Taandav - ருத்ர தாண்டவம்.

ற்றவர்களைக் காட்டிலும் அதீத ஏளனப் பார்வை இவர்கள் மீது விழுந்தாலும், சமீபத்தில் நாமறிந்த சில தற்கொலை செய்திகள் காவல் துறையில் இருப்பவர்களின் மீது சற்று அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக அடிமட்ட காவலர்களின் மீது நம் கவனம் திரும்பியிருக்கிறது. சுய சிந்தனை மற்றும் தன்னிச்சையாக செயல்படும் தன்மையற்ற வேலை, அதிகப்படியான வேலை நேரம், இப்படித்தான் பிழைக்க வேண்டும் என்ற வரையறை, உயர் அதிகாரி, மேல் அதிகாரி, தலைமை அதிகாரி, உயர்மேல்தலைமை அதிகாரி என எல்லா பாண்டேக்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதிலுக்கு பொறுப்பாகும் நிலை, இடமாற்றம், உறவுகளின் பிரிவு, அரசியல் தலையீடு, மற்றும் பொதுமக்களிடம் இருக்கும் அந்த சமூகப் பார்வை இவைகளைச் சார்ந்த மன உளச்சல்களே காவலர்களின் அத்தகைய தற்கொலை செயலுக்கு காரணங்களாக சொல்லப்படுகிறது. அதிலும் திருவிழாக்கள், பண்டிகை கொண்டாட்டங்கள், அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள், கலவரங்கள், இயற்கை பேரிடர்கள் போன்ற நேரங்களில் அவர்களின் நிலை சற்று கவலைக்கு உறியதே. அப்படிப்பட்ட நிலையிலிருக்கும் காவல் துறையைச் சார்ந்த ஊழியர் ஒருவரின் இறுக்கமான மனநிலையை இந்த குறும்படம் அழகாக எடுத்துக்காட்டுகிறது. 


மும்பையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணிபுரிந்துவரும் தலைமை கான்ஸ்டபிளான தம்பேல் என்பவருக்கு அந்த நாள் இனிமையாக அமையவில்லை. தனது மகளின் பள்ளி சேர்க்கைக்கு செல்ல முடியாத அவரிடம் அவரது மகள் பேச மறுக்கிறாள். அதே கோபத்தில் வீட்டில் அவரது மனைவியும் முகத்தை திருப்பிக் கொள்கிறார். இதனிடையில் தான் பணிபுரியும் காவல் நிலையத்தில் ஒரு சோதனையில் கைப்பற்றிய பணத்தை பங்கிடுவதில் சக ஊழியர்களுடன் வெறுப்பு ஏற்படுகிறது. தனது கடமை மற்றும் நேர்மையினால் சக ஊழியர்களின் கேலிப் பேச்சிற்கு ஆளாகும் நிலையும் அவருக்கு ஏற்படுகிறது. இத்தகைய மோசமான மனநிலையில் தம்பேல் அன்றிரவு நிகழும் கணபதி விஷார்ஜன் என்ற பண்டிகைக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகிறார். பண்டிகை கொண்டாட்டங்களில் வெளிப்படும் இசையும் சப்தமும் இரைச்சல்களும் அங்கிருக்கும் வண்ண விளக்குகளின் ஒளியும் தம்பேலின் இரத்தத்தை சூடேற்றி இன்னும் அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. மேலும் அந்த பண்டிகை கொண்டாட்ட தருணத்தில் கலந்து கொண்ட இருவருக்குள் வாக்குவாதம் நிகழ்கிறது. அதனை தீர்க்கும் பொருட்டு அவர்கள் காவலரான தம்பேலை அனுக, தம்பேலின் மனநிலை இந்தமுறை அதீத அழுத்தத்திற்கு உட்படுகிறது. அந்த நிலையில் அடங்காத கோபத்தில் தம்பேல் தன்னிடம் இருக்கும் ரிவால்வரை கையில் எடுக்கிறார். அதற்குபின் என்ன நிகழ்கிறது என்பதை குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

 📎
  • Taandav
  • Written and Directed by - Devashish Makhija
  • Cinematography - Swapnil S. Sonawane
  • Country - India
  • Language - Hindi
  • Year - 2016