கிள்ளி வளவன்.



முற்கால சோழர்களில் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் கிள்ளி வளவன். ஒருமுறை இந்த கிள்ளி வளவன் குறுநில மன்னனான மலையமான் திருமுடிக்காரி என்பவனை போரில் வென்று அவனது குழந்தைகளுக்கு மரண தண்டனையை விதித்தான். அந்த தண்டனையை எதிர்த்து கோவூர் கிழார் என்ற புலவர் ஒரு பாடலை இயற்ற (புறநானூறு - 46) அதனில் மனமுறுகி பிறகு தண்டனையை ரத்து செய்தான். அதுபோல் தற்போதைய கரூர் நகரையும் அவன் போரில் வென்று அங்கு கொடுமையான வரியையும் விதித்தான். தம்பி இந்த GST நமக்கு சரிபட்டு வராதுப்பா, ஒரு அரசன் இப்படித்தான் இருக்க வேண்டும் என வெள்ளைக்குடி நாகனார் என்ற புலவர் ஒரு பாடலை இயற்ற (புறநானூறு - 46) பிறகு அதனையும் வாபஸ் பெற்றான். தன்னைப்பற்றி புகழ்ந்து பாடி பரிசு பெற வரும் புலவர்களை அவன் நிமிர்ந்துகூட பார்க்காமல் நிலத்தையே பார்த்து வந்தான். அவ்வாறு கிள்ளி வளவன் காலத்தில் வாழ்ந்த #Mee Too -வில் சிக்காத பல புலவர்களுக்கு அவன் செருக்கு மிக்கவனாகவே இருந்தான். ஆனால் அவர்களின் அறிவுறைகளைக் கேட்டு தன்னை நெறிப்படுத்திக் கொண்டு சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தான். ஆட்சியாளர்களுக்கும் முடிவு என்பது நிச்சயம் உண்டு என்பதற்கேற்ப கிள்ளி வளவன் பாண்டிய மன்னனுடன் நடந்த போரில் குளமுற்றம் என்ற இடத்தில் போர்க்களத்திலேயே இறந்து போனான். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்ற பெயரோடு இருக்கும் அவனைப்பற்றி சங்க இலக்கியங்களில் ஒன்பதிற்கும் மேற்பட்ட புலவர்கள் பதினெட்டிற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கின்றனர். அவற்றுள் கிள்ளி வளவனின் செருக்கினைப் பற்றியும் அவனது ஆட்சிமுறை, வீரம், விவேகம், விசுவாசம், படைத்திறன் கொடைத்திறன் பற்றியும், இறுதியாக அவன் வீழ்ந்ததும் தங்களது இரங்களையும் குறிப்பிட்டுள்ளனர். அந்த பாடல்களின் மூலமாகவே கிள்ளி வளவனைப் பற்றி நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அத்தகைய சிறப்புமிக்க கிள்ளிவளவன் கூட தனது புலமையால் இயற்றிய பாடல் ஒன்றும் சங்க இலக்கியத்தில் உள்ளது.

அந்த பாடல் 

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய ;  
பாணர்! காண்கிவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன  
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;  
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்  
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்
மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்  
அணிந்தோ? சேய்ந்தோ? கூறுமின் எமக்கே! 

கிள்ளி வளவன் இந்த பாடலை தன்னை ஒரு பாணனாக (பாணர்களைப் பற்றி முன்போ பார்த்திருக்கிறோம்) பாவித்து கொண்டு, தனது நண்பனும் வேளாளர் குல தலைவனுமான சிறுகுடி கிழான் பண்ணன் என்பவனது வீட்டை நோக்கி பசிக்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது கிடைக்குமா என்ற நோக்கத்தில் தன்னைப் போன்று பலருடன் செல்வதாக கற்பனை செய்து, அவனை புகழ்ந்து பாடியிருக்கிறான். 

பொருள்

நான் வாழும் நாளையும் சேர்த்து பண்ணன் வாழ்வானாக. பாணர்களே இந்த பாணனின் சுற்றத்தாரின் துன்பத்தை பாருங்கள். புதிதுபுதிதாக பழங்கள் பழுத்திருக்கும் மரங்களில் உள்ள பறவைகள் அவற்றை உண்பதால் உண்டாகும் ஒலியினை நாங்கள் கேட்கிறோம். காலம் தவறாமல் மழை பொழியும் இடத்திலிருக்கும் எறும்புகள் தம் முட்டைகளைத் தூக்கிக் கொண்டு மேட்டு நிலத்திற்கு வரிசையாக செல்வதைப் போல கையில் சோற்றுடன் கூட்டம் கூட்டமாக செல்லும் சிறுவர்களை காண்கிறோம். அதனை கண்டபிறகு பசியும் பண்ணனை காணும் ஆவலும் அதிகரிக்க, பசி என்னும் நோயைத் தீர்க்கும் அந்த மருத்துவனின் வீடு அருகில் இருக்கிறதா? அல்லது தொலைவில் உள்ளதா? எங்களுக்கு கூறுங்கள். 

சங்க இலக்கியம் - புறநானூறு
பாடல் - 173
பாடியவர் - கிள்ளிவளவன்
திணை - பாடண் திணை
துறை - இயல் மொழி 

சிறு செய்தி

தற்போது ஸ்ரீரங்கத்திலிருக்கும் கோவிலில் உள்ள கிளி மண்டபத்தை இந்த கிங் கிள்ளிதான் கட்டியதாக ஒரு குறிப்பும் இருக்கிறது.