காதலும் வீரமும்.



காதலும் வீரமும் சரிவர கலந்ததே சங்க இலக்கியங்கள். அதுவே பண்பாடாகவும் இருந்து வந்தது. இங்கு வீரத்தின் களம் போர்க்களமாகும். அந்த களம் புகும் அரசன் முதல் அடிப்படை குடிமகன் வரை அவர்களது வீரத்தையே சங்க இலக்கியங்கள் மெச்சுகின்றன. காதலை எடுத்துக் கொண்டாலும் அத்தகையதே. காதலும் ஒருவகை போர்க்களம்தான் மனம் புகும் போர்க்களம். அந்த களத்தின் வீர தீர செயல்களான ஊடல், கூடல், இவற்றோடு தமிழ் இலக்கணம் கூறும் கைக்கிளை (ஒருதலை காதல்), பெருந்திணை (பொருந்தா காதல்) என்பதை பற்றிய குறிப்புகளை எல்லாம் சங்க இலக்கியங்களில் காணலாம். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகள் பறவைகள் இவற்றிற்கு உண்டான காதலைப் பற்றியும் சங்க இலக்கியத்தில் சில குறிப்புகள் உள்ளன. அதற்கு முத்தொள்ளாயிரத்தில் வரும் இந்த பாடலே சாட்சி.


சேர சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றி 900+900+900=2700 பாடல்களாக பாடப்பட்டதே முத்தொள்ளாயிரம். 300+300+300=முத்தொள்ளாயிரம் என்பது முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர் ச.வையாபுரிப்பிள்ளையின் கருத்தாக இருக்கிறது. இவற்றுள் நூற்றைம்பது வெண்பாக்கள் மட்டுமே கிடைக்கப்பெற்ற நிலையில் அந்த முத்தொள்ளாயிரத்தில் வரும் இந்த பாடலில் யானை ஒன்றின் காதல் வேடிக்கையாக சொல்லப் பட்டிருக்கிறது. கூடவே சோழ மன்னன் கிள்ளிவளவனின் வீரத்தை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோழ நாட்டை ஆண்டுவந்த மன்னர்களில் ஒருவன் கிள்ளிவளவன் (கிங் கிள்ளியைப் பற்றி அடுத்த பகுதியில் விரிவாக பார்ப்போம்) அந்த கிள்ளிவளவனின் படையில் இருக்கும் ஆண் யானை ஒன்று போர்க்களத்திற்கு சென்று வெற்றியுடன் திரும்பி வருகிறது. போர்க்களத்தில் எதிரிநாட்டின் மதில் சுவர்களை முட்டி மோதி தகர்த்ததால் அதன் தந்தம் உடைந்திருக்கிறது. மேலும் போரில் இறந்த வீரர்களின் தலைகவசம் மற்றும் மன்னனின் மணிமுடி  இவற்றையெல்லாம் காலால் இடறி நடந்ததால் அதன் நகங்கள் தேய்ந்திருக்கிறது. இவையெல்லாம் வீரத்தின் அடையாளமாக இருந்தாலும் உடைந்த தந்தம் மற்றும் தேய்ந்த நகத்துடன் தன் துணையான பெண் யானையின் முன் செல்ல அது  வெட்கப்பட்டு தயங்கி மறைந்து நிற்கிறது. யானைக்கு தந்தம் மீசையல்லவா!. வேடிக்கையாக இருந்தாலும் அஃறிணை உயிர்களுக்கும் பொதுவான காதலையும் அதனோடு தொடர்புடைய வீரத்தையும் இந்த பாடல் அழகாக எடுத்துரைக்கிறது.

கொடிமதில் பாய்ந்திற்ற கோடு மரசர்
முடியிடறித் தேய்த்த நகமும் - பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு.

கொடி கட்டிய பகைவனின் மதில்மேல் பாய்ந்து அதனால் உடைந்த தந்தமும், போர்க்களத்தில் பகை அரசனின் கிரீடங்களை இடறியதால் தேய்ந்து போன நகமும் இவற்றோடு பெண் யானையின் முன்பு செல்ல வெட்கப்பட்டு கூடத்திற்கு வெளியே நின்றது கல்லைப் போன்று தோளை உடைய சோழனின் ஆண் யானை.