குபேரன்.



காலையில் சாப்பிட்ட முந்திரி பொங்கலுக்கும் மதியம் என்ன விழுங்கலாம் என்ற மகா சிந்தனைக்கும் இடைப்பட்ட நேரத்தில் வேலை வெட்டி எதுவும் இல்லாத ஒரு பிற்பகலில் சலிப்புடன் டிவியை ஆன் செய்தேன். பிரபலமான முன்னால் நடிகர் ஒருவர் 'உங்கள் வீட்டில் ஐஸ்வர்யாராய் பெருக....தொழில் செழிக்க....செல்வம் கொழிக்க..... கடன் தொல்லை தீர....பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்ட....கீழே உள்ள நம்பருக்கு மிஸ்டுகால் கொடுங்கள்' என குபேர எந்திரமும் அதனுடன் குபேர படம் போட்ட டாலரும் விற்றுக் கொண்டிருந்தார். பாவம் அவருக்கு என்ன கஷ்டமோ! நஷ்டமோ!. வேண்டா விருப்பாக அந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் அந்த எந்திரம் மற்றும் டாலருக்கு சொந்தமான உலகில் இருக்கும் செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கும் புராணகதையில் வரும் குபேரன் என்ற பெயரைக் கேட்டதும் அடடா! ...அவரை கொஞ்சம் வம்பிழுக்கலாம் எனத் தோன்றியது.

இந்த உலகின் படைக்கும் தொழிலை பிரம்மா ஏற்றிருந்தார். அந்த தொழிலுக்கு உதவி செய்வதற்காக தனது மனதால் பிரஜாபதி என அழைக்கப்படும் பத்து மகன்களை அவர் பெற்றெடுத்தார் அல்லது உருவாக்கினார். அந்த பிரஜாபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான விஸ்ரவ முனிவருக்கும் அவரது மனைவி ரிஷிகுமாரிக்கும் பிறந்தவர்தான் இந்த குபேரன். ஒரு வகையில் பிரம்மா இவருக்கு கொள்ளுத் தாத்தா. மேலும் விஸ்ரவ முனிவருக்கும் கேசகி என்ற வேறொரு அசுரகுல பெண்ணுக்கும் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் மற்றும் சூர்பனகை என நால்வர் பிறந்தனர். இதைப்பற்றி ஏ சான்றிதழுடன் ஏற்கனவே எழுதிவிட்டேன் ஆக! இராமாயண வில்லன் வகையராக்கள் குபேரனுக்கு ஒன்று விட்ட சகோதர சகோதரி சொந்தங்கள்.


குபேரன் சிவபெருமானின் தீவிர பக்தன் ஆவர். ஒருமுறை அவர் சிவபெருமானை நோக்கி நீண்ட தவம் புரிய 'தவம் என்றால் மெச்சத்தானே' அந்த தவத்தை மெச்சிய சிவனும் பார்வதியும் அவரை உலக செல்வங்களுக்கு எல்லாம் அதிபதியாக்கினர். குபேரனுக்கு முன்பு உலக செல்வங்கள் அனைத்தும் சிவபெருமானின் வசமிருந்தது. பிறகு 'ஆள விட்டா போதும்டா சாமி' என அந்த செல்வங்களை எல்லாம் தனது மனைவி பார்வதியிடம் கொடுத்துவிட்டு கடைசியாக எல்லாம் இங்குதான் வரவேண்டும் என அவர் சுடுகாட்டிற்கு சென்றுவிட்டார். பார்வதியும் செல்வங்களை வைத்துக்கொண்டு செய்வதறியாமல் தவிக்க குபேரனிடம் உழைக்கின்ற மக்களின் வியர்வைக்கும் அவர்களின் விதிப்பயனுக்கும் தக்கவாறு நியாய தர்மத்துடன் இதனை வாரி வழங்கு என கொடுத்துவிட்டார்.

இதற்கிடையில் திருமாலின் மனைவியான லெட்சுமி, தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு சக்திகளை பெற்றாள். அதனை சங்கநிதி, பதுமநிதி என்ற இருவரிடம் ஒப்படைத்தாள்.

குபேரன் தான் பெற்ற உலக செல்வங்களுக்கு இந்த இரண்டு நிதிகளையும் கணக்குப் பிள்ளையாக நியமித்து ஏனைய நிதிகளை துணையாகக் கொண்டு, விஸ்வகர்மா என்பவர் உருவாக்கிய அழகாபுரி என்ற பட்டணத்தில் ஒரு அரண்மனையைக் கட்டி, அதிலிருக்கும் அத்தாணி மண்டபத்தில் முத்தினால் செய்யப்பட்ட வெண்குடையின் கீழே இருக்கும் மீன் ஆசனத்தில் போடப்பட்ட மெத்தையில் தனது சிவந்த பருத்த குள்ளமான உடலிலிருந்து தொந்தியை முன்னுக்குத் தள்ளி அமர்ந்து, தலையில் கீரீடம் மற்றும் உடலில் தங்க வெள்ளி வைர வைடூரிய ஆபரணங்கள் ஜொலி ஜொலிக்க, ஒரு பக்கம் வெள்ளைக் குதிரை மறுபக்கம் கீரிப்பிள்ளை என தனது வாகனத்தை நிறுத்தி, தாமரை மலரை ஒரு கையில் கொண்டு தன் மனைவி சித்திரலேகாவுடன் அனைத்தையும்  இன்றுவரை அவர் காத்து வருகிறார்.

குபேரனின் இயற்பெயர் விஷ்ராவணன். அவர் சயம்பன், யாளிமுகன், ஏதி, வித்துகேசன், சுகேசன், மாலியவான், சுமாலி இவர்களுக்குப் பிறகு எட்டாவதாக இலங்கையை ஆண்டு வந்தார். அவரது மாற்றான் தாயின் மகனான இராவணன் சூழ்ச்சி செய்து அவரிடமிருந்து ஆட்சியை கைப்பற்றினான். மேலும் குபேரன் வைத்திருந்த நினைத்த இடத்திற்கு பறந்து சென்றுவரும் சக்தி கொண்ட புஷ்பக விமானத்தையும் அவன் பறித்துக் கொண்டான். இதனால் கோபம் கொண்ட குபேரன் சிவபெருமானை நோக்கி சுமார் 800 ஆண்டுகள் நீண்ட தவம் புரிந்தார். தவத்தின் பயனாக செல்வங்களுக்கு எல்லாம் அதிபதியாகவும் எட்டுத்திசையில் வடக்கு திசைக்கு அதிபதியாகவும் அவர் மாறினார். குபேரனுக்கு நளகூபன், மணிக்ரீவன் என இரண்டு மகன்கள் இருந்தனர் என்ற கதை இலங்கை மக்களிடம் இன்றும் நிலவுகிறது.

குபேரனுக்கு திரையம்பகாசா, யக்ஷரத், குகனேஷ்வரா, மனுஷ்யதர்மா, தானதா, ராஜராஜா, தானதீபா, கின்னரேஷ்வரா, பாலஸ்தியா, நரவாகனா, யக்ஷா, ஏகபீங்கா, ஜடாவிதா, என வேறு சில பெயர்களும் இருக்கின்றன. சீனாவில் டுவோ வென் டியான், பிஷாமென் டியான் எனவும், கொரியாவில் டாமுன் சீயோன்வாங் எனவும் ஜப்பானில் டாமோன்டென், பிஷமொன்டென் எனவும் திபெத்தில் நாம்தோசே எனவும் குபேரன் அழைக்கப்படுகிறார்.

பௌத்த மத கதைகளில் குபேரன் சதுர்மகாராஜாக்களில் ஒருவராகவும் எட்டு தர்மபாலர்களில் ஒருவராகவும் லோகபாலகராகவும் வருகிறார். பாளி சூத்திரத்தில் குபேரனின் பெயர் வேஸ்ஸவணன். எட்டுத் திசைகளை காக்கும் ராஜாக்களில் இவரும் ஒருவர். இவரது மனைவி பெயர் புஞ்சதி இவருக்கு லதா, சஜ்ஜா, பவரா, அச்சிமதி, சுதா என ஐந்து மகள்கள் இருக்கின்றனர். ஐந்து பெற்றால் ஆண்டி என்பதைத் தாண்டி இவர் அங்கும் செல்வங்களை வாரி வழங்குபவராக இருக்கிறார். சிரிக்கும் புத்தரும் இவரே.

ஜப்பானில் குபேரனை போர்க் கடவுளாக பார்க்கின்றனர். ஷின்டோ மதத்தின் ஏழு அதிஷ்ட தேவதைகளில் இவரும் இருக்கிறார். ஜப்பான் குபேரன் ஒரு கையில் ஆயுதத்தையும் மறு கையில் பகோடாவையும்....பகோடா என்பது கூம்பு வடிவ கோபுர அடுக்குகளை உடைய கட்டிடம், இதில் உலக செல்வங்கள் அனைத்தும் இருப்பதாக நம்பிக்கை உள்ளது. நீங்கள் நினைக்கும் தாமரை பகோடா அல்ல... அந்த பகோடாவைத் தாங்கி காவல் காத்து இல்லாதவர்களுக்கு செல்வங்களை அளிக்கிறார்.

திபெத்திலும் இவரே செல்வங்களை காப்பவராக தர்மபாலராகவும் இருக்கிறார். அங்குள்ள பல பௌத்த கோவில்களின் வெளியே உள்ள சித்திரங்களில் குபேரனை காணலாம். மேலும் ஜைன மதத்தில் இவர் சர்வானுபூதி என அழைக்கப்படுகிறார்.

இந்து மதத்தில் மகாலட்சுமியே செல்வங்களுக்கெல்லாம் சொந்தக்காரியாக இருந்தாலும் குபேரன் அந்த செல்வங்களை எல்லாம் போணிக் காப்பராக விளங்குகிறார். இந்தியாவில் பல கோவில்களில் குபேரன் சிலைகள் இருந்தாலும் சென்னையை அடுத்துள்ள ரத்தினமங்கலம் கிராமத்தில் இருக்கும் லட்சுமி குபேர கோவில் ஒன்றே குபேரனுக்கான தனிக் கோவிலாக இருக்கிறது. குஜராத்தில் உள்ள கர்நாளி என்ற இடம்தான் குபேரனின் அழகாபுரி பட்டிணம் என்றும் அதனால்தான் குஜராத் மாநிலம் செழிமையாக இருக்கிறது என்றும் சில கருத்து உள்ளது.

வெவ்வேறு இடங்கள் வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தாலும் அனைத்திலும் குபேரன் ஒருவரே செல்வங்களுக்கு அதிபதியாக விளங்குகிறார். மகா விஷ்ணுவிற்கே கடன் கொடுக்கும் அளவிற்கான செல்வம் அவரிடம் இருக்கிறது.

தீபாவளி, அட்சய திரிதியை, வைகுண்ட ஏகாதேசி போன்ற நாட்கள் குபேரனை வழிபட சிறந்த நாளாகும். மேலும் ஒவ்வொரு வாரம் வியாழன் மாலை 5.30 -6.00 நேரத்தில்

ஓம் யஷயாய குபேராய வைஸ்ரவனாய
தனதாந்யாதி பதயே
தநதாந்ய ஸம்ரும்திம்மே
தேஹி தபாயஸ்வாஹ!

என பூஜித்து வந்தால் நிச்சையமாக குபேரன் உங்களுக்கு அருள் புரிவார். இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது அந்த விளம்பரம்

உங்கள் வீட்டில் ஐஸ்வர்யாராய் பெருக....தொழில் செழிக்க....செல்வம் கொழிக்க..... கடன் தொல்லை தீர....பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்ட....கீழே உள்ள நம்பருக்கு மிஸ்டுகால் கொடுங்கள்.