From Russia to Iran : Crossing Wild Frontier.


நாங்கள் செட் செய்ததைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த செட்டப் பாக்ஸ் சேனல்களை கொண்டு வந்திருப்பார்கள் போலும். அதிலிருப்பவைகளில் பெரும்பாலானவை குப்பை ரகங்கள்.  மீதமிருக்கும் சேனல்களிலும் ஏதாவது உருப்படியான ஒரு நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்றால் ரிமோட்டை மிதித்து தேட வேண்டியிருக்கிறது. அந்த வகையில் தேடியதில் டிஸ்கவரி தமிழில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பான From Russia to Iran : Crossing Wild Frontier என்ற நிகழ்ச்சி ரசிக்கத்தக்கதாகவும் ஒரு புதுவித பயண அனுபவத்தை தந்ததாகவும் இருந்தது.

இங்கிலாந்தை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரரான லெவின்சன் வூட் (Levison Wood) என்பவரின் ரஷ்யாவிலிருந்து ஈரானிற்கு செல்லும் பயணமே இந்த நிகழ்ச்சி. டிஸ்கவரி சேனலில் வழக்கமாக ஒளிபரப்பப்படும் சாகச பயண நிகழ்சியில் காட்டப்படுவதைப் போல் காடுகளுக்கு செல்வது, கடலில் நீந்துவது, மீன் பிடிப்பது, நெருப்பு மூட்டுவது, பாம்பு பல்லி தவளைகளை பச்சையாக உண்பது என்றில்லாமல் நம்மை போன்று சாதாரண ஒருவனின் பயணமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் லெவின்சன் வூட் தெற்கு ரஷ்யாவின் கிராமங்களிலிருந்து கால்நடையாக தன் பயணத்தை ஆரம்பிக்கிறார். வழியில் ஆங்காங்கே உதவி கேட்டு (லிப்ட்) பேருந்துகள் கார்கள் லாரிகள் என கிடைக்கும் வாகனங்களில் பயணிக்கிறார். குதிரை கழுதை ஒட்டக சவாரியும் செய்கிறார். பயணத்தின் களைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டு உண்கிறார் உறங்குகிறார். அவர் பயணிக்கும் இடங்களில் தென்படும் இயற்கை காட்சிகள், புராதான சின்னங்கள், உலகப்போரில் சிதைவுண்ட பகுதிகள் என நமக்கு தெரிந்திராத பல இடங்களை காட்டுகிறார். மேலும் அந்த இடங்களைப் பற்றிய வரலாற்றை குட்டிகுட்டி தகவல்களாக சொல்கிறார். காணும் இடங்களில் வசிக்கும் மக்களை சந்திக்கிறார், அவர்களது பண்பாடு பழக்க வழக்கங்களை புரிந்து கொண்டு அவர்களது விருந்தோம்பலில் கலந்து கொள்கிறார். தனது பயணத்தில் தமக்கு உதவியாக டூரிஸ்ட் கெய்டு என சொல்லக்கூடிய நபர்களை இணைத்துக் கொள்ளும் அவர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முக்கியஸ்தர்கள், காவலர்கள், கலகக்காரர்கள், உளவு பார்ப்பவர்கள், இராணுவ வீரர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், ஓநாய் வேட்டையர்கள் என சந்தித்து அனைவருடன் அலவாடுகிறார். அவ்வபோது கடந்த காலம் மற்றும் நிகழ்கால அரசியலையும் அசைபோடுகிறார். இறுதியில் கிராமங்கள் நகரங்கள் மட்டுமல்லாமல் காடுகள் மலைகள் ஆறுகள் ஏரிகள் பாலைவனம் பனிபிரதேசம் கடந்து அஜர்பைஜான், ஜோர்ஜியா, ஆர்மீனியா வழியாக மொத்தம் 2600 மைல்கள் பயணம் செய்து ஈரானை அடைகிறார்.


லெவின்சன் வூட் ஒரு பயண காதலன். இவரது பயண அனுபவங்கள் தொடர்பான Walking to Himalayas, Walking to Nile, Walking to America's, From Russia to Iran என்ற நான்கு டாகுமெண்டரிகளும் பிரபலமானவை. இங்கிலாந்தை சேர்ந்த சேனல் 4 என்ற தொலைக்காட்சி சென்ற வருடம் அதனை ஒளிபரப்ப அவற்றுள் ஒன்றை தற்போது  டிஸ்கவரி தமிழில் வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணிக்கு நமக்கு காட்டுகிறார்கள். டிஸ்கவரி சேனலுக்கு என்று ஒரு தனி மதிப்பு இருக்கிறது. ஏனென்றால் மற்ற தமில் சேனல்களிலிருந்து அது டிஸ்கவரி - தமிழ் (புரிந்திருக்கும் என நினைக்கிறேன்). மொத்தம் நான்கு எபிசோடுகள் கொண்ட இந்த பயண நிகழ்ச்சியில் ஒன்று முடிந்த நிலையில் வரும் வாரங்களில் மற்றவற்றை காணவும், ஒரு புதுவித பயணத்தை அனுபவிக்கவும் இந்த நிகழ்சியை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.