ரசகுல்லா யாருக்கு சொந்தம்?


2015 - ஆம் ஆண்டு ஒடிசா மாநில அரசு அறிவியல், தொழில்நுட்பம், உயர் கல்வித்துறை என மூன்று துறைகளைக் கொண்டு ஒரு விசாரணை கமிஷன் அமைத்தது. இந்த கமிஷன் ஊழல் செய்த அரசியல்வாதிகளை பிடிக்கவோ, கடன் வாங்கிக் கொண்டு கம்பி நீட்டிய பெரும் முதலாளியைத் தேடவோ, அல்லது வேறு சில உதவாக்கரை திட்டங்களை செயல்படுத்தவோ அல்லாமல் தீவிரமான ஒரு விஷயத்தை அலசி ஆராய்வதற்காக அமைக்கப்பட்டது. அந்த தீவிரமான விஷயம்

ரசகுல்லா யாருக்கு சொந்தம்?


அதற்கு காரணமும் இருந்தது. ஒவ்வொரு வருடத்தின் ஜூலை 30 ஆம் தேதியை ரசகுல்லா திவாஸ்என ஒரு நாளாக கொண்டாடி மகிழும் அளவிற்கு மக்களோடு கலந்துவிட்ட ஒரு இனிப்பு பதார்த்தமான ரசகுல்லாவிற்கு பாரம்பரிய சின்னமாக புவிசார் குறியீடு (Geographical Identification - GI) பெறுவதற்காக ஒடிசா மாநில அரசு விண்ணப்பித்திருந்தது. அதற்கு போட்டியாக மேற்கு வங்க மாநிலமும் ரசகுல்லா எங்களுக்கே சொந்தம் என விண்ணப்பிக்க விசாரணை கமிஷன் அமைக்கும் அளவிற்கு இரண்டு மாநிலத்திற்கும் ருசியான ரசகுல்லா சண்டை தொடங்கியது.

சரி! ரசகுல்லா யாருக்கு சொந்தம்?


பால் திரிந்து போவது கெட்ட சகுனமாகவும் அது தவறான உணவுமுறையாகவும் கருதிவந்த இந்தியாவில் பாலிலிருந்து பாலாடைக்கட்டி எடுக்கும் முறை போர்த்துகீசியர்கள் மூலமாகவே அறிமுகமானது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் இது பரவலாக அதே முறைப்படி பாலை சுண்ட காய்ச்சி பஞ்சு போன்று மென்மையாக உருட்டி சர்க்கரை பாகில் மிதமான சூட்டில் மிதக்கவிடப்படும் ரசகுல்லாவை 1868 ஆம் ஆண்டு நோபின் சந்திரதாஸ் (Nabin Chandra Das) என்பவர்தான் முதன்முதலாக தயாரித்தார். ஆரம்ப காலகட்டத்தில் ரசகுல்லா தயாரிப்பு இவருக்கு பிடிபடாமல் போனாலும் பிறகு முறையான ரசகுல்லாவை அவர் தயாரித்து கல்கத்தாவின் பாக்பஜாரில் உள்ள தனது சிறிய கடையில் விற்று வந்தார். இவரே ரசகுல்லாவின் கொலம்பஸ் என அழைக்கப்பட பெங்காளி ஸ்வீட்ஸ் என தேடினால் ரசகுல்லாவே முதலாவதாக வந்து நின்று இனிக்கும் அளவிற்கு அது புகழ் பெற்றிருக்கிறது. பாக்பஜாரில் சந்திரதாஸ் அன்று தொடங்கிய இனிப்புக் கடை இன்றும் அங்கு இருப்பதுவும், அதன் கிளை நிறுவனமான கே.பி.தாஸ் என்ற இனிப்பகம் இந்தியா முழுவதும் பரவியிருப்பதுவும் (சென்னையில் நான்கு கிளைகள் இருக்கிறது) ரசகுல்லாவிற்காகவே அங்கெல்லாம் கூட்டம் அலை மோதுவதும் சந்திரதாஸின் கண்டுபிடிப்பிற்கு ஆதாரமாக இருக்கின்றன.


ஒடிசா மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அங்கு ரசகுல்லா 300 வருடங்கள் பழமையானது. ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோவிலின் தேர் திருவிழா உற்சவத்தின் போது ரசகுல்லாவே பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒருமுறை ஜெகன்னாதர் இலட்சுமி தேவியின் அனுமதியில்லாமல் தன் அத்தை வீட்டிற்கு சென்று திரும்பியபோது அவரை இலட்சுமி தேவியார் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்தார். இலட்சுமி தேவியாரை குளிர்விக்க ஜெகன்னாதர் இந்த ரசகுல்லாவை செய்து கொடுத்ததாக நம்பிக்கை கதையும் அங்கு நிலவுகிறது. இது ஒருபுறமிருக்க ஒடிசாவின் தலைநகரம் புவனேஷ்வருக்கு அருகில் இருக்கும் பஹாலா என்ற கிராமத்தில் ரசகுல்லா 700 வருடங்களுக்கு முன்பே புழக்கத்தில் இருந்தது. மனிதர்களைவிட மாடுகளே அதிகமாக இருந்த அந்த கிராமத்தில் அவற்றை வைத்து தொழில் செய்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களே மீதமிருந்த பாலில் ரசகுல்லாவை அந்த காலகட்டத்தில் தயாரித்து வந்ததாகவும் அன்று கோரா மோஹானா என்றும் இன்று சென்னா போடா என்ற பெயரில் அழைக்கப்படும் ஒருவகை இனிப்பு பதார்த்தமே ரசகுல்லாவிற்கு முன்னோடி என்ற கருத்தும் அங்கு உள்ளது. ஒடிசாவின் அந்த கிராமமே இன்று ரசகுல்லாவிற்கு பெயர் போனது.

கடைசியாக, இந்த ரசகுல்லா யாருக்குதான் சொந்தம்?

மதம் மற்றும் கடவுளோடு இணைந்த பாரம்பரியம் மற்றும் தான் நடத்திவரும் பி.கே. இன்டஸ்ட்ரியல் டிரைனிங் சென்டர் என்ற ரசகுல்லா தயாரிப்பு பயிற்சி நிறுவனம் இவற்றை ஆய்வுகளாக ஒடிசா மாநில அரசு சமர்ப்பிக்க, சந்திரதாஸ் தொடங்கிய கடை என்ற ஆழமான ஆதாரத்தால் ரசகுல்லா கடைசியில் மேற்கு வங்கத்திற்கே சொந்தமானது. மேலும் 2017 ஆம் ஆண்டு ரசகுல்லாவிற்கான புவிசார் குறியீட்டையும் அது பெற்றது.



ரஸ்என்றால் ரசம் அல்லது , குல்லா என்றால் பந்து. வங்க மொழியில் ரொசொகோல்லா, ஒரிய மொழியில் ரசகோலா, ஹிந்தியில் ரஸ்குல்லா, பொதுவாக ரசகுல்லா. ஆங்கிலோயர்கள் இதன் சுவையில் மயங்கி என அழைக்க ரசகுல்லா சுவையான இனிப்பு பதார்த்தம் என்பது சந்தேகமே இல்லை. அதனைப் போன்று அதன் கதையும், அது யாருக்கு சொந்தம் என இரண்டு மாநிலங்களுக்கிடையே இரண்டு வருடங்களாக நடந்த போட்டியும் இனிமையானதே. அந்த சுவையுடன் ரசகுல்லா செய்முறையையும் பார்த்துவிடலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்.

  • பால் - 1/2 லிட்டர்
  • சர்க்கரை - 1/2 கிலோ
  • தண்ணீர் - ஒரு கப்
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
  • ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
  • பிஸ்தா பருப்பு - 2
  • குங்குமப்பூ - சிறிதளவு
  • ஐஸ் கட்டி - 5

💙 முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் கொதிக்க விட்டு கொதிநிலையில் அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும் (எலுமிச்சை சாறுக்கு பதிலாக வினிகரையும் பயன்படுத்தலாம்).

💙 எலுமிச்சை சாறு கலந்த பால் திரிந்து போகும் நிலையில் அதை நன்கு கிளரிவிட வேண்டும். அந்த கலவை திரிந்த பால் மற்றும் தண்ணீர் என பிரிந்த நிலையில் கொதிக்க வைப்பதை நிறுத்தி விட்டு இரண்டையும் புதுமண தம்பதியை ஆடிக்கு பிரிப்பதை போன்று தனித் தனியே பிரித்து விடவேண்டும்.

💙 திரிந்த பாலுடன் ஜஸ் கட்டிகளை போட்டு அது முற்றிலும் உருகிய நிலையில் ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி தண்ணீரில் கழுவி நன்கு பிழிந்து கொள்ளவேண்டும்.

💙 மாவு போன்று திரிந்த அந்த பாலினை அரை மணிநேரம் அப்படியே வைத்து பிறகு சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவேண்டும்.

💙 மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீருடன் ஏலக்காய் பொடியையும் கலந்து சர்க்கரை உருகும் வரை பாகுபோல் காய்ச்ச வேண்டும்.

💙 இந்த பாகில் மிதமான சூட்டில் முன்பு உருண்டைகளாக பிடித்து வைத்த திரிந்த பாலினை உடையாமல் சாமர்த்தியமாக போட்டு மூடி வைக்க வேண்டும் (அவ்வபோது குரங்கு விதைத்த விதை போல மூடியை எடுத்து திறந்து பார்த்துக் கொள்வது நல்லது).

💙 இறுதியில் தயார் செய்ததை எடுத்து குளிர வைத்து அதன் மேல் சீவலாக நறுக்கிய பிஸ்தா பருப்பையும் குங்குமப்பூவையும் தூவினால் ரசகுல்லா உங்களுக்கே சொந்தம்.