தெய்வம் நின்று கொல்லும்.



பொருமையும் நிதானமும் இருந்தால்..... வேலை வெட்டி - வெட்டி வேலை இல்லாத நேரம் கிடைக்கப் பெற்றால்..... சிந்தனையையும் கனவையும் தள்ளிவைத்துவிட்டு.....கோபப்பட்டு என்னை திட்டாமல்.....அமைதியாக இந்த திரைப்படத்தை பார்க்கக் கடவாய்.....நிச்சையம் உனக்கு பிடிக்கும்.
- என்ற அன்பான வேண்டுதலுடன் இந்த திரைப்படத்தின் டிவிடிக்களை நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். அடடா! அறிமுகமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே! என்ற ஆவலுடன் பார்க்கவும் நேர்ந்தது.


அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழியை அடிப்படையாகக் கொண்ட லியோ டால்ஸ்டாயின் God sees the Truth, But Waits என்ற நாவலே இந்த திரைப்படத்தின் அடிப்படையாக இருக்கிறது. திரைப்படத்தின் கதைப்படி 1997 ஆம் வருடம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவைச் சேர்ந்த ஹொரேசியா சோமோரோஸ்டிரோ என்பவள் தான் செய்யாத குற்றத்திற்காக முப்பது வருடங்கள் சிறை தண்டனைப் பெற்று அதிலிருந்து விடுதலையாகி வெளிவருகிறாள். இடைப்பட்ட காலங்களில் தன் கணவன் இறந்துவிட்ட செய்தியும் தன் மகன் தொலைந்துபோன செய்தியும் அவளுக்கு கிடைக்கிறது. தன் மகள் ஒருத்தி மட்டும் மீதமிருக்கும் நிலையில் அவளை கண்டுபிடித்து அவளுடன் தங்கும் ஹோரேஸியா தன்னை செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பியதன் பின்னணியில் தனது முன்னால் பணக்கார காதலன் ரட்ரிகோ டிரினிடாட் என்பவன் இருந்ததாக அறிந்து கொள்கிறாள். இதற்கிடையில் ஆழும் வர்க்கத்திற்கும் நாட்டின் வரலாற்றிற்கும் கலங்கமாக இருக்கும் தொடர் கடத்தல் சம்பவத்தில் அவளது முன்னால் காதலன் தற்போது சிக்கிக் கொண்டிருப்பதையும் உணர்கிறாள். இருந்தபோதிலும் அவனை பழிவாங்கத் துடிக்கிறாள். பகல் முழுவதும் அமைதியான தாயாக இருக்கும் அவள் இரவில் தன் தூக்கத்தை கெடுத்து தக்க சந்தர்ப்பத்தை தேடி அலைகிறாள். ஒரு நடைபாதை வியாபாரி, மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒரு விபச்சாரி  மற்றும் கணவனால் கைவிடப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் இவளுக்கு உதவ, நாட்டில் நிலவும் சிக்கலான சூழ்நிலை மற்றும் தனது மனதில் பொதிந்த ஆராத ரணம் இவற்றிற்கிடையில் தன் முன்னால் காதலனை ஹோரேஸியா பழிவாங்கினாளா? இல்லையா? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.


இந்த திரைப்படம் முழுவதும் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாண்மையான கதை இரவிலே நிகழ, தெருக்கள், நடைபாதைகள், அறைகள், மரம், கிளைகள், பறவைகள், சுற்றுச்சூழல்கள், அங்கிருக்கும் பொருட்கள் என அனைத்தும் கருப்பு வெள்ளையில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. அவையனைத்தும் நினைவுகளாக, மனதின் மறுபக்கமாக, இருளின் நிறமாக, ஓவியமாக செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் ஐம்பது வயதை கடந்த ஒரு பெண்ணின் பழிவாங்கும் கதைதான் என்ற போதிலும் அரசாங்கத்தில் நிலவும் ஊழல்களையும், சமூக இழிவுகளையும், கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற வன்முறை நிகழ்வுகளையும் மனிதனின் இருண்ட மனதையும் மனோதத்துவத்தையும் தொட்டுச் செல்கிறது. Revealing the truth cleanses the soul உண்மையை வெளிப்படுத்தும் ஆத்மா சுத்தமாகிறது. The knife cuts both ways கத்தி இரண்டு வழிகளையும் வெட்டுகிறது என்பதை போதிக்கவும் அது தவறுவதில்லை.

இந்த திரைப்படத்தின் நீளம் சுமார் நான்கு மணிநேரங்கள். அது மொத்தம் மூன்று டிவிடிக்களை விழுங்கியிருக்கிறது. ஒரு மணிநேர திரைப்படங்களே நமக்கு சலிப்புத்தட்ட நான்கு மணிநேரங்கள் ஒரு திரைப்படத்தை அமைதியுடன் இருந்து பார்ப்பது என்பது பாகவதர் காலத்திற்கு சென்று திரும்புவதைப் போல் இருக்கும் என்ற பயத்தையும் ஓரங்கட்டி, இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான லாவ் டயஸின் (Lav Diaz) கருப்பு வெள்ளை காட்சிகளும், ஹொரேசியா சோமோரோஸ்டிரோவாக நடித்த சரோ சாண்டோஸ் கோன்ஸியோ (Charo Santos Concio) என்பவரின் நடிப்பும், திரையை விட்டு நகரவிடாமல் செய்கிறது. அது ஒரு நீண்ட நாவலை கண் இமைக்காமல் வாசிக்கும் அனுபவத்தை தருகிறது.

பொருமையும் நிதானமும் இருந்தால்..... வேலை வெட்டி - வெட்டி வேலை இல்லாத நேரம் கிடைக்கப் பெற்றால்..... சிந்தனையையும் கனவையும் தள்ளிவைத்துவிட்டு.....கோபப்பட்டு என்னை திட்டாமல்.....அமைதியாக இந்த திரைப்படத்தை நீங்களும் ரசியுங்கள் ...... நிச்சையம் உங்களுக்கும் பிடிக்கும்......




Ang Babaeng Humayo
(The Women Who Left)
Directed by - Liv Diaz
Written by - Liv Diaz
Cinematography - Liv Diaz
Country - Philippines
Language - Filipino
Year - 2016.