இந்தியப் பயணக் கடிதங்கள்.


புதிய உலகை தேடியவர்கள், நாடு பிடிக்கும் ஆசையுடையவர்கள், கலை ஆன்மீகம் வியாபாரத்தில் நாட்டம் கொண்டவர்கள் என இவற்றை பொருட்டு வரலாற்றில் கடற்பயணம் மேற்கொண்டவர்களின் இலக்கு இந்தியாவை நோக்கியே இருந்தது. அதற்கு இந்தியா தகுதியுடையதாகவே இருந்தது. அவர்களில் பிரிட்டிஷ் பேரரசின் கிளையாக வியாபாரத்திற்காக நுழைந்த ஆங்கிலேயர்களால் மட்டுமே ஐந்தாறு நூற்றாண்டுகள் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருக்க முடிந்தது. இந்தியா ஒரு வளமிக்க நாடு, அதுமட்டுமல்லாது நமது அடிமையும் கூட, அங்கு சென்றால் ஒரு மகாராஜா அல்லது ஒரு மகாராணி போல செல்வச் செழிப்போடு வாழலாம் என்ற எண்ணம் அக்காலகட்டதில் எல்லா ஆங்கிலேயர்களிடம் இருந்தது. அதனை கருத்தில் கொண்டு இந்தியாவை நோக்கி கடற்பயணத்தை தொடர்ந்த ஆங்கிலேயர்கள் ஏராளம் இருந்தனர். அவர்களில் எலிசா ஃபே என்ற பெண்மணியும் ஒருவர்.


இங்கிலாந்தில் பிறந்த எலிஸா ஃபே பாரிஸ்டர் பட்டம் பெற்ற தன் கணவர் ஆன்டனி ஃபேயுடன் இணைந்து 1779 ஆம் ஆண்டு அதே அந்த கனவுடன் இந்தியாவை நோக்கி பயணத்தை தொடங்கினார். முதலில் தரைவழி மார்கமாக பிரெஞ்சு தேசம் மற்றும் ஐரோப்பாவின் மலைப்பிரதேசங்கள் என பயணத்தை தொடர்ந்த அவர்கள் இத்தாலியின் லெகான் துறைமுகத்திலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக அலெக்ஸாண்டிரியாவையும் அங்கிருந்து நைல் நதியின் வழியாக கெய்ரோவையும் அடைந்தனர். அந்நகரில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தால் அவர்களது உடைமைகள் பறிபோக பயணமும் தடைபட்டது. சிறுதுகாலத்திற்கு பின் அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் இந்தியாவின் கள்ளிக்கோட்டையை அடைந்தனர். கள்ளிக்கோட்டையில் ஹைதர் அலியின் தளபதியால் அவர்கள் சிறைபிடிக்கப்பட ஜசக் என்ற யூத வணிகனின் முயற்சியால் விடுதலை பெற்று இறுதில் 1780 ஆம் ஆண்டு மெட்ராஸ் (இன்றைய சென்னை) வழியாக கல்கத்தாவில் காலடி எடுத்து வைத்தனர்.

கல்கத்தாவிலிருக்கும் உயர்குடியைச் சேர்ந்த ஆங்கிலேயர்களுடன் இவர்களுக்கு நட்பு ஏற்பட புதுவித வாழ்க்கை தொடங்கியது. தன் கணவர் அதீத புத்திசாலி என்பதில் மாற்று கருத்து இல்லாத எலிசாவிற்கு ஆட்சியாளர்களுக்கு அடிபணியாத அவரது தொழில்முறை கடமையில் சற்று பிணக்கம் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியது. தன் கணவனைப் பிரிந்த நிலையில் எலிசா இங்கிலாந்திற்கு திரும்பிச் செல்லும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட மீண்டும் கடல் வழியே தன் பயணத்தை தனியே தொடங்கும் நிலையும் உருவானது.

எலிசா ஃபே இந்தியாவிற்கு புறப்பட்ட நாளிலிருந்து பயண அனுபவங்கள் தனது சகோதரி மற்றும் நண்பர்களுக்கு கடிதமாக எழுதுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இக்கட்டான சூழ்நிலையிலும் தனது கடிதம் எழுதும் பழக்கத்தை அவர் விடாமல் தொடர்ந்தார். தன் கணவனை பிரிந்த நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு மறுமுறை பயணப்பட்ட நிலையிலும் அவர் கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தார். அவரது பயண கடிதங்கள் தொகுக்கப்பட்டு 1908 ஆம் The Original Letters From India என்ற பெயரில் வெளிவர அதன் தமிழ் மொழியாக்கம்தான் இந்த புத்தகம் இந்தியப் பயணக் கடிதங்கள்.

யுவான் சுவாங், ஃபாஹியான், இபின் பாதுஷா, என இந்த உலகை சுற்றிவந்தவர்களின் பயண அனுபவங்கள் பெரும் வரலாறாக இருக்க, அவற்றோடு ஒப்பிடுகையில் எலிசா ஃபேயின் அனுபவங்கள் மிகச் சிறியது என்றாலும்  இந்தியாவில் ஆங்கிலோயர்களின் வருகைக்கு பின்பான சில நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக சென்னை மற்றும் கல்கத்தாவில் வாழ்ந்த மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்களை நுட்பமாக அறிந்துகொள்ள முடிகிறது. எலிசா ஃபே தான் கண்முன் கண்ட நிகழ்வுகளை சில கருத்துகளுடன் அவரது கடிதங்களில் முன் வைத்திருக்கிறார். தனது சொந்த துயரங்களையும் பயணத்தில் நிகழ்ந்த சின்னஞ்சிறிய நிகழ்வுகளையும், தான் சந்தித்த மனிதர்களின் குணநலன்களையும், எளிமையான நடையுடன் மெல்லிய வர்ணனையாக மிகையில்லாத உண்மையாக இலக்கியத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

இந்த புத்தகம் முதல்பாகத்தில் 23 கடிதங்களையும் இரண்டாம் பாகத்தில் 8 கடிதங்களையும் கொண்டிருக்கிறது. 1779 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி தொடங்கும் கடிதம் 1815 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த இடைப்பட்ட காலங்களில் எல்லா நாட்களிலும் கடிதம் எழுதப்பெறாவிட்டாலும் அக்காலகட்டத்தில் ஒரு நாட்குறிப்பு போலவும் தோற்றமளிக்கிறது.

இலக்கியங்களில் நாட்குறிப்பு இலக்கியம், கடித இலக்கியம், பயண இலக்கியம் என்ற வகைகள் உண்டு. எலிசா ஃபேயின் இந்தியப் பயண கடிதங்களான இந்த புத்தகம் அந்த மூன்று வகையினையும் உள்ளடக்கி முப்பெரும் கலவையாக இருக்கிறது. சுவாரசிய வாசிப்பிற்கு மட்டுமல்லாமல் வரலாற்றிற்காகவும் அடுத்த தலைமுறைக்காகவும் பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகம் இது.

📎

  • The Original Letters From India
  • Eliza Fay
  • Amazon
  • தமிழில்
  • இந்தியப் பயணக் கடிதங்கள்
  • அக்களூர் இரவி
  • சந்தியா பதிப்பகம்
  • விலை - 200.00