ஓரேர் உழவன்.


ற்ற பண்டிகைகளைக் காட்டிலும் இந்த பொங்கல் பண்டிகை சிறப்பு வாய்ந்தது. ஏதோ ஒருவகையில் பிறந்த மண்ணோடும் கலாச்சாரத்தோடும் அது பின்னிப்பிணைந்தது. இந்த வருட பண்டிகை வார விடுமுறை நாட்களில் வந்தாலும் அதனை கொண்டாட நினைக்கும் மனம் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட தயாராகி விட்டது. சொந்த மண்ணில் உறவுகள், நட்பு, சுற்றம், இயற்கை சூழ வாழ்பவர்கள் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்களே. ஆனால் இவற்றை தொலைத்துவிட்டு பிழைப்பிற்காக பொருளீட்ட வெவ்வேறு இடங்களில் வாழ்பவர்களின் நிலை சற்று கவலைக்குறியது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில் கடைசிநேரத்தில் பேருந்தையோ, இரயிலையோ, விமானத்தையோ பிடித்து தொலைத்தவற்றை அடைய சொந்த ஊருக்கு புறப்படும் அவர்களின் நிலை கொடுமையானது. விடுமுறை தினங்களில் பயணங்கள் சற்று சவாலாக இருக்கும், அதிலும் விடிந்தால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் என்றால் சொல்லவே தேவையில்லை. நீங்கள் இந்த ரகத்தை சேர்ந்தவர் என்றால் அந்த அனுபவம் நிச்சயம் உங்களுக்கும் இருக்கும். அதெல்லாம் ஒருபுறம் இருந்ததும்  சொந்தபந்த உறவுகளை பார்க்கும் ஆவலும், கிடைத்த விடுமுறையில் பண்டிகைகளை கொண்டாடி தீர்க்கும் எண்ணமும், ஓரேர் உழவன் போல விரையும் மனமும்தான் அத்தகைய கடைசிநேர பண்டிகை கால பயணங்களை அழகாக்குகிறது.

அது என்ன ஓரேர் உழவன் போல?



இதற்கு இதுபோன்ற ஒரு பயண அனுபவத்தைக் கொண்டு சங்க இலக்கியம் குறுந்தொகையில் அழகான பாடல் ஒன்று இருக்கிறது.

ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோள்
பேரமர்க் கண்ணி யிருந்த ஊரே
நெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனந்து
ஓரேர் உழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே.

பொருள்.

அசைகின்ற மூங்கிலைப் போன்ற அழகையும், பருத்த தோளையும், பெரிய
போர்புரியும் கண்களையும் உடைய தலைவி இருக்கும் ஊர், அடைவதற்கு வெகு தொலைவில் உள்ளது. எனது நெஞ்சம், ஈரத்துடன் உழுவதற்கு ஏற்ற பக்குவத்தில் உள்ள பசுமையான நிலத்தையுடைய ஒற்றை ஏரையுடைய உழவனைப்போல மிகவும் விரைகிறது. அதனால் நான் வருந்துகிறேன்.

இந்த பாடல் பாலை நிலத்தை சொந்தமாக கொண்ட தலைவனின் கூற்றாக அமைந்திருக்கிறது. பாலை நிலத்தில் பொருளீட்டுதல் என்பது சற்று கடினமானதே ஆகும். அதனால் தலைவன் தலைவியை பிரிந்து பிழைப்பிற்காக வேறிடத்திற்கு சென்று மீண்டும் ஒரு நன்நாளில் (பொங்கல் பண்டிகை என வைத்துக் கொள்ளுங்களேன்) தன் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறான். வழியில் அவனது பயணம் சற்று தாமதமாக நொந்துபோன அவன் தலைவியை கொஞ்சம் புகழ்ந்து (காதலாயிற்றே) அவளைப் பார்க்க கண்களுக்கு தாமதமானாலும் மனம் ஓரேர் உழவன் போல விரைகிறது என பாடுகிறான்.

ஓரேர் உழவன் என்பவன் ஒரே ஒரு ஏரைக் கொண்டு நிலத்தை உழுபவன் (ஒரு ஏர் உழவன்). அதாவது நிலம் ஈரப்பதத்தை இழப்பதற்குள் அதனை எப்படியாவது உழுது செப்பனிட வேண்டும் என நினைக்கும் அவன் மற்றவர்களைவிட விரைவாக அதனை செய்து முடிப்பான். அத்தகைய உழவனின் மனம்தான் நீண்ட நாட்களாக தலைவியை பிரிந்த தனக்கும் தற்போது இருக்கிறது என உவமையாக தலைவன் இந்த பாடலை பாடியிருக்கிறான். இந்த சங்க இலக்கிய பாடல் கற்பனையும், உவமையையும் கொண்டிருந்தாலும் தற்காலத்திற்கும் அந்த கடைசிநேர பயணத்திற்கும் அழகாக பொருந்துகிறது.