பின்பு ஒரு ஆணின் வாழ்க்கையில் அவனுக்கு துணையாக அடுத்த தலைமுறைக்கு ஆதாரமாக இடைப்பட்ட சொந்தமாக நுழைந்து இறுதிவரை தொடரும் பந்தமாக மாறுபவளே மனைவி. அதனால்தான் எல்லா சமூகத்திலும் மனைவி என்பவள் மேம்பட்டவளாக கருதப்படுகிறாள். 

அவள் செய்கிற எல்லாவறிற்கும் வெகுமதி கொடுங்கள், அவளைப்பற்றி நரக வாசலிலும் புகழ்ந்து பேசுங்கள் என்கிறது பைபிளின் நீதிமொழி.



யாரும் யாரையும் சார்ந்திருக்க தேவையில்லாத வாழ்க்கைமுறையை நோக்கி நாம் நகரத் தொடங்கினாலும் இல்வாழ்க்கை இல்லாத சமுதாயம் மேம்பாடு அடைவதில்லை. அந்த இல்வாழ்க்கைக்கு இனிய இல்லாள் அவசியம். இல்லாள் இல்லையெனில் இல்லை ஒரு ஆள். வள்ளுவரும் இல்லறவியலாக  வாழ்க்கைத் துணைநலம் என தொகுத்ததற்கும் அதுவே காரணம். அதே வள்ளுவர் தனது மனைவி வாசுகியின் மறைவை தாங்காது அவரைப்பற்றி புகழ்ந்து நான்கு வரி பாடல் ஒன்றையும் இயற்றியிருக்கிறார். திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்குவரி பாடல் இதுவே எனவும் சொல்லப்படுவதுண்டு.

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு

அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள். இது மனைவியின் மறைவிற்கு பிறகு எழுதியிருந்தாலும் வாழும் காலத்தில் இந்த பாடலின் புரிதல் இருந்தால் இல்லறம் சிறக்கும். அதுபோலவே சங்ககாலத்தில் வாழ்ந்த சேரமன்னன் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்பவனும் தனது மனைவி இறந்ததும் அவளது பிரிவைத் தாங்காது இனி எப்படி வாழ்வேனோ? என புறநானூற்றில் ஒரு பாடலை இயற்றியிருக்கிறான்.

கோட்டம்பலம் என்பது கேரள மாநிலத்தில் உள்ள ஒரு ஊர். தற்போது அது அம்பலப்புபுழை என அழைக்கப்படுகிறது. அந்த ஊரில் இந்த சேர மன்னன் இறந்ததால் அவனுக்கு கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்ற பெயர் வந்தது. கரூர் அமாராவதி ஆற்றுப்படுகையில் கண்டெடுக்கப்பட்ட சில பழங்கால நாணயங்கள் ஒன்றில்  மாக்கோதை என பொறிக்கப்பட்ட நாணயம் ஒன்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சேர மன்னனின் மனைவி பெருங்கோப்பெண்டு என்பவள் இளம் வயதில் இறந்து போனாள். அவளது பிரிவைத் தாங்காமல் அவன் பெருந்துயரம் அடைந்தான். "வேந்தே காதலிபால் கொண்ட காதலினும் நாடும் கடமையையும் பெரிதாகும்" என சான்றோர்கள் அவனை தேற்றினாலும் தன் மனைவியின் மீது கொண்ட அன்பால் மனைவி என்ற பந்தத்தின் பெருமையாக இந்த பாடலை அவன் இயற்றினான். 

யாங்குப்பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே

 பொருள்:

காதலியைப் பிரிவதால் நான் படும் துன்பம் எவ்வளவு பெரிதாயினும் அது என் உயிரை அழிக்கும் வலிமை இல்லாததால் அத்துன்பம் வலிமையற்றது. கள்ளிச்செடிகள் வளர்ந்த களர் நிலமாகிய இடுகாட்டில் வெட்டவெளியில் தீயை உண்டாக்கும் விறகுகளால் அடுக்கப்பட்ட ஈம நிகழ்வில் படுக்கையில் வைக்கப்பட்டிருக்கும் என் மனைவி மேலுலகம் சென்று விட்டாள் ஆனால் நான் இன்னும் வாழ்கிறேனே! இந்த உலகத்தின் இயற்கை இதுதானா?