இசைக்கு மயங்காத உயிர்கள்.




சைக்கு மயங்காத உயிர்கள் எதுவும் இல்லை. தாவரங்கள் பறவைகள் விலங்குகள் என அனைத்து உயிர்களுக்கும் இசையை உணரும் சக்தி இருக்கிறது. தாவரங்களை எடுத்துக்கொண்டால் தென்னை, மா, வாழை போன்ற மரங்களும் தக்காளி, வெண்டை, கத்தரி போன்ற காய்கறிகளும் நல்ல இசையைக் கேட்டு அதிகப்படியான மகசூலைக் கொடுப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.


முருங்கைக்காய்க்கும் கொத்தவரங்காய்க்கும் மண், சூரியஒளி , நீர், பச்சையம் இவற்றோடு ஐந்தாறு அனிரூத் பாடல் இருந்தால் போதும். விலங்குகளை பொருத்தவரை ஆடு, மாடு, நாய் இவைகள் எல்லாம் இசைக்கு அடிபணிகின்றன. சென்பகமே! சென்பகாமே! பாடினால் பசு சமத்தாக பால் சொம்பை நிரப்பிவிடும், பேச்சி பேச்சி பாடல் தெரிந்திருந்தால் எல்லா ஜல்லிக்கட்டிற்கும் தைரியமாக போய்வரலாம் (உதைபடாமல் இருக்க பின்குறிப்பு - கொஞ்சம் சாரீரம் வேண்டும்). மனிதர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம் மனித உடலின் நோய்களுக்கு மனதும் ஒரு காரணம். அந்த மனதை மயக்கும் இசையைக் கேட்டால் இரத்த அழுத்தம், இதய நோய், காச நோய், காதல் நோய் போன்ற நோய்கள் கூட குணமாகிவிடும். எல்லா மதங்களிலும் மந்திரம், ஜபம், தொழுகை என வழிபாட்டு முறைகள் மாறினாலும் இறைவனை மனம் உருகச் செய்யவும் அவனடி சேரவும் இசை ஒன்றே எளிமையான வழியாக இருக்கிறது. மதத்தையும் தாண்டி ஒரு மதம் பிடித்த யானையைக் கூட அடக்கியாழும் சக்தி இசைக்கு இருக்கிறது. அதனால் இசைக்கு மயங்காத உயிர்கள் உலகில் எதுவும் இல்லை எனலாம். இதற்கு சாட்சியாக அகநானூற்று பாடலில் ஒரு காட்சி வருகிறது.

ஒலியல் வார்மயிர் உளரினள், கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
படாஅப் பைங்கண் பாடுபெற்று, ஒய்யென
மறம்புகல் மழகளிறு உறங்கும் நாடன்;

தினைப்புலம் என சொல்லக்கூடிய விளைச்சல் நிலத்தில் விளைந்த கதிர்களை தின்பதற்காக மதங் கொண்ட யானை ஒன்று ஓடி வருகிறது. அந்த நேரம் அந்த தினைப்புலத்தை காவல் காக்கும் பெண் ஒருத்தி பக்கத்திலிருக்கும் சுனைநீரில் குளித்து முடித்துவிட்டு தன்னுடைய ஈரக் கூந்தலை கோதியபடி இனிமையான குறிஞ்சிப் பண்ணை பாடியபடி காற்றில் கூந்தலை காயவைத்துக் கொண்டிருக்கிறாள். குறிஞ்சிப் பண் என்பது குறிஞ்சி நிலத்திற்கு உறிய பண் ஆகும். பண் என்றால் இசை. முருகனின் துணைவி வள்ளி பாடினாளே! அதுவும் குறிஞ்சிப் பண்தான். அதுபோல காவல் காக்கும் அந்த பெண் பாடிய குறிஞ்சிப் பண்ணை கேட்டதும் ஓடிவந்த அந்த மதம் பிடித்த யானை அப்படியே! மெய்மறந்து எதுவும் செய்யாமல் அசையாமல் நிற்கிறது. அகநானூற்றில் இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக தலைவி தோழிக்கு கூறுவதாக வரும் "உளைமான் துப்பின்" எனத் தொடங்கும் பாடலின் நடுவே, தலைவனின் பெருமையை சொல்லும் இடத்தில் இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை என்பதற்கு சாட்சியாக இந்த காட்சி வருகிறது.

அந்த காட்சி இடம்பெற்ற முழு பாடலும் அதன் பொருளும்

உளைமான் துப்பின், ஓங்குதினைப் பெரும்புனத்துக்
கழுதில் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென,
உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்பு
ஐதுவரல் அசைவளி ஆற்றக், கைபெயரா,
ஒலியல் வார்மயிர் உளரினள், கொடிச்சி

பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
படாஅப் பைங்கண் பாடுபெற்று, ஒய்யென
மறம்புகல் மழகளிறு உறங்கும் நாடன்;
ஆர மார்பின் வரிஞிமிறு ஆர்ப்பத்,

தாரன் கண்ணியன், எஃகுடை வலத்தன்,
காவலர் அறிதல் ஓம்பிப், பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
உயங்குபடர் அகலம் முயங்கித், தோள்மணந்து
இன்சொல் அளைஇப், பெயர்ந்தனன் - தோழி!

இன்றுஎவன் கொல்லோ கண்டிகும் - மற்றுஅவன்
நல்கா மையின் அம்பல் ஆகி,
ஒருங்குவந்து உவக்கும் பண்பின்
இருஞ்சூழ் ஓதி ஒண்நுதற் பசப்பே!

பொருள்

உளைமானின் (ஒருவகை மான்) கொம்பை போன்ற ஓங்கி வளர்ந்த கதிர்களைக் கொண்ட தினைப்புலத்தில் அதனை காவல் காப்பவன் கள்ளுண்டு மகிழ்ந்து கிடக்கிறான். அரைத்த சாந்தினை பூசியை கருங்கூந்தலை கோதியபடி அவனது மனைவி கொடிச்சி காற்றிலாட அதனை உலர்த்திக் கொண்டு குறிஞ்சிப் பண்னை பாடுகிறாள். அதனைக் கேட்டு நிலைகொள்ளாது தினையை உட்கொள்ளாது யானை ஒன்று மயங்கி அசைவற்று நிற்கிறது. அத்தகைய எழில் நிறைந்த நாட்டினை உடையவன் என் தலைவன். அந்த தலைவன், சந்தனம் பூசிய மார்பில் வண்டுகள் மொய்க்க, காவலர்கள் கையில் வேலேந்தி காவல் காக்க அதனை பொருட்படுத்தாது தாழிடாத கதவை மெல்ல திறந்து வீட்டிற்குள் நுழைந்து யான் வருந்தும் துன்பம் போக தோளினைத் தழுவி அணைத்துக் கூடினான். பிறகு இனிமையான சொற்களைப் பேசி அளாவிவிட்டு பிரிந்து சென்றான். என்றோ அவன் தான் சொன்னதுபோல் வந்து மகிழ்ச்சியைத் தந்துவிட்டு சென்றாலும் இன்று அதனை நினைத்து நான் புலம்புகிறேன். அவன் இன்றும் இந்த இரவு நேரத்தில் வந்திருக்கிறான். அவனோ நான் படும் துன்பத்தை நினைக்காமல் இருக்கிறான். மற்றவர்கள் எங்களது உறவைப் பற்றி தவறாக பேச எனக்கு உவப்பாக இருக்கிறது ஆனாலும் அவனை நினைத்து மனம் ஏங்கி கிடக்கிறது. அவன் விரைந்து வருவானாயின் என்ன செய்வேன்?.