சிறைச்சாலை.




குறைந்தது பன்னிரண்டு மணிநேர நல்ல தூக்கம், விடிந்தால் உடல் அசராத வேலை, முட்டை இறைச்சி என அசைவத்துடன் மணியடித்தால் சோறு, குடும்பம் உறவுகள் சமுதாய தொல்லைகள் அருகில்லாத சன்னியாசி வாழ்வு , இவை அனைத்தும் சிறைச்சாலைகளில் சாத்தியம். அதிலும் அரசியல் கைதி என்றால் ஏசியரை, தொலைக்காட்சி, இன்டர்நெட், பத்திரிக்கைகள், வீட்டு சாப்பாடு, வாரம் ஒருமுறை வெளியில் சென்று ஹாயாக ஷாப்பிங் செய்துவிட்டு பாப்கார்ன் கொறித்துக்கொண்டே திரும்பவரும் சலுகைகள் என அனைத்தும் அங்கு கிடைக்கும். வெளியில் இருப்பதைவிட உள்ளிருப்பது ஏகவாழ்க்கை நிறைந்தது என்பதற்கேற்ப சிறைச்சாலைகள் நவீனமாக மாற்றப்பட்டுவிட்டன. வெளிவரும்போது சுயசரிதை இலக்கியவாதி கூட ஆகலாம்.


சிறைச்சாலை என்றதும் நமக்கெல்லாம் அந்தமான் சிறையும் ஹிட்லரின் யூத சிறைச்சாலையும் நினைவுக்கு வரும். இவை இரண்டும் இரத்தம் தோய்ந்த சரித்திரங்களை கொண்டது. மேலும் பெங்களூரு பார்பன அக்ரஹார சிறையும் நினைவுக்கு வந்தால் நீங்கள் அப்டேட்டில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.  மொசபடோமியா நாகரீகத்தில் பாபிலோன் என சொல்லக்கூடிய பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சுவர் ஒன்றில் உள்ள குறிப்புகளில் கி.மு 1750 ஆம் ஆண்டில் சிறைச்சாலை இருந்ததிற்கான பழமையான ஆதாரம் இருக்கிறது. அதற்கு பின்பு கி.பி காலத்தில் 1403 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் சிறைச்சாலைகள் நிறுவப்பட்டன. 1550 ஆம் வருடத்தில் அந்த சிறைச்சாலைகள் மேம்படுத்தப்பட்டு Work House என அழைக்கப்பட்டு வந்தன. பிச்சைக்காரர்கள், கடன்காரர்கள், வேலை இல்லாத வெட்டி ஆபிஸர்கள், சிறுசிறு குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு House of Corrections ஆக அது விளங்கியது. பின்வரும் காலங்களில் சிறைச்சாலைகள் கொடூரமாக மாற்றப்பட்டும் முன்பு குறிப்பிட்டதுபோல்  வசதிக்கேற்ப நவீனமாக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அத்தகைய சிறைச்சாலையைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல் ஒன்றில் இடம் பெற்றுள்ளது. அதில் சேர மன்னன் கணக்கால் இரும்பொறை என்பவன் இருந்ததாகவும் பின்பு அங்கேயே அவன் இறந்ததாகவும் உள்ளது. இதன் காலம் கி.மு 3 அல்லது 125-150 ஆம் நூற்றாண்டு என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

சேரர்களின் இரும்பொறை என்னும் வம்சத்தை சேர்ந்த கடைசி மன்னன் இந்த கணக்கால் இரும்பொறை. கணைய மரத்தைப் போல வலிய கால்களை உடையவன் என்பதால் அவனுக்கு இந்த பெயர் வந்தது. தனது முன்னோர்கள் வழியில் ஆட்சி செய்துவந்த அவனுக்கும் சோழ மன்னன் செங்கணான் என்பவனுக்கும் பகை மூண்டது. இருவரும் பெரும்படையுடன் கழுமலம் என்னும் ஊரில் (இன்றைய சீர்காழி) சண்டையிட்டு கொண்டனர். போர் நடந்த இடம் குணவாயிற் கோட்டம் என்றும் திருப்போர்புரம் (திருப்பூர்) என்றும் வெண்ணிப் பறந்தலை என்றும் முரணான குறிப்பு உள்ளது. இறுதியில் போரில் சோழ மன்னன் வெற்றி பெற தோல்வியுற்ற கணக்கால் இரும்பொறை உறையூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டான். ஒருநாள் சிறையில் அவனுக்கு பசியும் தாகமும் எடுக்க காவலர்களிடம் உணவு வேண்டினான். அவர்கள் அதனை அலட்சியமாக காலம் தாழ்த்தி சிறிதளவு கொடுக்க Ex மன்னனாக இருந்த இரும்பொறைக்கு அவமானம் தாங்க முடியாமல் போனது. அதனை நினைத்து மனம் நொந்து தன் கடைசி ஸ்டேட்டஸாக ஒரு பாடலை எழுதி வைத்துவிட்டு அங்கேயே அவன் இறந்து போனான். அந்த பாடல் வேந்தனின் உள்ளம் என புறநானூற்றில் உள்ளது. கணக்கால் இரும்பொறைக்கு பொய்கையார் என்ற புலவர் நண்பனாக இருந்ததாகவும் அவருக்கு சிறையிலிருந்த படி அவன் இந்த பாடலை எழுதி ஷேர் செய்ததாகவும் அதனைக் கொண்டு புலவர் அவனை சிறையிலிருந்து மீட்டதாகவும் களவழி நாற்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எது எப்படியோ சிறைச்சாலையிலிருந்து ஒரு இலக்கிய பாடல் நமக்கு கிடைத்திருக்கிறது. அந்த பாடல் சங்ககால மக்களின் வீரத்தையும் போற்றுகிறது. அந்த பாடல்

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீ இய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே?

பொருள்.

எங்கள் குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் அல்லது பிறந்து இறந்தாலும் உருவமற்ற தசைப் பிண்டமாக பிறந்தாலும் அதனை ஒரு ஆள் அல்ல என்று புதைப்பதற்கு முன் வாளால் அதன் மார்பில் வெட்ட தவறமாட்டார்கள். ஆனால்! நானோ அந்தக் குடியில் பிறந்திருந்தாலும் போரில் வீர மரணம் அடையாமல் நாய் போல சங்கிலியால் கட்டப்பட்டு பசியைப் போக்க என்னை துன்புறுத்திய பகைவர்களிடம் மன வலிமையின்றி உணவு வேண்டும் என கேட்க அவர்கள் அளித்த சிறிய ஊணவையும் நீரையும் உண்ணும் நிலையில் இருக்கிறேன். இப்படி நான் வாழ்வதற்காக இவ்வுலகில் என் பெற்றோர்கள் பெற்றார்களா?