விளையாட்டாக ஒரு பயணம்.



வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது அவரை பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கில் பல துறைகளைச் சார்ந்த யாரவது ஒரு பிரபலம் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக சினிமா மற்றும் விளையாட்டு வீரர்களின் ரசிகர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. சினிமா பிரபலங்களைக் காண சொல்லிக் கொள்ளாமல் ரயிலேறுபவர்களும், தினம் தினம் அந்த பிரபலங்களின் வீட்டிற்கு முன் காத்திருப்பவர்களும்,  திரையரங்குகளிலும் விளையாட்டு அரங்குகளிலும் ஈ போல் மொய்க்கும் ரசிகர்களும் இதற்கு சாட்சியாக இருக்கின்றனர். வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது அவரை சந்திக்க வேண்டும் என தம் மனம் கவர்ந்த பிரபலங்களைக் காண ரசிகர்களாகிய அவர்கள் பல சோதனைகளை சந்திக்கவும் சவால்களை ஏற்கவும் தயங்குவதில்லை. அவ்வாறு கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை சந்திக்கும் நோக்கில் குர்திஸ்தானிலிருந்து ஸ்பெயின் நாட்டில் உள்ள மேட்ரிட் நகரத்திற்கு மோட்டர் சைக்கிளில் சாகச பயணம் மேற்கொள்ளும் இரண்டு இளைஞர்களின் கதைதான் இந்த திரைப்படம் எல் கிளாஸிகோ (El Clasico).



ஈராக் பிராந்தியத்தின் குர்திஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் குள்ளமான சகோதரர்கள் ஆலன் மற்றும் ஷிர்வான் இருவருக்கும் கால்பந்து விளையாட்டு என்றால் உயிராக இருக்கிறது. சகோதரர்களில் இளையவனான ஆலன் ரியல் மேட்ரிட் (Real Madrid) கால்பந்து அணியின் ரசிகராகவும் ஷிர்வான் பார்சிலோனா (Barcelona FC) அணியின் ரசிகராகவும் இருக்கிறார்கள். உலகின் பலம் வாய்ந்த இந்த இரண்டு கால்பந்து அணியும் மோதும் விறுவிறுப்பான போட்டிகள் அனைத்தும் எல் கிளாஸிகோ (El Clasico) என அழைக்கப்படுகிறது. இதுவே இந்த திரைப்படத்தின் தலைப்பாகவும் இருக்கிறது. இதற்கிடையில் ஆலன் தன் கிராமத்தில் வசிக்கும் செருப்பு விற்பனை செய்யும் ஜலால் என்பவரின் மகள் கோனா என்பவளை காதலிக்கிறான். இருவரும் பல வருடங்களாக காதலிக்கும் நிலையில் ஆலன் தங்களின் காதலை ஜலாலிடம் தெரிவிக்க தக்க தருணத்திற்காக காத்திருக்கிறான். அந்த தருணமும் வர 'உன்னைப் போன்ற ஒரு குள்ளமான மனிதனுக்கு என் மகளை திருமணம் செய்து வைக்கப் போவதில்லை' என ஜலால் அவர்களின் காதலை மறுத்து விடுகிறார். மேலும் இருவரின் சந்திப்பிற்கும் தடை போடுகிறார்.

நாட்கள் நகர ஆலன் தனது திறமையை ஜலாலிடம் நிருபித்து அவரிடம் நற்பெயரை பெற்று அவரது மனதில் இடம் பிடிக்க ஒரு புது வழியை கண்டுபிடிக்கிறான். இந்த இருவரைப் போலவே ஜலாலுக்கும் கால்பந்து விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அவரது கடையிலிருக்கும் பாரம்பரியமான ஒரு ஜோடி குர்திஸ் காலணியை கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என அவன் முடிவு செய்கிறான். கால்பந்தாட்ட ரசிகரான ஜலால் அந்த காலணியை ரொனால்டோவிடம் கொடுப்பதை கனவாக வைத்திருக்கிறார். அதனை உணர்ந்த ஆலன் தான் அவ்வாறு செய்வதன் மூலம் தன் காதலியின் தந்தைக்கு தன்மீது நன்மதிப்பு வரும் என நம்புகிறான். அதற்கென ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் நகரில் நடக்கும் கால்பந்து போட்டிக்கு செல்ல தன் சாகச பயணத்தை தொடங்குகிறான். தனது சாகசத்திற்கு அவனது சகோதரன் ஷிர்வானும் துணைக்கு வர ATV என்ற நான்கு சக்கரம் கொண்ட மோட்டார் சைக்கிளில் இவர்களது பயணம் இனிதே தொடங்குகிறது. இவர்கள் இருவரும் தங்கள் கிராமத்திலிருந்து ஈராக் எல்லையை கடந்து ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார்களா? வழியில் இவர்கள் இருவரும் சந்தித்த சோதனைகள் என்ன? ஸ்பெயினில் இவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டாவை சந்தித்து தாங்கள் கொண்டுவந்த காலணிகளை கொடுத்தார்களா? இறுதியில் ஆலன் தன் காதலி கோனாவின் தந்தையான ஜலாலின் மனதை கவர்ந்து அவளை கை பிடித்தானா?  என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.



ரோடு சைடு மூவிஸ் (Road Side Movies) என அழைக்கப்படும் பயணங்கள் தொடர்பான திரைப்பட வகையைச் சேர்ந்த இந்த திரைப்படத்தில் அழகான காதலும் ஆங்காங்கே நகைச்சுவையும் சில இடங்களில் பரிதாபமும் வந்து போகிறது. குர்திஸ்தானில் ஒரு கிராமத்தில் தொடங்கும் பயணம் ஈராக் எல்லையை கடக்கும் போது ஈராக் போரினால் ஏற்பட்ட அவலங்களை காட்டியபடியே பயணிக்கிறது. சாதாரண இரண்டு குள்ளமான இளைஞர்கள் பல சாகசங்களுக்கு பிறகு ஸ்பெயின் நகரை அடையும் போது அடடா! இவ்வளவு தூரம் வந்த அவர்கள் வந்த காரியமான கிறிஸ்டியானோ ரொனால்டோவை சந்திப்பார்களா? அவர்கள் அப்படி சந்தித்தால் நன்றாக இருக்குமே! என்ற ஆவலும் ஆதங்கமும் திரைப்படத்தை பார்க்கும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ஆலனாக நடித்த வரியா அஹமது (Wyra Ahmed) ஷர்வானாக நடித்த டானா அஹமது (Dana Ahmed) இவர்களின் நடிப்பும், பயணத்தோடு பயணிக்கும் ஒளிப்பதிவும், காதல் காட்சிகளில் மயக்கும் இசையும் இந்த திரைப்படத்தை வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்கிறது. ஹல்காஃவ் முஸ்தபா (Halkawt Mustafa) என்பவரின் இயக்கத்தில் 2016 ஆம் வெளிவந்த இந்த திரைப்படம் உலக சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் கால்பந்து விளையாட்டின் ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோவையும் கவர்ந்த இந்த திரைப்படத்தை நீங்களும் ஒருமுறை தவறாமல் தரிசியுங்கள்.

Trailer 

Written & Directed by - Halkawt Mustafa
Music - Trond Bjerknes
Cinematography - Kjell Vassdal
Country - Iraq, Norway
Language - Kurdish
Year - 2016.