நல்ல நேரம் கெட்ட நேரம்.


நேரமே இல்லப்பா.. என ஓடிக் கொண்டிருந்தாலும் நல்லது கெட்டதிற்கு நாள்காட்டியையும் கடிகாரத்தையும் பார்க்கும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. திருவிழாக்கள், சுபகாரியங்கள், புதியனவற்றை தொடங்க முடிக்க, வெளிய தெருவிற்கு போக, அட ஏன்? பிரசவம் பார்க்க, வின்வெளிக்கு ராக்கெட் அனுப்பக் கூட இராகுகாலம், எமகண்டம், குளிகை, கரணம் எல்லாம் பார்க்கும் பஞ்சாங்க பழக்கம் இந்த அப்டேட் வெர்ஷன் யுகத்திலும் மாறாமல் அப்படியே இருக்கிறது. தனிமனித செயல்பாட்டை எடுத்துக் கொண்டால் ஒருவனின் வளர்ச்சிக்கு அவனது நல்ல நேரத்தையும் வீழ்ச்சிக்கு...'எல்லாம் அவன் கெட்ட நேரம்பா'...எனவும் குறிப்பிடுகிறோம்.

ஒரு நாளின் 24 மணிநேரத்தில் நல்ல நேரம் கெட்ட நேரம் என்பது இருக்கிறதா? அது நம் இயக்கத்தோடு தொடர்புடையதா? அதனை இயக்கும் சக்தி எது?

இந்த பிரபஞ்சத்தில் நம்மை மீறிய சக்தி எதுவும் கிடையாது, நமக்கு கட்டுப்படுகிற சக்தியும் எதுவும் கிடையாது. இந்த பிரபஞ்சமே ஒரு சக்தி, அதிலிருக்கும் நாமும் ஒரு சக்தி.

குழப்பமாக இருக்கிறதா? ...சரி! விடுங்கள்... நல்ல நேரம் கெட்ட நேரம் என்பதைப்பற்றி வேடிக்கையான இந்த இரண்டு கதைக்குள் நுழைவோம்.


ஒருமுறை எமதர்ம ராஜா ஒரு திருமண நிகழ்ச்சிக்காக எமலோகத்திலிருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வந்தார். திருமண வீட்டில் உள்ளவர்கள் அவரை தடபுடலாக வரவேற்க உள்ளே நுழைந்த அவர் அங்கிருந்த கதவு ஓரமாக நின்றுகொண்டிருந்த ஒரு எலியைக் கண்டார்...'நீ இங்கேயா இருக்கே?'...என அதனைப் பார்த்து ஆச்சரிமாக கேட்டுவிட்டு ஒரு புன்சிரிப்புடன் மணமக்களை வாழ்த்த சென்றார்.

எமன் தன்னைப் பார்த்து நீ இங்கேயா இருக்கே? என கேட்டதில் எலிக்கு சற்று சந்தேகம் வந்தது. வேறு எவனாக இருந்தால் பரவாயில்லை கேட்டது எமன்...'அப்படி என்றால் இந்நேரம் நாம் இறந்துபோய் எமலோகத்தில் இருக்க வேண்டிய ஆளா?'...என அது நினைத்தது.  உடனே எலிக்கு மரண பயம் வந்து அந்த திருமண வீட்டைவிட்டு அழுதுகொண்டே வீதிக்கு வந்தது.

வீதியில் அழுதுகொண்டே நடந்துவரும் எலியை அந்த வழியாக பறந்துகொண்டிருந்த கழுகு ஒன்று சந்தித்து... 'ஏன் இப்படி அழுவுறே?'...என விசாரித்தது. எலி விஷயத்தை கழுகிடம் சொல்ல... 'கவலைப்படாதே என்னால்தான் உனக்கு சாவு என நினைத்து இங்கு வந்தேன்...நான் உன்னை இப்போது எதுவும்  செய்யப்போவதில்லை...தைரியமாக இரு...எமன் வருவதற்குள் உன்னை பாதுகாப்பாக அந்த மலை உச்சியில் இருக்கும் பாறைக்கு தூக்கிச் சென்று பத்திரமாக வைத்துவிடுகிறேன்'...என வாக்குறுதி கொடுத்தது. எலியும் அதற்கு சம்மதிக்க அதனை தூக்கிக்கொண்டுபோன கழுகு தான் சொன்னதுபோல் மலை உச்சியிலிருக்கும் பாறையில் உள்ள சிறிய பொந்தில் விட்டுவிட்டு திரும்பவும் திருமண வீட்டின் பக்கம் வந்தது.

எமதர்ம ராஜாவும் திருமண விருந்தெல்லாம் முடிந்து மீசையை முறுக்கி தொந்தியை தடவிக் கொண்டே வெளிவர கதவோரம் நின்ற எலியை காணது தேடத் தொடங்கினர். அப்போது கழுகு சிரித்துக்கொண்டே எலியை பத்திரமாக ஒளித்து வைத்த ரகசியத்தை எமனிடம் சொல்ல அதனைக் கேட்ட எமன்...அப்பாடா!...என பெருமூச்சு விடத் தொடங்கினார்.

மேலும்...'இன்று அந்த எலிக்கு அந்த மலை உச்சியிலிருக்கும் பாறை மறைவில் இருக்கும் ஒரு பூனையால் மரணம் ஏற்படுவதாக இருந்தது... ஆனால் அந்த எலி இங்கு கதவோரம் நிற்க...நீ இங்கேயா இருக்க? என கேட்டேன். உன் தயவால் இந்நேரம் அதன் கதை முடிந்திருக்கும்...உனக்கு மிக்க நன்றி'...என கழுகிடம் சொல்லிவிட்டு அவர் எமலோகம் நோக்கிச் சென்றார்.

இது எலிக்கு கிடைத்த கெட்ட நேரம்.

அடுத்து நத்தைக்கு வாய்த்த நல்ல நேரத்தை பார்ப்போம்.

ஒரு பாழடைந்த பெரிய வீட்டில் நத்தை ஒன்று வசித்து வந்தது. அந்த வீடு பழமையானதும் இடிந்துவிழும் நிலையில் இருந்ததாலும் நத்தை அதனைவிட்டு வெளியேற முடிவு செய்து புறப்பட்டது. நத்தையால் மெல்ல ஊர்ந்து அந்த வீட்டின் அறையிலிருந்து வெளிவர ஒரு நாள் ஆனது. பிறகு வீட்டின் மையப்பகுதிக்கு அது வர இரண்டு நாட்கள் ஆனது. அடுத்து மாடிப்படி இறங்க மூன்று நாட்கள் ஆனது. வராண்டாவை கடந்து தோட்டத்திற்கு வர அதற்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டது. தோட்டத்தை கடந்து தெருவிற்கு வர அது ஐந்து நாட்கள் எடுத்துக் கொண்டது. கடைசியில் அந்த நத்தை தெருவிற்கு வந்த அடுத்த நிமிடம் அது வசித்துவந்த அந்த வீடு இடிந்து தரைமட்டமானது. இதனை பார்த்த நத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டது.

"அப்பாடா! நேரத்தோடு கிளம்பினதால  தப்பிச்சேன்!"