அயல்வெளி.



லைக்குமேல் வேலை சுற்றாத அலுவலக நேரங்கள், அவசரமற்ற பயண காத்திருப்புகள், உண்டது செரிக்காமல் புரளும் மண்ணுளிப் பாம்பு மதியவேளைகள், குடிக்க கடிக்க துணைகொண்டு சன்னலை நோக்கி நகரும் மஞ்சள் வெயில் மாலைப் பொழுதுகள், பெரும் வாசிப்பை தூக்க பிடிக்காத இரவுகள் என சில தருணங்களில் சிறுகதைகளை கையில் எடுப்பதென்றால் தனி சுகமே. அதிலும் வெளியில் புதியன தேடுதலாக வேற்றுமொழி சிறுகதைகளை வாசிப்பதென்றால் சொல்லவே தேவையில்லை. அவ்வாறு சமீபத்தில் கிடைத்த தருணங்களில் வாசித்து முடித்த ஒரு சிறுகதை புத்தகம்தான் அயல்வெளி.

இந்த புத்தகத்தில் வெவ்வேறு நாட்டை சேர்ந்த வெவ்வேறு மொழியைக் கொண்ட வெவ்வேறு எழுத்தாளர்களின் புகழ்பெற்ற சிறுகதைகள் தொகுப்பாக அடங்கியிருக்கிறது. இதிலிருக்கும்

1. சொர்கம் தொலைத்தவள் (யாவுஸ் எகின்சி - துருக்கி).
2. ரோகா (பாட்ரிக் கேம்பல் - அயர்லாந்து)
3. சாண்பிள்ளை (ஆலிஸ் மன்ரே - கனடா).
4. ஏற்றப்படாத விளக்குகள் (ஷெர்வுட் ஆன்டர்சன் - அமேரிக்கா).
5. ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல் (பெர்னாண்டோ அரம்புரு - ஸ்பெயின்).
6. மூங்கில் தண்டு (சாத் அல்சனெளசி - குவைத்).
7. காலிங்கனம் (ஹொராசியோ கிரோகா - உருகுவே).
8. அப்போலோ (சீமாந்தா இங்கோசி அடிசி - நைஜீரியா).
9. மிகப் பெரிய இறக்கைகளுடன் முது பெரும் கிழவன் (காபிரியல் கார்சியா மார்க்வெஸ் - அமேரிக்கா).
10. ஒரு கிருஸ்துமஸ் மாலை (லாங்ஸ்டன் ஹியூக்ஸ் - அமேரிக்கா).
11. ஆகப் பிரியமானவனா அவன்? (ஹென்ரிக் சியென்கிவிச் - போலந்து).
12. வாழ்வும் சாவும் (ஹென்ரிக் சியென்கிவிச் - போலந்து).

என்ற பன்னிரண்டு கதைகளையும் வாசிக்க வெவ்வேறு உணர்வுகளையும் தருகிறது.

இந்த தொகுப்பில் உள்ள துருக்கி மற்றும் குவைத் நாட்டு கதைகள் இசுலாமிய பின்னணியில் சாமானிய மனிதர்களின் வாழ்வியலை காட்டுகிறது. அதற்கு நேர்மாராக ஸ்பெயின் நாட்டு சிறுகதை தீவிரவாத கும்பலின் பொது இட குண்டுவெடிப்பு சம்பவத்தை விவரிக்கிறது. இரண்டாவது கதையான ரோகோ படு இயல்பாக தொடங்கி அதே வேகத்தில் நகைச்சுவையோடு குதுகலமாக முடிகிறது. சாண்பிள்ளை சிறுகதை முழுவதும் உணர்சிகளின் குவியல்களாக இருக்க அது பெண்ணியத்தை பேசுகிறது.

ஆன்டர்சனின் ஏற்றப்படாத விளக்குகள் என்ற சிறுகதை தனிமையின் ஊடே பயணித்து ஒரு தந்தை மற்றும் மகளின் நெருக்கமில்லாத உறவின் வழியில் ஓவியம் போல முடிகிறது. உருகுவே நாட்டு சிறுகதையான காலிங்கனம் மூன்று கடிதங்களை வாசிக்கும் உணர்வைத் தருகிறது. கிருஸ்துமஸ் மாலை கதை ஆப்பிரிக்க வம்சாவளிகளின் பாவனையை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. ஹென்ரிக் சியென்கிவிச் எழுதிய போலந்து நாட்டு கதையான கடைசி இரண்டு கதைகளும் இந்திய களத்தில் கற்பனையாக படைக்கப்பட்டிருக்கிறது.

  • அயல்வெளி
  • எஸ். சங்கரநாராயணன்
  • வெல்லும் சொல் பதிப்பகம்.

மொழிபெயர்ப்பு என்பது அத்துனை சுலபமாக முடிந்துவிடும் காரியம் அல்ல. இரு மொழிகளுக்கிடையே எப்போது அறுந்துவிழும் என்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் கனத்தை கொண்டது. அந்த கனத்தை உணந்து இந்த கதைகளை எஸ். சங்கரநாராயணன் தமிழில் அழகாக மொழிபெயர்த்துள்ளார். இவரது உலக சிறுகதைகளின் தொகுப்பான கனவுச்சந்தை, வேற்றூர் வானம், மேற்கு சாளரம் என்பனவற்றை தொடர்ந்து நான்காவது பகுதியாக இந்த புத்தகம் வெளிவந்திருக்கிறது.  சிறுகதைகளை கையில் எடுப்பதென்றால் தனி சுகமே, அதனை உணர இந்த புத்தகத்தை தவறாமல் தொட்டுப் பாருங்கள்.