காதல் அழிவதில்லை.



ண் பெண் என சுய உணர்வு தொடங்கியதிலிருந்து கணக்கிட்டால் இன்றுவரை இந்த உலகில் தோன்றிய காதல் கதைகளுக்கு பஞ்சமில்லை. அத்தகைய கதைகளில் புகழ்பெற்ற ஒன்றுதான் ரோமியோ ஜூலியட். சேக்ஸ்பியர் எழுதிய இந்த கதை பதின் பருவத்திலிருக்கும் இருவரின் உணர்வுகளையும், பாலியல் எண்ணம் கொண்ட அவர்களின் வேட்கையையும், அதனோடு பின்னிப் பிணைந்த காதலையும், இரண்டு குடும்பங்களின் தீராத பகையையும், இறுதியில் சோகமான முடிவையும் கொண்டதனால் இன்றளவும் அது அமரத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ரோமியோ ஜூலியட் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களை கணக்கிட்டாலும் இந்த உலகில் அதற்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்த திரைப்படமும் அந்த கதையை அடிப்படையாக கொண்டதுதான் என்றாலும் கதைக்களம் மட்டும் சற்று புதியது.



தென் பசிபிக் பிராந்தியத்தில் இருக்கும் இயற்கை சொறிந்த அழகிய தீவு தானா (Tanna). அந்த தீவில் வசிக்கும் ஆஸ்திரேலிய-நி-வானூட்டு (Australian- Ni-Vanuatu) என்ற பழங்குடி இனத்தில் கஸ்தோம், இமெடின் என இருவேறு பிரிவுகள் இருக்கின்றன. பழங்குடி மரபின்படி இயற்கையோடு இணைந்து வாழும் அவர்களுக்குள் வெவ்வேறு கடவுள் அதன் வழிபாடுகள் வெவ்வேறு நடைமுறைகள் இருக்க இருவரும் பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமண சடங்குகளின் நம்பிக்கையில் மட்டும் ஒத்துப் போகின்றனர். இந்த பிரிவுகளுக்கிடையே அவ்வபோது சண்டை சச்சரவுகள் தலை தூக்க, இந்த பிரிவுகளை சேர்ந்த டெய்ன் மற்றும் வாவா என்ற இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். காதல் என்ற வார்த்தையையே அறியாத அந்த பிரிவுகளுக்கு தெரியாமல் காதலர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்து கூடுகின்றனர். இதற்கிடையில் ஒரு சிறிய திருட்டு சம்பவத்தில் இந்த இரு பிரிவினருக்கிடையில் மோதல் தொடங்க சமாதான நடவடிக்கையாக கஸ்தோம் பிரிவை சேர்ந்த வாவாவை இமெடின் பிரிவை சேர்ந்த ஒருவனுக்கு மணமுடிக்க பன்றிகளை கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். இந்த திருமணத்தால் இரு பிரிவினருக்கும் காலங்காலமாக தொடரும் மோதல்கள் ஒரு முடிவுக்கு வரும் என வாவாவும் அதற்கு ஒப்புக் கொள்கிறாள். ஆனாலும் டெய்னுடனான சந்திப்பையும் காதலையும் தொடர்கிறாள்.

திருமண ஒப்பந்திற்கு பிறகு டெய்ன் மற்றும் வாவாவின் சந்திப்பும் அவர்களது காதலும் ஊரில் உள்ள மற்றவர்களுக்கு தெரியவர, கஸ்தோம் பிரிவை சேர்ந்த சில மூப்பர்கள் வாவாவை கண்டிக்கின்றனர். இமெடின் பிரிவை சேர்ந்தவர்கள் டெய்னை ஊரை விட்டே ஒதுக்கி வைக்கின்றனர். டெய்னின் பிரிவையும் காதலின் வலியையும்  தாங்க இயலாத வாவா ஒருநாள் தன் இருப்பிடத்தை விட்டு வெளியேறி காதலுடன் இணைகிறாள். காதலர்கள் இருவரும் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமாக இருக்கும் எரிமலை குன்று ஒன்றில் ரகசியமாக வாழத் தொடங்குகின்றனர். இவர்களது காதலால் இரு தரப்பிலும் ஒப்பந்தம் முறிந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் பகை தொடங்குகிறது. அந்த பகையின் மூலமாக இரண்டு தரப்பினரும் இந்த காதல் ஜோடியைத் தேடி அலைய முடிவு என்ன என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.



வெகு இயல்பாக காட்சியமைக்கப்பட்ட விதமே இந்த திரைப்படத்தின் பலம். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இயக்குனரான மார்டின் பட்லர் மற்றும் பென்ட்லி டீன் என்ற இருவரும் உலகின் கடைசி பழங்குடி இனத்தவர்களின் வாழ்க்கையை டாகுமெண்டரி படமாக்க பசிபிக்கில் உள்ள தானா தீவிற்கு செல்ல அந்த தீவில் 1980 ஆம் ஆண்டு பழங்குடியினரிடையே நிகழ்ந்த இந்த உண்மைக் கதை அவர்களுக்கு தெரிய வந்தது. அதற்குபின் கிட்டதட்ட ஐந்தாண்டு உழைப்பில் இந்த கதையை அவர்கள் திரைப்படமாக எடுக்க நேர்ந்தது. இந்த திரைப்படம் உண்மை சம்பவம் நிகழ்ந்த தானா தீவில் உள்ள  யாகூல் என்ற கிராமத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் படம்பிடிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் மொழி கூட அந்த பழங்குடியினர் பேசும் மொழியாக அமைந்திருக்கிறது. மேலும் நாயகன், நாயகி உட்பட இதில் நடித்த அனைவரும் அந்த தீவில் உள்ளவர்களாக மட்டுமே இருக்க அவர்களுக்கு சினிமா என்றால் என்ன? வெளியுலகம் எப்படி இருக்கும்? கேமரா முன்பு என்ன செய்ய வேண்டும்? என தெரியாது என்பது குறிப்பிடத் தகுந்தது.



காதலும், காதலிக்கப் படுவதும், காதலித்துக் கொண்டே இருப்பதுவும், காதல் கதைகளும் சலிப்புத் தட்டுவதேயில்லை. அந்த உற்சாகத்தோடு தெரிந்த கதை, யூகிக்கும் முடிவு, புதிய களம், இயல்பான கதை மாந்தர்கள், அவர்களின் உணர்வுகள், வேறொரு பரிமாணம் என இந்த திரைப்படத்தை காணத் தவறாதீர்கள்.



Tanna
Directed by - Martin Butler, Bentley Dean
Screen play - Martin Butler, Bentley Dean & John Collee
Music - Antony Partos
Cinematography - Bentley Dean
Country - Australia
Language - Nauvhal
Year - 2015