டாகுமெண்டரி - புதிய பகுதி ஆரம்பம்.


நிகழ்வுகளை உண்மையான சூழலுக்கு தக்கவாறு உள்ளது உள்ளபடியே ஆவணப் படுத்தும் நிகழ்பட ஆக்கங்களே டாகுமெண்டரி எனப்படும். நாமெல்லாம் இன்று ரசித்து மகிழும் திரைப்படங்கள் கூட ஆரம்ப காலகட்டங்களில் இந்த டாகுமெண்டரி வடிவத்தை கொண்டதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் விபரணத் திரைப்படம் அல்லது ஆவணப்படம் என குறிப்பிடப்படும் டாகுமெண்டரி திரைப்படங்களுக்கு போலந்து நாட்டை சேர்ந்த போல்ஸ்ல மாட்ஸெவ்ஸ்கி (Boleslaw Matuszewski) என்பவரே புது வடிவம் கொடுத்தார். எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியரான இவரே டாகுமெண்டரி திரைப்படங்களின் தந்தை எனவும் போற்றப்படுகிறார். அவரைத் தொடர்ந்து ஜான் கிரீஸ்சன் (John Grierson), ராபர்ட் ஃப்ளெஹெர்ட்டி (Robert Flaherty), டிகிஹா வெர்டோ (Dziga Vertov), போன்ற பலரும் டாகுமெண்டரி திரைப்படங்களுங்கு புத்துயிரூட்ட, இன்றைய நிலவரப்படி இயற்கை காட்சிகள், உயிரினங்களின் அதிசயங்கள், வாழ்க்கை முறை, கலாச்சாரம், போர் குற்றங்கள், என நம்மை சுற்றிய சூழ்நிலை நிகழ்வுகள் அனைத்தும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சற்று குறைவில்லாத ரசனையில் டாகுமெண்டரி திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

புத்தகம் சினிமா பாடல்கள் குறும்படங்களைப் போன்று இந்த டாகுமெண்டரி திரைப்படங்களின் மீதும் அடியேனுக்கு அலாதி பிரியமுண்டு. இரண்டு டாகுமெண்டரி படங்களை எடுத்து அது முழுவதும் முடிவடையாமல் சோர்ந்து போன அனுபவமும் உண்டு. அந்த ஆவலில் இந்த புதிய பகுதியில் அடியேன் ரசித்த டாகுமெண்டரி படங்கள் சிலவற்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். இந்த பகுதியில் டாகுமெண்டரி படங்களைப் பற்றிய சிறு அறிமுகம் மற்றும் அவற்றின் டிரைலர் இருக்கும். மேலும் அந்த டாகுமெண்டரி படத்தின் அதிகார பூர்வ இணையதள முகவரி கொடுக்கப் பட்டிருக்கும். டாகுமெண்டரிகளை காண நினைத்தால் அந்த பக்கங்களுக்கு செல்ல வசதியும் தரப்பட்டிருக்கும். வழக்கமான உங்கள் ஆதரவுடன் இந்த புதிய பகுதியினை இனிதே தொடங்குகிறேன்.