சாவோ கடற்கரையின் இளநங்கை.


ரு நாட்டைப் பற்றி தெரிந்துகொள்ள அந்நாட்டு வரலாறு போதும், தொட்டுக்கொள்ள பூகோளம் இருந்தால் சரி. ஆனால் அந்நாட்டில் வசிக்கும் மக்களைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நல்ல இலக்கியங்கள் தேவைப்படும். அதற்கு மொழிபெயர்ப்பு பெரிதும் உதவும். அதனால்தான் மொழிபெயர்ப்பு ஒரு கலையாகவும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் தனித்தன்மை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த புத்தகத்தின் மூலம் வியட்நாம் மக்களின் பரந்த இதயத்தையும் கலாச்சார மேம்பாட்டிற்காக அவர்கள் மேற்கொண்ட போராட்டத்தையும் தெரிந்து கொள்ளலாம். 

வியட்நாம் என்றதும் கம்யூனிசமும் அந்த கம்யூனிசத்திற்கு எதிராக அமேரிக்கா கட்டவிழ்த்த காரணமற்ற போரும், கொரில்லா தாக்குதலும், நேபாம் குண்டுகளும், அந்த நிர்வாண சிறுமியும் நினைவுக்கு வரும். அதனைத் தவிர்த்து இந்த புத்தகம் வியட்நாமில் அமேரிக்க படையின் ஆக்கிரமிப்பிற்கு முன்பு பிரெஞ்சு ஆதிக்கத்தின் போது வடக்கு பகுதியில் நிகழ்ந்த போராட்டத்தை கதைக்களமாக கொண்டிருக்கிறது. வியட்நாமில் கம்மியூனிசம் பரவத் தொடங்கிய காலத்தோடும் அது பயணிக்கிறது. 

குழந்தை பருவத்திலேயே அநாதையாகிவிட்டவள் ஹாவ். சிறு சிறு வீட்டுவேலைகள் செய்து வளரும் அவள் பிரசவ பேறுகால பணிவிடை செய்யும் வேலையில் கெட்டிக்காரியாக இருக்கிறாள். தன் நிலையையும் மறந்து தூய உள்ளம் கொண்ட மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஹானான் என்பவனை காதலித்து கைப்பிடிக்கிறாள். ஹாவ் தனது முதல் குழந்தையை பிரசவிக்கும் நேரத்தில் அவனது கணவனை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு புரட்சி செய்ததாக காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைக்கின்றனர். நாட்கள் நகர ஹாவ் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து தன் கணவனுக்காக காத்திருக்கிறாள். இந்நிலையில் பிரெஞ்சு இராணுவம் வியட்நாமின் வடக்கு கடற்கரை பகுதியில் நுழைகின்றனர். இராணுவத்தின் துணையுடன் கூலிப்படையினர் அங்கிருக்கும் மக்களை அடித்து உதைத்து துன்புறுத்தி பொருட்களை சூரையாடி பெண்களை வன்புணர்ச்சி செய்கின்றனர். இதில் குழந்தை பிறந்து மூன்றே மாதமான ஹாவும் சில மிருகங்களின் வன்புணர்சிக்கு ஆளாகிறாள்.

நடந்ததை கெட்ட கனவாக மறக்க நினைக்கும் அவள் தன் குழந்தை மற்றும் கணவனுக்காக வாழ நினைக்கிறாள். சிறையிலிருந்து தப்பித்துவரும் அவளது கணவன் நடந்ததை அறிந்து அவளை தேற்றுகிறான். தமது குழந்தையை வளர்ப்பதில் கவனத்தை செலுத்தவும் நாட்டின் விடுதலைக்காக சிறிதேனும் பாடுபடவும் அவளை வேண்டிக் கொள்கிறான். நாட்கள் நகர அவர்களது இல்வாழ்க்கை இனிதே கழிகிறது. அந்த மகிழ்வில் இரண்டாவது குழந்தையை அவள் வயிற்றில் சுமக்கிறாள். தனது வேலை நிமிர்த்தமாக ஹாவின் கணவன் அவளை மறுபடியும் பிரிந்து செல்கிறான். தனது கணவனின் வேண்டுதலுக்கு இணங்க அவள் கம்யூனிச இயக்கத்தின் சிறு குழுவில் இணைகிறாள். ஒரு நாள் அவளுக்கு போராட்ட தாக்குதலில் தன் கணவன் இறந்த செய்தி கிடைக்கிறது. தனக்கிருந்த பலமான ஆறுதலையும் இழந்த அவள் துடித்துப்போகிறாள். இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தையையும் அவள் பெற்றெடுக்கிறாள். தன் கணவன் இறந்த துயரம் ஒருபுறம், தன் நாடு அந்நியர்களில் கையிலிருக்கும் அவலம் ஒருபுறம், தன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் கடமை ஒருபுறம் இவற்றிற்கிடையில் ஹாவ் ஒரு சாதாரண பெண்ணைப்போல வாழ்ந்தாளா? அல்லது சரித்திரத்தில் இடம்பெற்றாளா? என்பதுதான் இந்த சாவோ கடற்கரையின் இளநங்கையின் கதை. 

இலக்கிய நயத்தோடு சொல்லப்பட்ட ஒரு பெண்ணின் கதைதானே என்று இந்த புத்தகத்தை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. மாற்றாக ஆக்கிரமிப்பிற்கு உள்ளான ஒரு நாட்டின் அவலத்தையும் அதற்கு எதிராக அந்நாட்டு மக்களின் போரட்ட குணத்தையும் அதனோடு தொடர்புடைய அவர்களின் வீரத்தையும் இந்த புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த புத்தகம் இன்பியல் என சொல்லக்கூடிய வகையில் ஆனந்தமாக முடிந்தாலும் அதனை வாசிக்கும் நமக்குள் ஏதோ ஒருவித சோகம் தழுவிக்கொள்வதை தவிர்க்க இயலவில்லை. அந்த சோகத்தோடு இந்த புத்தகத்தில் வரும் கதை மாந்தர்கள் அனைவரும் (மாமனாராக இருந்தாலும் தான் பெற்ற மகளாக கருதி ஹாவுடன் பல இன்னல்களுக்கிடையே கூடவே வாழ்ந்து இடையில் இறந்துபோகும் அந்த குறுந்தாடி கிழவன் உட்பட) மனதில் தங்கிவிட இந்த சாவோ கடற்கரையின் இளநங்கையுடன் அவர்களை சந்தியுங்கள். 

📎
  • சாவோ கடற்கரையின் இளநங்கை
  • பூ-டக்-ஐ
  • தமிழில்
  • சு. பாலவிநாயகம்
  • அலைகள் வெளியீட்டகம்