முதல் ஆசிரியர்.



ங்களின் முதல் ஆசிரியர் யார்? (இந்த கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்)

சாதனை மனிதர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கு பின்னால் ஒரு ஆசிரியர் கட்டாயம் இருப்பார். அது அவர்களின் முதல் ஆசிரியராகவும் இருக்கக்கூடும். இந்த புத்தத்தில் வரும் கதாபாத்திரமான அல்டினாய் என்பவளுக்கு கிடைத்த தூஷ்யன் என்ற ஆசிரியரைப் போல.

இன்றைய நிலவரப்படி கல்வி ஒரு செல்வம் கொழிக்கும் வியாபாரம் வக்கத்தவனின் வாய்க்கு அறிதாக கிடைக்கும் பொருளாதாரப் பொரி அது. அத்தகைய கல்வியை இருளிலிருந்தும் அறியாமையிலிருந்தும் சாதி சமய தீண்டாமையிலிருந்தும் அடக்குமுறை சர்வாதிகாரத்திலிருந்தும் இந்த நிலைக்கு உயர்த்தியதற்கு பின்னால் பல கதைகள் இருக்கக்கூடும். இந்த புத்தகத்தின் கதையைப் போல.

இந்த புத்தகத்தின் கதை புரட்சிக்கு பிந்தைய சோவியத் நாட்டின் களத்தில் பயணிக்கிறது. ரஷ்யா மற்றும் சீனாவின் எல்லையில் இருக்கும் குர்க்குரீ என்ற கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு பிரபல விஞ்ஞானி மற்றும் கல்வித்துறை அறிஞரான அல்டினாய் சுலைமானவ்னா என்ற பெண்மணி சிறப்பு விருதினராக அழைக்கப்படுகிறார். அந்த கிராமத்தில் முதல் தலைமுறை கல்வி கற்றவர் என்ற பெருமை பெற்ற அவர் தனது உயர்கல்வி படிப்பிற்காக அந்த கிராமத்தைவிட்டு சென்றதற்கு பிறகு தற்போதுதான் அங்கு காலடி எடுத்து வைக்கிறார். அந்த கிராமமே விழாக்கோலமாக காட்சியளிக்க திடீரென ஏதோவொரு தடுமாற்றத்தில் குழப்ப நிலையில் அல்டினாய் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து ரயிலேறி செல்கிறார். அந்த விழாவிற்கு வந்த ஓவிய ஆசிரியரும் இலக்கியவாதியுமான இளைஞனுக்கு அல்டினாயின் பதற்றத்திற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது. அல்டினாயும் நகரத்திற்கு சென்றதும் தனக்கு ஏற்பட்ட குழப்ப நிலையை தன்னுடைய பால்யகால நினைவுகளுடன் வரலாறாக அந்த இளைஞனுக்கு கடிதம் எழுதுகிறார்.

படிப்பா? பள்ளிக்கூடமா? இதெல்லாம் எதுக்கு? என அலட்சியத்துடன் இருக்கும் கிராமத்திற்கு லெனினின் பற்றாளரும் கம்யூனிஸ்டுமான தூஷ்யன் என்பவர் வருகிறார். அந்த கிராமத்து மக்களின் புறக்கணிப்பையும் ஏச்சுக்களையும் தாங்கிக் கொண்டு அங்கிருக்கும் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்க நினைக்கிறார்.  புரட்சிக்கு பின்பு நிலப்பிரபுகள் விட்டுச் சென்ற ஊருக்கு ஒதுக்குப் புறமாக மலையின் உச்சியிலிருக்கும் பழைய குதிரை கொட்டகை ஒன்று அந்த கிராமத்தின் பள்ளிக்கூடமாக மாறுகிறது. பலரது எதிர்ப்புகளும் சவால்களும் ஒருபுறமிருக்க அவரிடம் பாடம் படிக்கும் குழந்தைகள் மட்டும் அவருக்கு துணையாக இருக்கின்றனர். அவர்களில் அல்டினாய் என்ற பெண்ணும் இருக்கிறாள்.

தாய் தந்தை இருவரையும் இழந்த அநாதையான சிறுமி அல்டினாய் உறவினரின் வீட்டில் கொடுமையின் இடையில் வாழ்ந்து வருகிறாள். தூஷ்யனின் வருகை அவளது வாழ்க்கையை மாற்ற கல்வியின் வழியே வேறொரு உலகை காண்கிறாள். தூஷ்யனும் மற்றவர்களைக் காட்டிலும் தனி அக்கரையில் அல்டினாயை கவணிக்க அவளது குடும்பத்தில் நிகழும் குழப்பங்களிலிருந்து அவளை மீட்டு பல இன்னல்களுக்கிடையே மேற்படிப்பிற்காக நகரத்திற்கு அனுப்பி வைக்கிறார். அல்டினாய் மற்றும் மற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அந்த கிராமத்திற்கே தூஷ்யன் முதல் ஆசிரியராக விளங்குகிறார். இத்தனைக்கும் தூஷ்யன் படிப்பறிவு இல்லாத ஒருவர், பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையும் இலக்கணமும் அறிந்திராதவர். இருந்தும் அவரால் ஒரு அற்புதமான உலகை படைக்க முடிந்திருக்கிறது. சொல்லப்போனால் அந்த கிராமத்தில் நடைபெற்ற பள்ளி திறப்புவிழாவிற்கு தூஷ்யனே தலைமை தாங்கியிருக்க வேண்டும் பெருமையும் கவுரவமும் அவரே அடைந்திருக்க வேண்டும். ஆனால் சாதாரண மனிதர்களை நாம் மதிக்க எப்போது மறந்தோம் என்ற லெனினின் வாக்குப்படி அவரை அந்த ஊர் மறந்தே இருந்தது. அத்தகைய தனது முதல் ஆசிரியரைப் பற்றியே அல்டினாய் அந்த கடிதம் மூலம் 'நம்மால் மறக்க முடியாத புனித நினைவுகளைக் கொடுக்கும் சில பாதைகளில் நடந்து வரும்பொழுது, அழிக்க முடியாத நம் அடையாளத்தைப் பதித்துவிட்டு வரக்கூடாதா?' என்ற ஏக்கத்துடன்  நினைவுகளாக அசைபோடுகிறார்.

முதல் ஆசிரியர்
சிங்கிஸ் ஐத்மாத்தவ்
தமிழில் - பூ. சோமசுந்தரம்
பாரதி புத்தகாலயம்

ஒரு சில புத்கங்களை வாசித்த பின்பு உள்ளுக்குள் புதைந்து எதையோ திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கும். ரஷ்யாவின் இலக்கிய மேதைகளில் குறிப்பிடத் தகுந்தவரான சிங்கிஸ் ஐத்மாத்தவ் (Chinghis Aitmatov) என்பவரின் அற்புத படைப்பான இந்த புத்தகமும் அதைத்தான் செய்கிறது. ஒரு சிறு குறுநாவலான இந்த புத்தகம் வாசித்த மயக்கத்தில் மனதிற்குள் புகுந்து இந்த கேள்வியை கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அது!

உங்களின் முதல் ஆசிரியர் யார்?