மெய்பொருள் காண்பது.

ம்பிக்கைக்கு குழந்தைத்தனமான மனது வேண்டும் என பார்த்தோம். ஆனால் எல்லாவற்றையும் அந்த குழந்தைத்தனத்தோடு அனுகினால் தலைக்குமேல் பிரச்சனை ஆகிவிடும். தற்போது நிகழ்வதை எடுத்துக் கொள்வோமே! இன்று உண்மையை விட பொய்யும் வதந்தியும் மிக எளிதில் எல்லோரிடமும் பரவி விடுகிறது. தந்தியை விட வேகமானது வதந்தி என சொல்வார்கள். தந்தி என்ற பழைய தொலைதொடர்பு சாதனம் சற்று உருமாறி இன்று நவீன வடிவம் பெற்று ஊடகங்கள் சமூக வலைத்தளங்களாக இருக்கிறது. அவைகளின் புண்ணியத்தில் நம்மை வந்தடையும் செய்திகளை நாம் உண்மை எது? பொய் எது? என்? எதற்கு? எப்படி? என்பதையெல்லாம் அலசிப்பார்க்காமல் நம்பிவிடுகிறோம். மேலும் அது பரவ நாமும் ஒரு துணையாகி விடுகிறோம். இணைய வழிக்கு மட்டுமல்லாமல் இயல்பான வழிக்கும் இது பொருந்தும். அதாவது யார் என்ன எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடுதல் தவறானது. அதிலிருக்கும் நம்பகத் தன்மையை ஆராய்ந்து பார்ப்பதே சிறந்தது. பெரும் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் இல்வாழ்க்கை நடத்துபவர்களுக்கும் இது மிகவும் அவசியம். சுருக்கமாகச் சொன்னால் இன்றைய நிலவரப்படி எப்பொருள் வாய்கள் அதிகம் அதனால் அவற்றின் மீதெல்லாம் நம்பிக்கை வைக்க மெய்பொருள் காண்பதே சிறந்தது. இல்லை என்றால் கந்தர்வசேனன் கதைபோல் ஆகிவிடும்.


ஒரு செய்தி எப்படி வதந்தியாகிறது? அது எவ்வாறு பரவுகிறது? அதிலிருக்கும் நம்பகத் தன்மை எத்தகையது? மெய்பொருள் காண்பது என்பது என்ன? இதனை விளக்கும் கந்தர்வசேனன் கதைக்குள் நுழைவோம் வாருங்கள்.

ஒரு ஊரில் பரந்தாமன் என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். அநியாயத்திற்கு மட்டுமல்லாமல் நியாயத்திற்கும் நல்லவனான அவன் ஒருநாள் தன் தலையை மொட்டையடித்து மீசையை மழித்துக்கொண்டு கருப்பு உடையில் சோகமாக காட்சியளித்தான்.

பரந்தாமனை இதற்குமுன் இப்படி காணத அவனது நண்பர்களுக்கு அவனது தோற்றம் ஆச்சரியமாக இருந்தது. சரி! எதாவது காரண காரியம் இருக்கும் என அவனை அனுகி அவனது நண்பர்கள் கேட்க பரந்தாமன் ஓ! வென ஒப்பாரி வைத்து அழத் தொடங்கினான். அவனை தேற்றிய நண்பர்கள் மீண்டும் அவனிடம் விசாரிக்க... கந்தர்வசேனன் செத்துட்டான்'... என சொல்லிவிட்டு பரந்தாமன்  அழுவதை தொடர்ந்தபடியே இருந்தான்.

கந்தர்வசேனன் பரந்தாமனுக்கு மிகவும் வேண்டிய சொந்தம் போலும், பாவம் அவன் இறந்து துக்கத்தினால்தான் அவன் இப்படி இருக்கிறான் என நினைத்து அவனது நண்பர்களும் துக்கத்தில் பங்கெடுத்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் பரந்தாமனைப் போன்று அவர்களும் மொட்டையடித்து மீசையை மழித்துக்கொண்டு கருப்பு உடைக்கு மாறினர்.

கந்தர்வசேனன் இறந்த செய்தி அலைவரிசையில் அதாவது காத்துவாக்கில் ஊர் முழுவதும் பரவியது. ஊர் மக்களும் அந்த துக்கத்தில் பங்கெடுக்க ஒரே நாளில் அந்த ஊர் மட்டுமல்லாமல் நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மொட்டைத் தலை, கருப்புத்துணி, கந்தர்வசேனன் இறந்த துக்கமாக காட்சியளித்தது.

அந்த நாளில் நகர்வலம் வந்த அமைச்சர் அதனை கவணித்து மக்கள் ஏன் சோகமாக இருக்கிறார்கள்? என விசாரிக்க, கந்தர்வசேனன் இறந்துவிட்டான் என்ற செய்தி அவருக்கும் கிடைத்தது.....அடடா! ஊரே ஒருவன் இறந்த துக்கத்தை அனுசரிக்க நாம் மட்டும் என்ன விதிவிலக்கு.....என அமைச்சரும் மொட்டையடித்து மீசையை மழித்துக் கொண்டு கருப்புத் துணியை உடுத்திக் கொண்டார்.

அமைச்சரின் புண்ணியத்தில் இந்த செய்தி அரண்மனைக்கும் எட்டியது. ஊர் மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? நாம யோகா செய்வோம் என்றில்லாமல் அந்த நாட்டு ராஜாவும் கந்தர்வசேனனுக்காக மொட்டையடித்து மீசையை மழித்து கருப்பு துணியை உடுத்திக் கொண்டு அன்றிறவு அந்தப்புரத்திற்கு நூழைந்தார். 

மொட்டைத் தலையுடன் அந்தப்புரத்திற்குள் நுழைந்த ராஜாவை பார்த்ததும் மகாராணிக்கு அதிர்ச்சியாக இருந்தது.....என்னங்க என்னாச்சி? ஏன் இந்த கோலம்.... என பதற்றத்துடன் மகாராணி விசாரிக்க..... கந்தர்வசேனன் செத்துட்டானாம், ஊரே துக்கத்துல இருக்கு அதுல நானும் பங்கெடுத்துக்கிட்டேன்...... என சொல்லிவிட்டு ராஜா முகத்தை சோகமாக வைத்துக் கொண்டார்.

.....சரி! கந்தர்வசேனன் யாரு? அது உங்க அப்பாவா? அண்ணனா? சொந்த? பந்தமா? எதுக்காக நீங்க மொட்டையடிக்கனும்?...... என மகாராணி திரும்ப கேட்டதும் அப்போதுதான் ராஜாவிற்கு மெய்பொருள் வேலை செய்யத் தொடங்கியது. ......அட! ஆமா. கந்தர்வசேனன் யாரு? நான் ஏன் மொட்டையடிச்சிக்கனும்....என அவர் அமைச்சரைக் கூப்பிட்டு விசாரிக்கத் தொடங்கினார். அமைச்சருக்கும் இந்த கேள்விக்கு பதில் தெரியாததால் ஒரு பெரும் படையே கந்தர்வசேனன் யார் என்பதைத் தேடி ஊருக்குள் சென்றது. ஊரில் உள்ளவர்களுக்கும் கந்தர்வசேனன் யார்? எனத் தெரியாததால் கடைசியாக இதற்கெல்லாம் ஒரே சாட்சியாக இருக்கும் பரந்தாமனை இழுத்துக்கொண்டு அந்த பெரும்படை அரண்மனைக்கு விரைந்தது.

அடுத்தநாள் அமைச்சரவை கூட மொட்டைத்தலையுடன் இருக்கும் ராஜாவிற்கு முன்பு பரந்தாமனை நிறுத்தி கந்தர்வசேனன் யார்? என விசாரித்தனர். கந்தர்வசேனன் என்ற பெயரைக் கேட்டத்தும் அதுவரை அமைதியாக இருந்த பரந்தாமன் வாய்விட்டு அழத் தொடங்கினான்..... சரிப்பா, நடந்தது நடந்து போச்சி, எல்லாரும் ஒருநாள் போய் சேரவேண்டிய ஆளுங்கதான், போகட்டும் விடு கந்தர்வசேனன் யாரு?..... என அவையிலிருந்தவர்கள் ஆவலுடன் விசாரிக்க, பரந்தாமன் அழுவதை தொடர்ந்தபடியே அவர்களுக்கு பதிலளித்தான்

......கந்தர்வசேனன் நான் ஆசை ஆசையா வளர்த்த கழுதை - ங்க....