பசுமையான நினைவுகள்.

96 எல்லோர் மனதிலும் புகுந்து ராமையும் ஜானுவையும் தேட வைக்க, 86 76 66 என எந்த வருடத்தை திரும்பிப் பார்த்தாலும் காதலின் நினைவுகள் பசுமையானதே. ஒரு விருட்சம் போல பரந்து விரிந்து கிளை பரப்பியிருக்கும் அதன் இலைகள் என்றும் உதிர்ப்பதே இல்லை. அதுபோல அழகான பசுமையான நினைவுகளைக் கொண்ட ஒரு உண்மை காதல் கதைதான் இந்த திரைப்படம் Under The Hawthorn Tree.



கலாச்சார புரட்சியின் இறுதிக்கட்டத்தில் மாவோவின் கட்டளைப்படி இளைஞர்கள் கிராமங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல வழியுறுத்தப்பட சீனாவின் ஹுபியா என்ற மாகாணத்திலிருக்கும் ஜிப்சிங் என்ற கிராமத்திற்கு ஒரு குழுவோடு ஜாங் ஜிங் குய் என்ற பெண்ணும் செல்கிறாள். கிராமத்திலிருப்பவர்கள் ஒவ்வொருவரும் அந்த குழுவிற்கு உதவி செய்ய அவள் புவியியல் படிக்கும் லாவோ சான் என்பவனது வீட்டில் தங்க வைக்கப்படுகிறாள். இளைஞன் லாவோ சானின் பேச்சும் நடத்தையும் செயலும் ஜாங் ஜிங் குயுவை கவர அவனை காதலிக்கத் தொடங்குகிறாள். இருவரும் காதலால் இணைய நாட்கள் நகருகிறது. ஜாங் ஜிங் குயு வேலை முடிந்து தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கிறாள். 

காதலியின் பிரிவால் தவிக்கும் லாவோ சான் அவளைத்தேடி அவளது ஊருக்குச் சென்று அடிக்கடி சந்தித்து வருகிறான். நாளடைவில் இவர்களது காதல் ஜாங் ஜின் குயுவின் வீட்டிற்குத் தெரிய வருகிறது. கணவனை பிரிந்து வாழும் ஜாங் ஜிங் குயுவின் தாயர் அவளது வயதையும் எதிர்காலத்தையும் நாட்டில் நிழவும் சூழலையும் கருத்தில் கொண்டு அவர்களது காதலுக்கு தடை போடுகிறார். சிறிது காலத்திற்கு அவளை சந்திக்கக் கூடாதென லாவோ சானிடம் வாக்குறுதியையும் பெறுகிறாள். காதலர்கள் பிரிந்த நிலையில் இருவரும் தனித்தனியாக நினைவுகளோடு வாழத் தொடங்குகின்றனர். வருடங்களும் ஓடித் தொலைகிறது. 

தொலைந்த வருடங்களில் லாவோ சானுக்கு தெரியாமல் லுக்குமியா என்ற நோய் அவனுக்குள் வளர்கிறது. ஜான் ஜின் குயு கல்லூரியில் பட்டம் பயில்கிறாள். இவர்கள் இருவரும் பல வருடங்களுக்கு பின்பு ஒரு நாள் சந்தித்து மகிழ்கின்றனர். ஒரே அறையில் தங்கும் நிலையிலும் கண்ணியமாகவே நடந்து கொள்கின்றனர். சில நாட்களில் லாவோ சானுக்கு தனக்கிருக்கும் நோய் தெரியவர ஜாங் ஜின் குயுனை விட்டு விலகுகிறான். மீண்டும் காதலர்கள் பிரிந்த நிலையில் மேலும் சில வருடங்கள் தொலைகிறது. நினைவுகள் மட்டும் தொடர்கிறது. 

ஜாங் ஜிங் குயு தனது பட்டப் படிப்பை முடித்து ஆசிரியாக பணிபுரிகிறாள். ஒரு நாள் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் அவளுக்கு அவசர செய்தி வருகிறது. அதனைக் கேட்டு மருத்துவமனைக்கு ஓடிச் செல்லும் அவள் அங்கு கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கும் லாவோ சானை காண்கிறாள். படுக்கையில் கண்மூடிக் கிடக்கும் அவனுக்கு அருகில் சென்று அழுதபடியே நான்.... ஜிங் குயு.... நான் .... ஜிங் குயு என உச்சரிக்கிறாள். அதனை கேட்கும் லாவோ சானின் கண்களில் நீர் வடிய, அவனது படுக்கைக்கு மேலே ஒட்டப்பட்டிருக்கும் லாவோ சானும் ஜாங் ஜிங் குயுவும் இணைந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை நோக்கி முன்னேரியபடி அமைதியுடன் திரை மெல்ல இருள்கிறது. 


சீனாவைச் சேர்ந்த Ai Mi என்பவர் எழுதிய Hawthorn Tree Forever என்ற புத்தகத்தை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப் பட்டிருக்கிறது. தன் நண்பனான ஜிங்கின் வாழ்க்கை கதையை அவர் அந்த புத்தகத்தில் எழுத்துக்களாக படைத்திருந்தார். 

இந்த திரைப்படத்தின் பலம் அதன் எதார்த்தமும், எழுபதுகளில் சீனாவும், ஒளிப்பதிவும், இசையும் எனலாம். அதைவிட காதலர்களின் முக பாவனைகளே இந்த திரைப்படத்தின் கூடுதல் பலமாக இருக்கிறது. குறிப்பாக ஜாங் ஜிங் குயுவிற்கும் லாவோ சானுக்கும் ஆரம்பத்தில் காதல் ஏற்படும் காட்சிகள், காதலர்களாக மருத்துவமனையில் இருவரும் பிரியும் காட்சி, லாவோ சானுக்கு தங்க மீனை பரிசளிக்கும் காட்சி, இறுதிக்கட்ட காட்சி என சொல்லிக் கொண்டே போகலாம். இடுக்கிய கண்களுக்குள் வெளிப்படும் அந்த உணர்சிகளே காதலின் நினைவுகளை மீட்டுச் செல்கிறது. இது ஒரு காதல் கதைதான் என்றாலும் சீனாவின் கலாச்சார புரட்சியின் சாதக பாதகங்களையும் திரைப்படம் தொட்டுச் சொல்கிறது.

இந்த திரைப்படத்தின் தலைப்பிலிருக்கும் Hawthorn Tree என்பது மலைப் பிரதேசங்களில் வளரும் ஒரு வகை மரமாகும். சீனாவில் இந்த மரம் ஜப்பான் முற்றுகையின் போது அதில் இரத்தம் சிந்தியவர்களால் வளர்கிறது என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த திரைப்படத்தில் ஆரம்ப காட்சியில் ஜாங் ஜிங் குயு அந்த கிராமத்திற்கு நுழையும் போது மலையில் தனித்திருக்கும் அத்தகைய மரத்தை முதன் முதலாக காண்பதாக அமைக்கப் பட்டிருக்கிறது. பிறகு காதலர்கள் இந்த மரத்திற்கு அடியில் சந்திப்பதாவும், திரைப்படத்தின் இறுதியில் இறந்த லாவோ சானின் சாம்பல் அந்த மரத்திற்கு அடியிலே புதைக்கப்படுவதாகவும், அவனது நினைவாக இன்று வரை அந்த கிராமத்திலிருக்கும் மரத்தை காண ஜாங் ஜிங் குயு வந்து போவதாகவும் திரைப்படம் முடிக்கப்பட்டிருக்கிறது. திரைப்படம் நெடுக இந்த மரம் ஒரு உருவகமாக வந்து போகிறது. இதில் காட்டப்படும் அந்த பசுமையான மரத்தைப் போலவே காதலின் நினைவுகளும் இருக்கிறது. அற்புதமான உணர்வுள்ள இந்த திரைப்படத்தை நிச்சையம் காணத் தவறாதீர்கள். 



Under The Hawthorn Tree
Directed by - Zhang Yimou
Written by - Yin Lichuan, Gu Xiaobai
Based on - Hawthorn Tree Forever (Ai Mi).
Music - Qigang Chen
Cinematography - Zhao Xiaoding
Year - 2010
Country - China
Language - Mandarin.