காஃபி கதை.



காஃபி குடிப்பதைப் பற்றி காஃபீனிசம் என இதற்கு முன்பு எழுதியிருந்தேன். அதற்கென தகவல்களை சேகரிக்க இந்த காஃபி என்ற ஒன்றினை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப் படுத்தியது யார்? அது எப்படி நிகழ்ந்தது? என்ற சுவாரசிய கதை ஒன்று கிடைத்தது. அந்த சுவையான கதையை குட்டித் தகவலாக பார்க்கலாம் வாருங்கள்.

எத்தியோபியா நாடுதான் காஃபியின் தாயகம். அந்த நாட்டில் காஃவா என்ற இடத்தில் கி.பி 850 ஆண்டு வாழ்ந்த கால்டி (Kaldi) என்பவரே காஃபியை நமக்கு காட்டியவராக கருதப்படுகிறார். அக்காலகட்டத்தில் எத்தியோபியா முழுவதும் காட்டுச் செடியைப் போல வளர்ந்திருந்த பூன்னா என்ற செடியில் (காபியா என்ற காஃபி செடியின் எத்தியோபிய பெயர் பூன்னா) ஒரு புதுவித உற்சாகம் இருக்கிறது என கால்டி வளர்த்து வந்த ஆடுகள்தான் அதனை அவருக்கு உணர்த்தியது என்பது வேடிக்கையானது. சொல்லப் போனால் நமக்கு முன்பு ஆடுகள்தான் காஃபியின் உற்சாகத்தை அனுபவித்து வந்திருக்கிறது.

ஆட்டு இடையரான கால்டி தான் வளர்க்கும் ஆடுகளில் சில வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன் ஆட்டம் போடுவதையும் இரவில் தூங்காமல் விழித்திருப்பதையும் ஒருநாள் கண்டார். இதற்கு காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ளும் நோக்கில் அடுத்தநாள் அவர் அந்த ஆடுகளை பின்தொடர்ந்து சென்றபோது அவைகள் மேய்ச்சலுக்கு பின் காஃபி செடியை தேடிச் சென்று அதன் இலையையும் பெர்ரி என்ற அதன் சிவப்பு நிற பழங்களையும் தின்று உற்சாகமாக ஆடுவது அவருக்கு தெரிய வந்தது. அடடா! இந்த செடியில்தால் அந்த சூட்சமம் இருக்கிறது என கால்டியும் ஆடுகளைப் போல முயற்சிக்க இந்த செடிகளை இறைவன் பரலோகத்திலிருந்து நமக்கென அனுப்பி வைத்துள்ளார் என அவரும் குதுகலிக்கத் தொடங்கினார். இந்த சம்பவத்திற்கு பின்பு கால்டி காஃபி செடியைப் பற்றிய அருமை பெருமைகளை அவரது ஊரில் உள்ள ஒரு மடாலயத்திற்கு தெரிவிக்க, சாத்தானின் சொடி என கருதப்பட்டு வந்த அது முதலில் நிராகரிக்கப்பட்டது. கை நிறைய காஃபி பழங்களுடன் மடாலயத்திற்கு வந்த கால்டிக்கு ஏமாற்றமே மிஞ்சியதினால்  கொண்டு வந்த பழங்களை அவர் தீயிலிட, தீயில் வறுபட்ட காஃபி கொட்டையின் மனம் அந்த மடாலயம் முழுவதும் பரவியது. அந்த சுகந்தத்தில் பிளாக் காஃபி என்ற புதுவகை பானம் பிறந்தது. இந்த காஃபி பானம் முதன்முதலில் அந்த மடாலயத்தின் சிறப்பு பிரார்த்தனைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதற்குபின் காஃபி எத்தியோபியா கிராமங்களைத் தாண்டி ஆப்பிரிக்கா தேசத்தில் புகுந்து அரபு தேசங்களில் வியாபித்து எகிப்தின் வழியாக ஒட்டகம் ஏறி ஐரோப்பாவை கடந்து உலகமெங்கும் பரவி நமது சமையலறைக்குள் நுழைந்து....செல்லம் ஒரு காஃபி போட்டுத் தாயேன்....என முறைக்கும் மனைவியிடம் (அதுவும் அழகுதான்) கெஞ்சும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

சூஃபி ஞானி, இஸ்லாமிய மகான், நாடோடி பாடகர் என எத்தியோபியா மக்களால் நம்பப்படும் காலித் என்ற கால்டிதான் காஃபியை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் என்பதற்கு வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை. ஆனால் கால்டிஸ் காஃபே (Kaldi's Coffee), காலித் காஃபே  (Khalid's Coffee), டான்சிங் கோட் (Dancing Coat), வான்டரிங் கோட் (Wandering Coat) என்ற பெயரில் இன்று உலகம் முழுவதும் பல காஃபி கடைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.