மீண்டும் ஒரு காஃபி கதை.



காஃபி குடிக்கும் தருணங்களைப் போன்றே காஃபியின் கதைகளும் சுவையானதே. அதனால் மீண்டும் ஒரு காஃபி கதையுடன் வந்திருக்கிறேன். இந்த முறை இந்தியாவிற்குள் காஃபி நுழைந்த கதையை உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கிறேன். அந்த சுவாரசிய கதை பாபா புதன் என்பவரது தாடிக்குள் ஒளிந்திருக்கிறது. அந்த சுவாரசியத்தை குட்டித் தகவலாக பார்க்கலாம் வாருங்கள்.

எத்தியோபியா நாடுதான் காஃபியின் தாயகம், அங்கு வசித்த கால்டி என்பவர்தான் காபியா அராபிகா செடியிலிருந்து காஃபியை கண்டுபிடித்ததாக பார்த்தோம். இந்த காஃபி எத்தியோபியாவைத் தாண்டி அரபுதேசம் முழுவதும் பரவியது. அரபுதேசங்களில் காஃபி கடவுளின் செடியாக மத ரீதியாகவும் வர்த்தகமாகவும் பார்க்கப்பட காஃபி விதைகளை அனுமதியின்றி பயிரிடவும் நாட்டைவிட்டு எடுத்துச் செல்ல தடையும் அப்போது அங்கு நிலவியது. 1690 வாக்கில் இந்தியாவிலிருந்து மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்ட பாபா புதன் (Baba Budan) என்பவருக்கு அரபுதேசத்தில் காஃபியின் சுகந்தம் முதன்முதலாக கிடைத்தது. அடடா! அற்புதம் என அதன் சுவையிலும் புத்துணர்விலும் மயங்கிய அவருக்கு இது நிரந்தரமாக கிடைத்தால் தேவலாம் என்ற ஆசையும் தோன்றியது. அந்த ஆசையில் அவர் புனித பயணம் சென்று திரும்பும் வழியில் ஏமன் நாட்டிலிருந்து ஏழு காஃபி விதைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது தாடிக்குள் ஒளித்துக்கொண்டு இந்தியா திரும்பினார். ஏழு என்ற எண் இஸ்லாமிய மார்க்கத்தில் புனித எண்ணாக கருதப்பட்டதால் அது ஆண்மீகச் செயலாக இருக்குமென அவர் கருதினார். அந்த விதைகளை அவர் கர்நாடகாவில் உள்ள சந்திரகிரி மலையில் தனது இடத்தில் முதன்முதலாக பயிரிட்டு வளர்த்தார்.

கர்நாடகாவில் சந்திரகிரி மலையில் உள்ள ஒரு பகுதி இன்றும் பாபா புதன் கிரி (Baba Budan Giri) என அவரது பெயராலே அழைக்கப்பட அதனைத் தொடர்ந்து 1840 -ல் காஃபி கர்நாடகாவின் பிற பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், தமிழ்நாட்டில்  நீலகிரி மற்றும் சேர்வராயன் மலைப் பகுதியிலும் பரவியது. ப்ரோடி என்ற ஆங்கிலேயரின் முயற்சியால் ஆந்திர மாநிலத்திற்குள்ளும் நுழைய, சீதோஷண நிலை மண் இவற்றை ஒப்பிடுகையில் தென்னிந்தியாவே இந்திய காஃபி உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. மேலும் உலக காஃபி சந்தையில் தனக்கென தனித்துவத்தையும் அது தக்கவைத்துள்ளது.