பூமியின் முகவரி.


பூமியின் முகவரி என்ன?

பூமாதேவி, பூமிகா, பூமிநாதன், பூமிபிரியன், பூமிநேசன் என்ற பெயரில் இருக்கும் இந்த பூமியில் வாழும் நபர்களின் முகவரியைக் கேட்டால் தெரியுமோ தெரியாதோ... 

நம்பர் 6, 
விவேகானந்தர் தெரு, 
துபாய் குறுக்கு சந்து, 
துபாய் மெயின் ரோடு, 
துபாய்... 

-என பார்த்திபன் கணக்காக  சொல்லிவிடலாம். ஆனால் பூமிக்கே முகவரி கேட்டால்!... 

அப்படி எதுவும் இருக்கிறதா என்ன? 

ஆம்...நாம் வாழும் பூமிக்கும் முகவரி இருக்கிறது. வாருங்கள் அந்த சுவாரசிய முகவரியைத் தேடிப் போகலாம்.

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது கோல்கள் சூரியனை சுற்றுகின்றன. பூமிக்கு மட்டுமல்லாமல் மற்ற எட்டிற்கும் எனைய துணைக்கும் சூரியனே ஆதாரம். நாமெல்லாம் சூரிய குடும்பம் - சூரிய வம்சம் என ஆறாம் வகுப்பிலேயே படித்திருப்போம். பிறகு வந்த காலங்களில் சூரியன் ஒரு நட்சத்திரம் என்றும், சூரியனைப் போலவே பல கோடி நட்சத்திரங்கள் வானில் இருப்பதாகவும் அறிந்திருப்போம். தூக்கம் வராதபோது மொட்டை மாடிக்கு சென்று வானத்தை வெறிக்க ஒரு புள்ளியாகத் தெரியுமே! அந்த நட்சத்திரங்களை வயது, பருமன், வெளிப்புற வெப்பம், நிறம், அது அமைந்துள்ள இடம் இவற்றை வைத்து ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தி வைத்துள்ளனர். அதன்படி சூரியன் ஒரு நடுத்தர வயதுள்ள நட்சத்திரம். அதன் நிறம் ஆரஞ்சு. அதன் பருமன் பூமியை விட பல பல மடங்கு பெறியது என கணக்கிட்டு அதனை ஜி2வி நட்சத்திரம் என வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். பூமிக்கு இந்த சூரியனே ஆதாரம் சூரிய குடும்பம் சூரிய வம்சம்  என முன்பே பார்த்தோம் அல்லவா! அதன்படி பூமி Care Of ஜி2வி.

இந்த ஜி2வி வகை சூரியனுக்கு அருகில் உள்ள கோல் புதன். அதற்கு  அடுத்து இருப்பது வெள்ளி. அதைத் தாண்டி முன்றாவது இடத்தில் இருந்து கொண்டு பூமி சூரியனை சுற்றி வருகிறது. ஆக சூரியனிடமிருந்து பூமி இருப்பது மூன்றாவது சுற்றுப் பாதையில் அல்லது மூன்றாவது வீதியில்..... நிற்க மன்னிக்கவும் சுற்றுக.

மறுபடியும் மொட்டைமாடிக்கு வருவோம். இங்கிருந்து வானத்திலிருக்கும் நட்சத்திரங்களை பார்க்க அது புள்ளியாகத் தெரிவது போல அங்கிருந்து பார்த்தால் நமது சூரிய குடும்பமும் புள்ளியாகவே தெரியும். இப்படி ஒரு புள்ளி அளவிற்கு நம்மால் பார்க்கும் தொலைவில் இருக்கும்  நட்சத்திர கூட்டங்களை நட்சத்திர நகர் என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். 

அதனையும் தவிர்த்து நம்மால் பார்க்க இயலாத தொலைவில் பல நட்சத்திரங்கள் அடங்கிய நட்சத்திர நகர்கள் (Star City) வானில் இருக்கின்றன. சுமார் 40000 கோடி நட்சத்திரங்களைக் கொண்ட இதைத்தான் அண்டம் என்கின்றனர். இந்த அண்டம் ஒரு தீபாவளி தரைச் சக்கரம் போல விண்வெளியில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. அவ்வாறு சுற்றும் அண்டத்தை ஆகாய கங்கை என அழகாக அழைக்கின்றனர். 

மேலும் விண்வெளியில் கேட்பாரின்றி சுற்றும் ஆகாய கங்கை என்ற அண்டம் ஒன்றோடு முடிவில்லாமல் பல கோடிகள் என்ற அளவிற்கு கூட்டம் கூட்டமாக இருக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் லோக்கல் குருப் என குறிப்பிடுகின்றனர். 

இந்த லோக்கல் குருப்களும் கணக்கில்லாது விண்வெளி முழுவதும் பரவியிருக்கின்றன. இவைகள்  மொத்தமும் சேர்ந்து பிரபஞ்சம் என அழைக்கப்படுகிறது. 

ஸ்ஸ்..ஸப்பா...டா கண்ணைக் கட்டுகிறதா? போகட்டும் விடுங்கள்.
ஒருவரின் முகவரி அவர் இருக்கும் இடத்தை வைத்து தெரு, ஊர், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு என தீர்மானிக்கப்படுகிறது. அவ்வாறு தலை சுற்றும் அளவிற்கான இந்த தகவல்களை வைத்து பார்க்கையில் பூமியின் முகவரி 

பூமி
Care of ஜி2வி
மூன்றாவது வீதி
நட்சத்திர நகர்
ஆகாய கங்கை
லோக்கல் குருப்
பிரபஞ்சம்

என்பதாக இருக்கும். 

அதெல்லாம் சரி!. இந்த பூமியின் முகவரியை வைத்து என்ன செய்வது? இது எதற்கு பயன்படும்? 

அன்புள்ள,

பூமிக்கு வியாழன் எழுதுவது. இங்கும் மனிதர்கள் யாரும் இல்லை அதனால் சுகம். அங்கு மனிதர்கள் இருக்கிறார்கள் நீ சுகமா?. சென்ற முறை சுற்றுச் சூழல் சரியில்லை என்றும் மூச்சுவிடவே சிரமப் படுவதாகவும் சொன்னாய். இப்போது எப்படி இருக்கிறது?...
.....
.....
இத்யாதி...
.....
.....
இத்யாதி...
.....
இமயமலையை கேட்டதாக கூறவும். பசிபிக் பெருங்கடலை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். மற்றவை சுற்றி நெறுங்கி வரும்போது நேரில்.

இப்படிக்கு
வியாழன்

- என பூமிக்கு எதாவது கடிதம் வந்து போகுமா? என்றால், பூமியின் முகவரி வேற்று கிரகவாசிகளுக்கு நிச்சையம் பயன்படும். 

கணக்கிட முடியாத நட்சத்திர கூட்டங்களில் இருக்கும் கோல்களில் ஏதேனும் ஒன்றிலாவது வேற்று கிரகவாசிகள் என்ற ஏலியன்கள் வசிக்கிறார்கள் என்ற நம்பிக்கை ஆராய்ச்சியாளர்களுக்கு இருக்கிறது. ஒருநாள் அவர்கள் நம்மைத் தேடி வரக்கூடும். அவர்களுக்கு இந்த முகவரி உதவும். அதனை கருத்தில் கொண்டு நம் பங்கிற்கு வேற்று கிரகவாசிகளைத் தேடி 1972 ஆம் ஆண்டு நாசா அனுப்பிய ஆளில்லா விண்கலமான பயனீர்- 10 ல் பூமியின் இந்த முகவரியை அவர்கள் குறியிட்டு வைத்துள்ளனர். மேலும் நேரா போயி ரைட் எடுத்து லெப்ட் திரும்பி ஒரு யூ டேர்ன் போட்டா சூரிய குடும்பம் வரும்... அதில் நுழய... வாசல்ல புளூட்டோன்னு ஒரு சின்னப் பையன் இருப்பான்... அவனைத் தாண்டி நெப்டியூன் யுரேனஸ்ன்னு கடந்து போனால் சனி வருவான்... சனி சாவகாசம் வேண்டாம் பொல்லாதவன்... அவனையும் தாண்டி வியாழன் செவ்வாய் என போனால்... நீல கலரில் 23 1/2 டிகிரியில் ஒருத்தன் சாய்ந்து சுத்திகிட்டு இருப்பான்... அவந்தான் பூமி... என பூமிக்கு வரும் வழியை தங்கத் தகடுகளில் ஒரு மேப் போல வரைந்து அந்த விண்கலத்தில் அனுப்பியிருக்கின்றனர். 

அதனைக் கொண்டு ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதைப் போல பறக்கும் தட்டிலோ அல்லது ஸ்டார் வார்ஸ் விண்கலத்திலோ யாராவது வந்து இறங்கி உங்களிடம்... எக்ஸ்யூஸ் மீ பாஸ்... இந்த அட்ரஸ் எங்கிருக்குதுன்னு சொல்ல முடியுமா?...என கேட்டால். ஆமாங்க இதுதான்... இதுதான் நீங்க தேடி வந்த பூமி... வெல்கம் டு எர்த்... என வரவேற்று உபசரியுங்கள். பாவம் அவர்கள் வெகு தூரத்திலிருந்து வந்திருக்கக் கூடும்.