ரஹ்மானின் சூஃபி இசை பாடல்கள்.


கோட்பாடுகள், மதிப்புகள், சடங்குககள், வழிமுறைகள் இவற்றை உள்ளடக்கிய இஸ்லாம் மதத்தின் இறைநிலை நடைமுறையே சூஃபியிசம் எனப்படும். இந்த சூஃபியிசத்தை பின்பற்றி அவற்றை மக்களிடையே போதிப்பவர்கள் சூஃபிக்கள் என அழைக்கப்பட அவர்களில் ரூமி, அஃபேசு, புல்லெஷா, குவாஜா குலாம் பரீத் போன்றவர்கள் தங்களின் கவிதை ஆக்கங்களால் இறைநிலையை அடைந்தனர். இவர்களது படைப்புகளுக்கு இசை வடிவம் கொடுக்க அதுவே சூஃபி பாடல்களாயின. ஆரம்பகாலகட்டத்தில் பாரசீகம் என அழைக்கப்பட்ட பகுதியில் மென்மையான தாளத்துடன் துருக்கி நாட்டின் நே (Ney) என்ற புல்லாங்குழல் இசையில் இந்தகைய சூஃபி பாடல்கள் சமயச்சடங்குகளில் மட்டும் பாடப்பட்டு வந்தன. பிறகு வந்த காலங்களில் மொராக்கோ ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சாமா (Sama) என்ற பெயரில் ஆடலுடன் இணைந்து புகழடைந்து ஆசிய பகுதிக்குள் நுழைந்தன.



தெற்கு ஆசியாவில் இஸ்லாம் மதம் தாக்கமுள்ள பகுதிகளான இந்தியா பாகிஸ்தான் வங்கதேச நாடுகளில் நுழைந்த இந்த சூஃபி பாடல்கள் கவ்வாலி (Qawwali) என்ற புதிய வடிவத்தை பெற்றன. இதில் புல்லாங்குழலுக்கு பதில் ஆர்மோனியம் முதன்மை கருவியாக மாற பாகிஸ்தானைச் சேர்ந்த நுசுரத் பதே அலிகான் என்பவரே கவ்வாலி என்ற சூஃபி பாடல்களை  பிரபலப்படுத்தியவராக கருதப்படுகிறார். அவரைத் தொடர்ந்து ப்ரி பிரதர்ஸ் அஜிஸ் மியான், அம்ஜத் ஃபிரீட், ரஹத் ஃபதே அலிகான், ஹாஜி முகமது யேசான் ஃபரிடி போன்றவர்களும் தற்காலத்தில் அபிடா பர்வின், சானம் மாவி, அசார் ஷா, போன்றவர்களும் சூஃபி பாடல்களை சாதாரண மக்களிடமும் கொண்டு சேர்ந்தனர். அவர்களில் ரஹ்மானும் ஒருவர்.

தேடுதல் குணம் புது முயற்சி இவற்றை எப்போதும் தன்வசம் வைத்திருக்கும் ரஹ்மான் ஃபிஸா என்ற திரைப்படத்தில் முதன்முதலாக ஒரு சூஃபி பாடலை படைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜோதா அக்பர், டெல்லி 6, ராக்ஸ்டார் போன்ற திரைப்படங்களிலும் தனது பாணியில் சில பாடல்களை கொடுத்திருந்தார். மதப் பற்றையும் தாண்டி தற்போது பல மேடை நிகழ்ச்சிகளில் ரஹ்மான் இத்தகைய பாடல்களை பாட தவறுவதேயில்லை. ரஹ்மான் மூலமாகவே சூஃபி பாடல்கள் என்றால் என்ன? அதன் இசை வடிவம் எத்தகையது? என்ற இன்னபிற தகவல்கள் எல்லாம் தெரியவர அவரது பாடல்களோடு தங்களுக்கும் அதனை அறிமுகப்படுத்துகிறேன்.

பாடல்களைக் காண