கேப்டன் மகள்.



ரலாற்றை நேரடியாக வாசிப்பதை விட Fiction என சொல்லக்கூடிய கற்பனை கலந்த புனைவுக் கதையின் மூலம் தெரிந்துகொள்வது அலாதியானது. அதிலும் அந்த புனைவுக்கதை இலக்கிய நடையுடன் சொல்லப்பட்டால் அது தலைசிறந்த படைப்பாக அமைந்து விடுகிறது. தமிழில் அமரர் கல்கி எழுதிய பொண்ணியின் செல்வன் என்ற புதினத்தை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். அது போன்ற ஒரு சிறிய படைப்புதான் ரஷ்ய இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும் அலெக்சாந்தர் பூஷ்கின் எழுதிய இந்த நாவல் கேப்டன் மகள்.

இந்த நாவல் கி.பி 1744 முதல் 1775 வரை ரஷ்யாவில் யெமெல்யான் புகச்சோவ் என்பவர் தலைமையில் நிகழ்ந்த வலிமையான விவசாயிகளின் எழுச்சியை பின்னணியாக கொண்டு அமைக்கப் பட்டிருக்கிறது. ரஷ்ய மன்னர் மூன்றாம் பீட்டர் மறைவுக்குப் பின் அவரது மனைவி கேத்தரீன் ஆட்சிக்கு வந்த காலம் ரஷ்யா முழுவதும் பண்ணையடிமை முறையை எதிர்த்து புரட்சி தொடங்கியது. அதில் புகச்சோவ் தலைமையேற்ற புரட்சி தீவிர மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் புகச்சோவ் ஆளும் வர்கத்தினருக்கும் முதலாளிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஆனால் வெகுஜன மக்களுக்கு அவர் இரட்சகனாக தோன்றினார். அவரது அறிவு, மதிநுட்பம், வீரம், மனிதாபிமானம், புரட்சி தந்திரம் அனைத்தும் அவர்களிடத்தில் கதைகதையாக சொல்லப்பட்டு வந்தன. தமக்கென அதிகாரத்தையும் சட்டதிட்டங்களையும் வைத்துக்கொண்டு அரசிற்கு எதிராக கிளர்ச்சி செய்த அவர் தனது 33 ஆம் வயதில் 1775 ஆண்டு மாஸ்கோவில் தலை தூண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இருந்தும் அவர் ரஷ்ய அரசியலில் வரலாற்று மாற்றத்தை விதைத்துவிட்டுச் சென்றார்.

இந்த நாவல் பியோத்தர் அந்திரேயெவிச் எனும் இளம் இராணுவ வீரன் ஒருவனின் வழியாக பயணிக்கிறது. ஓரளவிற்கு வசதி நிறைந்த, அரசாங்கத்திற்கு விசுவாசமான பரம்பரையைச் சேர்ந்த பியோத்தர் தன் தந்தையின் கட்டளையின்படி இராணுவத்தில் சேர்கிறான். ரஷ்யாவின் ஓரென்புர்க் நகரத்திற்கு அருகில் உள்ள பெலகோர்ஸ்க் கோட்டைக்கு அனுப்பப்படும் அவன் அந்த கோட்டையை பாதுகாக்கும் தன் தந்தையின் நண்பரான கேப்டன் மிரோனவ் என்பவரின் கீழ் பணியாற்றத் தொடங்குகிறான். கேப்டனின் மணைவி மற்றும் அந்த கோட்டையில் இருப்பவர்களிடம் நன்முறையில் பழகும் பியோத்தர் கேப்டனின் மகளான மார்யா இவானவ்னா என்ற மாஷாவை காதலிக்கிறான். இதற்கிடையில்  ரஷ்யாவின் கிராமங்களில் புரட்சி தொடங்க விவசாயிகள் மற்றும் கஸாக்குகள் என அழைக்கப்படுபவர்கள் இணைந்த புரட்சிப்படை புகச்சோவ் தலைமையில் பெலகோர்ஸ்க் கோட்டையை தாக்குகிறது. கோட்டை வீழ்ந்த நிலையில் கேப்டன் மற்றும் அவரது மணைவி, அங்கிருந்த காவலர்கள் அனைவரும் கொள்ளப்படுகின்றனர். கேப்டனின் மகள் தேவாலய பாதிரியார் ஒருவரின் வீட்டில் பாதுகாப்பாக மறைந்து கொள்ள, பியோத்தர் உயிருடன் பிடிபட்டு தண்டனைக்காக புகச்சோவ் முன்னால் நிறுத்தப்படுகிறான். ஆனால் பியோத்தர் முன்பு ஒருமுறை தான் செய்த சிறு உதவிக்காக புகச்சோவால் மன்னிக்கப்பட்டு நகரத்திற்கு அனுப்பப்படுகிறான். நகரத்திற்கு செல்லும் பியோத்தர் அங்கிருக்கும் மற்றொரு படைப்பிரிவில் இணைகிறான். நாட்கள் நகர தன் காதலியின் பிரிவால் வாடும் அவன் அவளை மீட்க பெலகோர்ஸ்க் கோட்டையை நோக்கிச் செல்கிறான். செல்லும் வழியில் புரட்சியாளர்களால் பிடிபட மீண்டும் அவன் புகச்சோவின் முன்னால் நிறுத்தப்படுகிறான். இந்த முறையும் அவன் முன்பு செய்த நற்செயலால் தண்டனையிலிருந்து தப்பிக்கிறான். மேலும் புகச்சோவின் நட்பையும் பெறுகிறான். இதுதான் தக்க தருணம் என புகச்சோவிடம் கொண்ட நட்பைக் கொண்டு தன் காதலியை மீட்க துணிகிறான். தன் காதல் ஒருபுறம், நாட்டைக் காக்கும் கடமை ஒருபுறம், பெருந்தன்மையால் பெற்ற நட்பு ஒருபுறம் இருக்க பியோத்தர் தன் காதலியை மீட்டானா? புகச்சோவ் என்ன ஆனார்? புகச்சோவ் மன்னித்து நண்பனாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பியோத்தர் செய்த நற்செயல் என்ன? என்பதுதான் இந்த நாவலின் மீதிக்கதை.

இந்த நாவல் ஒரு கற்பனை நிறைந்த காதல் கதை என்றாலும் சில பகுதிகள் துல்லியமாகவும், வரலாற்று உண்மையாகவும், கலைப்பூர்வமாகவும், இருப்பதை உணர முடிகிறது. இதில் வரும் கதாபாத்திரங்கள் கேலியாக தோன்றினாலும் ரஷ்யாவில் அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களை கண்முன்னே நிறுத்துகிறது. இந்த நாவலின் கதாநாயகன் பியோத்தர் என்றாலும் புகச்சோவ் அதனை விஞ்சும் அளவிற்கு தலைவராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ரஷ்ய இலக்கியத்தில் பெறும் தாக்கத்தை உருவாக்கிய அலெக்சாந்தர் பூஷ்கின் வாழ்ந்த காலமும் புகசோவ் வாழ்ந்த காலமும் வெவ்வேறாயினும் 1744 - 1775 காலகட்டத்தின் ரஷ்யாவின் தெளிவான வரலாற்றை அறிந்து கொள்ளவும் யெமெல்யான் புகச்சோவ் பற்றி தெரிந்து கொள்ளவும் இந்த நாவல் உதவுகிறது. புகச்சோவினால் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலையான விவசாயி எல்.க்ருபென்னிகோவ் என்பவரை துணையாகக் கொண்டு அவரிடம் விவரங்களை கேட்டறிந்து பூஷ்கின் இந்த நாவலை 1836 ஆம் ஆண்டு எழுதியதாக கூறப்படுகிறது. வரலாறு, உரைநடை இலக்கியம், உலக புகழ்பெற்ற கிளாசிக் படைப்பு இவற்றோடு அடுத்தது என்ன? என விறுவிறுப்போடு பயணிக்கும் இந்த நாவலை வாசிக்கத் தவறாதீர்கள்.

A little animation story of Captain Daughter.