சிவகாமி பர்வம்.



ரித்திரம் நிறைந்த மன்னர்கள் காலத்து கதைகளை தெரிந்து கொள்வது என்றால் தனி சுவாரசியம் பிறந்து விடும். பதவி, சக்தி, துரோகம், வஞ்சகம், சூழ்ச்சி, வீழ்ச்சி, பழிவாங்குதல், சபதம் இவற்றை தவிர்த்து முடியாச்சி என்பது நிகழ சாத்தியமே இல்லை என்பதனால் அத்தகைய கதைகளில் விறுவிறுப்புகளுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் சமீபத்தில் திரைப்பட வடிவில் வெகுஜன மக்களையும் சென்றடைந்த ஒரு மன்னர் காலத்து கதைதான் பாகுபலி. அக்மார்க் தெலுங்கு நாயகன் பிரபாஸ், ஆஜானுபாகு வில்லன் ராணா, முன்னழகு அனுக்ஷா, பின்னழகு தமன்னா, பிரம்மாண்டம், கிராபிக்ஸ், கலக்கல், சொதப்பல் இவையெல்லாம் இருந்தும் இந்த பாகுபலி கதையின் உயிர் நாடியாக முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களை குறிப்பிட்டு சொல்லலாம். அதில் ஒருவர் மகிழ்மதி நாட்டின் மகாராணியான சிவகாமி தேவி, மற்றொருவர் அரசால்பவரின் அடிமையான கட்டப்பா (ரம்யா கிருஷ்ணனும் சத்யராஜும்).

சரி!.....யார் இந்த சிவகாமி? அத்துனை பலம் பொருந்திய மகிழ்மதி நாட்டை ஒரு புதுமைப் பெண்ணாக அவர் கட்டமைத்தது கட்டிக் காத்தது எப்படி? அழகும் அறிவும் அதைவிட அதிகமாக வீரமும் கொண்ட அவர் ஒரு உணமுற்ற கெட்ட எண்ணம் கொண்ட பிங்கல தேவனை திருமணம் செய்து கொண்டது ஏன்? மேலும் மற்றொரு கதாபாத்திரமான கட்டப்பா யார்? அடிமையாக அநாதையாக காட்டப்படும் அவரது பிறப்பு எத்தகையது?  அரசவையின் ஆணைக்கு இணங்க இளவரசனையே கொள்ளும் அளவிற்கான ராஜ விசுவாசம் அவருக்கு எப்படி வந்தது? என இந்த இரண்டு கதாபாத்திரத்தின் முக்கியத்துடன் நாம் ரசித்து மகிழ்ந்த பாகுபலி கதையின் முன்கதையாக அமைந்திருக்கிறது இந்த புத்தகம் சிவகாமி பர்வம்.

இனி இந்த புத்தகத்தின் கதைக்கு வருவோம்....

மகிழ்மதி என்றொரு வளம் பொருந்திய நாடு. அந்த நாட்டின் அரசனுக்கு கீழ் பூமிபதி என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. அமைச்சரவை என்பதற்கு பதிலாக இருக்கும் அந்த அமைப்பில் சில முக்கிய நபர்கள் இருக்க அதிகாரமும் படை பலமும் கொண்ட அந்த பூமிபதி பதவியிலிருக்கும் ஒருவர் ராஜ துரோகி என வீண்பழி சுமத்தப்பட்டு கல்லால் அடித்து தூக்கிலிடப்படுகிறார். அந்த பூமிபதியின் மரணம் ஐந்து வயதேயான அவரது மகள் சிவகாமி இதயத்தில் ரணமாக பதிந்து விடுகிறது. தன் தந்தை இறந்த கணத்திலிருந்து இந்த நாட்டையும் அரச குடும்பத்தையும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் வளரும் அவளுக்கு பன்னிரண்டு வருடங்களுக்கு பின் அவளது தந்தை தன் கைப்பட பைசாசி என்ற மொழியில் எழுதப்பட்ட புத்தகம் கிடைக்கிறது. தன் தந்தையைப் பற்றிய உண்மைகள் அடங்கிய அந்த புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறது? என அறிந்துகொள்ளும் நோக்கிலும் மகிழ்மதி நாட்டையே பழிவாங்கும் எண்ணத்துடன் இருக்கும் சிவகாமிக்கு அரண்மனைக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கிறது. 

இது ஒருபுறமிருக்க, காலங்காலமாக அரசால்பவர்களுக்கு அடிமையாகவும் மெய்காப்பாளராக இருக்கும் வம்சத்தை சேர்ந்த முத்தப்பாவின் இரண்டு மகன்களில் ஒருவனான சிவப்பா அடிமை முறையையும் அரசாங்கத்தையும் எதிர்த்து புரட்சி சிந்தனையுடன் வளருகிறான். மற்றொரு மகன் கட்டப்பாவிற்கு இளவரசர்களில் மூத்தவனை காக்கும் பணி கிடைக்கிறது. தான் ஒரு அடிமை என்ற போதும் அரச குடும்பத்திற்கு விசுவாசமாக என்ன நேர்தாலும் தர்மத்தை காக்கும் பொருப்பும் தன் தந்தை மற்றும் சகோதரனைப் பற்றிய கவலையும் கட்டப்பாவிற்கு கூடுதல் சுமையை அளிக்கிறது.

மேலும் மகிழ்மதி நாட்டில் ஊழலும் அதிகாரமும் தலைவிரித்தாட சாம்ராஜ்ஜியத்தை குறிவைத்து வீழ்த்த சில சதிகார கும்பல் காத்திருக்கிறது. அடிமை வியாபாரத்தை எதிர்த்து எழுபது வயது பெண் ஒருவரின் தலைமையில் ஒரு ரகசிய குழு செயல்பட, தங்கள் உரிமைக்காக வனத்தில் உள்ள பழங்குடியினரின் போராட்டமும் அங்கு நிகழ்கிறது. இந்த கலவரத்தில் சிவகாமியை காதலிக்கும் கோழையான இளவரசன் மகாதேவன், சிவகாமியை அடையத் துடிக்கும் உல்லாச பேர்வழியான மற்றொரு இளவரசன் பிஜ்ஜாலா, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்திருந்தாலும் தனது கடின உழைப்பால் பிரதம மந்திரியாக உயர்ந்த கந்த தாசன், உயர் குடியில் பிறந்தாலும் நாட்டையே அடகு வைக்கும் பட்டாச்சார்யர், புரட்சி படையை சேர்ந்த அல்லி என மேலும் சிலரோடு சில பல சிக்கல்களோடு சிவகாமியின் சபதம் நிறைவேறியதா என பயணிக்கிறது இந்த கதை.
  • The Rise of Sivagami
  • சிவகாமி பர்வம்
  • ஆனந்த் நீலகண்டன் 
  • தமிழில் - மீரா ரவிசங்கர்
  • வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ்.
'எந்த கதையை வேண்டுமானாலும் மக்களிடம் பரப்பலாம், அதில் கொஞ்சம் மதத்தை கலந்தால் போதும்' என துணிச்சலுடன் முற்போக்காக அசுரா (Tale of the Vanquished), அஜயா (Roll of Dise,  Rise of Kali) சீதா (Bhoomija) போன்ற பத்தகங்களை எழுதிய ஆனந்த நீலகண்டனின் அற்புதமான படைப்புதான் இந்த சிவகாமி பர்வம். இந்த புத்தகத்தில் சரித்திர கதைகளுக்கென்று காலங்காலமாக பின்பற்றும் எழுத்துநடை இல்லாமல் இருந்தாலும் கற்பனையையும் தாண்டி அரசியல், ஊழல், ஜாதி வெறி ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டம், அந்நிய ஆக்கிரமிப்பு, பெண்ணியம் என சமகால சிந்தனைகள் பேசப்படுவது பாரட்டிற்கு உறியது. இந்த கதை முழுவதும் முடியாமல் இரண்டாம் பாகம் விரைவில் என முடித்திருப்பது மேலும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. சரித்திரம் நிறைந்த மன்னர்கள் காலத்து கதைகளை தெரிந்து கொள்வது நிச்சயம் சுவாரசியமே. அத்தகைய சுவாரசியத்தை அடைய இந்த புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்.