கண்ணிவெடி நிலம்.



போர்கள் உறங்கலாம் கண்ணிவெடிகள் உறங்குவதேயில்லை என்ற யுத்த கால பழமொழி உண்டு. அதன்படி எல்லா நாட்டு இராணுவத்திற்கும் பொதுவான ஆயுதமாகவும், எளிமையானதும், மலிவானதும், மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதுவுமான கண்ணிவெடிகள் என்ற மிதிவெடிகள் போர்கள் ஓய்ந்தாலும் அவைகள் என்றுமே ஓய்வதேயில்லை. 

இந்த உலகம் சந்தித்த முதல் உலகப்போரில் தொடங்கி இன்றைய சிரியா போர் வரை நிகழ்ந்த யுத்தங்களில் பயன்படுத்தப்பட்ட கண்ணிவெடிகளை கணக்கிட்டால் ஆளுக்கு அவர்களது காலுக்கு ஒன்றென இந்த உலகில் வாழும் மக்கள் தொகைக்கு சமமாக இருக்கும். அவ்வாறு பயன்படுத்தப்பட்ட கண்ணிவெடிகள் பல தங்களின் அழிக்கும் பணியை திறன்பட முடித்துக்கொண்டாலும் இன்னமும் இந்த பூமிக்கடியில் தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பவைகள் ஏராளம் இருக்கின்றன. உலகின் பல நாடுகளும் பொது அமைப்பு நிறுவனங்களும் கண்ணிவெடிகள் இல்லாத பூமியைக் காண அவற்றை தேடித்தேடி அழிக்கும் பணியில் இன்றளவும் ஈடுபட்டுக் கொண்டிருக்க அத்தகைய கொடுமையான ஒரு ஆயுதமான கண்ணிவெடிகளை அகற்றும் ஒரு குழுவின் கதைதான் இந்த திரைப்படம் அன்டர் சான்டட் (Under Sandet).


இந்த திரைப்படம் இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தை கதைக்களமாக கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் ஜெர்மனி நாடு டென்மார்க் நாட்டை ஆக்கிரமித்திருந்த சமயம் அந்நாட்டில் தங்களின் எதிரிகளை நுழைய விடமால் தடுக்க மேற்கு கடற்கரையோரம் சுமார் 1.5 மில்லியன் கண்ணிவெடிகளை பதித்து வைத்திருந்தது. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஜெர்மனி நாடு சரணடைய டென்மார்க் விடுதலை பெற்றது. மேலும் அந்நாட்டிலிருந்த ஜெர்மனி வீரர்களை யுத்த கைதிகளாக சிறைபிடிந்திருந்து. அவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட ஜெர்மனி வீரர்களில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேற்கு கடற்கரையில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் ஆபத்தான பணிக்கு அனுப்பட்டனர். அவர்களில் பலர் அந்தப் பணியில் தங்கள் உயிரையும் தியாகம் செய்தனர். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.


1945 ஆம் ஆண்டு மே மாதம் ஜெர்மனி ஆக்கிரமிப்பிலிருந்து டென்மார்க் விடுதலையடைகிறது. அந்நாட்டிலிருந்த இளம் ஜெர்மானிய வீரர்கள் பலர் யுத்த கைதிகளாக சிறைபிடிக்கப் படுகின்றனர். அவர்களின் ஒரு குழுவிற்கு கண்ணிவெடிகளை அகற்றும் பயிற்சியளிக்கப்பட்டு டானிஷ் சர்ஜென்ட் கார்ல் லியோபோல்ட் ராஸ்முஸன் என்பவரின் தலைமையில் மேற்கு கடற்கரைக்கு அனுப்பப்படுகின்றனர். மிகவும் கண்டிப்பானவரும்  நேர்மையானவருமான சர்ஜென்ட் ராஸ்முஸன் ஜெர்மனியின் மீதுள்ள வெறுப்புணர்வால் அந்த குழுவை சேர்ந்த இளம் வீரர்களுக்கு உணவு கூட வழங்காமல் கடுமையாக நடத்துகொள்கிறார். 

இதற்கிடையில் செபாஸ்டின் என்பவன் ஜெர்மன் வீரர்களின் அந்த குழுவிற்கு தலைமைதாங்க ஒரு மணி நேரத்திற்கு ஆறு கண்ணிவெடிகள் வீதம் மொத்தம் மூன்று மாதங்களில் இந்த பணியை முடித்தால் வீடு திரும்பலாம் என்ற வாக்குறுதியில் சர்ஜென்டின் கண்டிப்பையும் பசியையும் பொருட்படுத்தாது மேற்கு கடற்கரை மணலில் புதைக்கப் பட்டிருக்கும் கண்ணிவெடிகளை தங்களின் வெற்று கைகளால் அகற்றும் ஆபத்தான செயலை அவர்கள் மேற்கொள்கின்றனர். மேலும் உணவு பற்றாக்குறையாலும் நோய் தொற்றாலும் பாதிக்கப்படுகின்றனர்.

ஒருநாள் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் விபத்து ஒன்று நிகழ அந்த குழுவில் உள்ள வில்லெம் என்பவன் தன் கைகளை இழக்கிறான். பெரும் போராட்டத்திற்கு பின்பு அவனை மீட்டு இராணுவ மருத்துவமனையில் சேர்க்கும் சர்ஜென்ட் ராஸ்முஸான் ஜெர்மனி வீரர்களின் மீது சிறிது  அனுதாபப்பட்டு அவர்களுக்கான உணவிற்கு ஏற்பாடு செய்கிறார். மருத்துவமனையிலிருந்த வில்லெம் இறந்த செய்தியை மறைத்து மற்றவர்கள் மீது அவர் அன்பை காட்டத் தொடங்குகிறார்.

குழுவிலிருக்கும் செபாஸ்டியன் என்பவன் கண்ணிவெடிகளை விரைவில் கண்டறியும் எளிய சாதனம் ஒன்றை உருவாக்குகிறான் அதனை பயன்படுத்த சர்ஜென்ட் அனுமதிக்கும் வேலையில் மற்றொரு விபத்து நிகழ்கிறது. அதில் குழுவில் உள்ள இரட்டையர்களில் ஒருவனான வெர்னர் என்பவன் இறக்கிறான். அவனது சகோதரனுக்கு ஆறுதலளிக்கும் சர்ஜென்ட் ஜெர்மனி வீரர்களின் மீது இந்தமுறை அதீத அன்பை காட்டுகிறார்.

மேற்கு கடற்கரையின் ஒரு பகுதியிலிருக்கும் கண்ணிவெடிகள் முழுவதும் அகற்றப்படுகிறது. அந்த பகுதியில் தினமும் கால்பந்து விளையாட்டை தொடரும் சர்ஜென்டிற்கும் அந்த குழுவிற்கும் ஒருநாள் அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. ஆபத்தற்றது என கருதப்பட்ட அந்த பகுதியில் தவறுதலாக விடப்பட்ட கண்ணிவெடி ஒன்று வெடிக்க சர்ஜென்டின் வளர்ப்பு நாய் அதில் இறந்து போகிறது. அதனால் ஆத்திரமடையும் சர்ஜென்ட் ஜெர்மனி வீரர்கள் அனைவரையும் ஆபத்தற்ற அந்த பகுதியில் நடத்து சென்று சோதனை செய்யத் தொடங்குகிறார். மீண்டும் அவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார். 


நாட்கள் நகருகிறது, அந்த குழுவில் உள்ளவர்கள் தங்கள் பணியை முன்பை விட வேகமாகச் செய்கின்றனர். ஒருநாள் அந்த பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருத்தி தவறுதலாக கண்ணிவெடி பகுதிக்குள் நுழைய குழுவில் உள்ளவர்கள் அவளை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். அதில் இரட்டையர்களில் மீதமிருக்கும் ஒருவனான ஏர்ன்ஸ்ட் என்பவன் தன் உயிரையும் பொருட்படுத்தாது அவளை மீட்டு கண்ணிவெடியில் கால் வைத்து தற்கொலை செய்துகொள்கிறான். இந்த சம்பவத்தால் மனம் நெகிழும் சர்ஜென்ட் மீண்டும் அந்த குழுவினரோடு நெருங்கிப் பழகுகிறார்.

இதுவரை அகற்றப்பட்ட கண்ணிவெடிகள் அனைத்தும் எண்ணப்பட்டு இராணுவக் கிடங்கிற்கு அனுப்பும் பணி நடைபெறுகிறது. அதில் இந்தமுறை பெரும் விபத்து நிகழ குழுவில் உள்ள பலர் இறக்கின்றனர். அந்த குழுவில் செபாஸ்டியன், லூட்விக், ஹெல்முட் மற்றும் ரோடாஃப் என்ற நால்வர் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் அவர்கள் வேறொரு இடத்திற்கு மாற்றப்படுகின்றனர். சர்ஜெண்ட் ராஸ்முஸானுக்கும் அவரது மேலதிகாரிகளால் நெருக்கடி நிலை ஏற்படுகிறது. இருந்தும் அவர் குழுவில் மீதமிருக்கும் அந்த நால்வரை தனது பொறுப்பில் எடுத்து அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்ப முயற்சி செய்கிறார். சர்ஜெண்டின் முயற்சி வெற்றியடைந்ததா? அந்த நால்வரும் தங்களது வீட்டிற்கு சென்றார்களா? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.

War Movies என சொல்லக்கூடிய யுத்த சினிமாவில் இரண்டாம் உலகப்போரை பின்னணியாகக் கொண்ட இந்த திரைப்படம் போர்கள சண்டைக் காட்சிகளை தவிர்த்து சஜெண்ட் மற்றும் அவர் பொறுப்பிலிருக்கும் ஜெர்மனி வீரர்களின் மன ஓட்டத்தை அதாவது கதைமாந்தர்களின் மன ஓட்டத்தை மட்டுமே காட்டுகிறது. அதற்கு ஒளிப்பதிவும் இசையும் கூடுதல் பலம் சேர்க்கிறது. குழுவில் உள்ள ஜெர்மனி வீரர்கள் ஒவ்வொரு முறையும் கண்ணிவெடிகளை அகற்றும் வேளையில் அவர்களை விட அதீத பயம் நம்மையும் சூழ்ந்துக் கொள்கிறது. மேலும் திரைப்படத்தின் இறுதியில் உயிரோடு மிச்சமிருக்கும் அந்த நால்வரின் நிலை பரிதாபத்தையும் வரவழைக்கிறது. ஆபத்தான களம், எதார்த்தம், திக்திக் நிமிடங்கள், கொஞ்சம் வரலாறு என அற்புதமான உணர்வுள்ள இந்த திரைப்படத்தை தவறவிடாதீர்கள்.

Trailer 



UNDER SANDET
(Land of Mine)
Directed by - Martin Zandvliet
Music - Sune Marin
Cinematography - Camilla Hjelm Knudsen
Country - Germany & Denmark
Language - German & Danish
Year - 2015