பயண சரித்திரம்.



இன்றைய மனிதன் நிலவில் கால் வைத்து செவ்வாயைத் தாண்டி வியாழனுக்கு விண்வெளியில் பயணிக்கத் தொடங்கிவிட்டான். பூமியைப் போல வேறுகிரகங்கள் இருக்கிறதா? அங்கு மனிதர்களைப் போல யாராவது (எதாவது) வாழ்கிறார்களா? அப்படியிருந்தால் அவர்களையும் நம் வழிக்கு கொண்டுவந்துவிடலாம் என்ற நோக்கில் விஞ்ஞானமும் வளர்ந்து விட்டது. பூமி கிரகத்தை எடுத்துக்கொண்டால் இங்கு ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு பதினேழு மணிநேரத்தில் சென்றுவிடும் வசதி வாய்ப்புகள் இருக்கிறது. காலையில் உடுமலைப்பேட்டையில் உளுந்துவடை சாப்பிட்டுவிட்டு புறப்பட்டால் மாலையில் உகாண்டாவில் உடும்புக்கறி சாப்பிடலாம். அதிலும் எந்த ஹோட்டலில் உடும்புக்கறி நன்றாக இருக்கும்? அது எந்த தெருவில் இருக்கிறது? அங்கு எப்படி செல்வது? என்பதையெல்லாம் கூகுள் மேப் காட்டிவிடும். சொல்லப்போனால் விஞ்ஞானம் வளர பயணங்கள் சுருங்கிவிட்டன. ஆனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பயணங்கள் என்பது கண்ணைக்கட்டி கடலில் விட்ட கதைதான்.
      
இரண்டாயிரம் வருடங்கள் பின்னோக்கிச் சென்று பார்த்தால் மனிதன் ஒரு சிறிய இடத்தில் இதுதான் உலகம் என வாழ்ந்து வந்தான். கடலில் இருக்கும் கண்ணிற்கு எட்டிய தொலைவோடு இந்த உலகம் முடிகிறது என அவன் நம்பிக் கொண்டிருந்தான். கடலுக்கு அப்பால் ராட்சத மனிதர்களும் விலங்குகளும் கொடிய நிலப்பரப்பும் இருக்கிறது என்ற பயம் அவனுக்கு இருந்தது. மேலும் இந்த பூமி உருண்டையா தட்டையா செவ்வகமா அல்லது சேட்டுக்கடை சமோசா போல முக்கோண வடிவமா என்பதெல்லாம் அவனுக்கு தெரியாமல் இருந்தது. பின்வந்த காலங்களில் அவற்றை தெரிந்துகொள்ளும் பொருட்டு அவன் தன் பயணத்தை தொடங்கினான். புதுபுது கண்டங்கள், அதன் தேசங்கள், அங்கிருக்கும் இயற்கைகள், ஆளும் ராஜ்ஜியங்கள், அதன் மக்கள், மக்களின் நாகரீகங்கள் என அவனது பயணத்தில் உலகம் விரியத் தொடங்கியது. வியாபாரமும் கலாச்சாரமும் நாகரீகமும் வளரத் தொடங்க உலகின் ரகசியங்களும் அப்போதுதான் பிடிபட ஆரம்பித்தது. மனிதனின் ஆரம்பகால துணிச்சலான அத்தகைய பயணங்களே உலக வரைபடத்திற்கு உயிர் கொடுத்து இன்றும் நாம் சொகுசாக அனுபவிக்கும் விஞ்ஞானத்திற்கும் வழிவகுத்தது. பல சோதனைகள், சாகசங்கள்,  சாவால்கள், உயிரிழப்புகளுடன் நிகழ்ந்த ஆதி மனிதனின் அந்த ஆரம்பகால பயண சரித்திரத்தை இந்த புத்தகம் அழகாக விவரிக்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கடல் பயணங்களில் சூராதி சூரர்களாக விளங்கிய பாலிநேசியர்கள், கூடை பின்னுவதைப் போல எளிமையாக அழகாக கப்பல் கட்டுவதில் கைதேர்ந்த பெனிஸீயர்கள், சூரியன் எங்கு உதிக்கிறது என கண்டறிய புறப்பட்ட தி கிரேட் அலெக்ஸாண்டர், புத்தரின் பிறப்பு மற்றும் ரகசியங்களைத் தேடி ஞானத் தேடலுடன் கால்போன போக்கில் தனி ஒருவனாக அலைந்து திரிந்த ஃபாஹியான் மற்றும் யுவான் சுவாங், டிராகன் தலை கொண்ட படகுகளை வைத்துக் கொண்டு கடல் கொள்ளையர்களாக தண்ணிகாட்டிய வைகிங்குகள்,  ஐரோப்பாவில் தொடங்கி அமஞ்சிக்கரை வரை செல்ல அந்த காலத்தில் தெளிவான ரூட்போட்டு கொடுத்த மார்க்கோபோலோ, புனிதப் பயணம் போகிறேன் பேர்வழி என சென்ற இடத்திலெல்லாம் தன் வம்சத்தையும் வரலாற்று சாட்சியத்தையும் விதைத்துவிட்டு ஆசிய ஆப்பிரிக்க தேசமெல்லாம் சுற்றிய இபின் பாதுஷா, இதுவரைக்கும் நாம் கேள்விப்படாத ஸெங் ஹே போன்ற சில பயணிகள் என மொத்தம் ஒன்பது பகுதிகளாக இந்த புத்தகத்தில் பயண சரித்திரம் சொல்லப்படுகிறது.
  • பயண சரித்திரம்
  • முகில்
  • சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்
புராணங்கள் மற்றும் வாய்வழி கதைகள், தொல்பொருள் ஆராய்ச்சிகள், பயணிகளின் நாட்குறிப்புகள் என வரலாற்று சான்றுகளை அலசி ஆராய்ந்து தனது வழக்கமான எழுத்துக்களுடன் முகில் இந்த பயண சரித்திரத்தை படைத்திருக்கிறார். ஆதியில் தொடங்கி சுவாரசியமாக போகும் இதனை பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டதோடு அவர் நிறுத்தி கூடிய விரைவில் இரண்டாம் பாகத்தில் பயணங்கள் தொடரும் என ஆவலுடன் நிறைவு செய்திருக்கிறார். காசிக்கு சென்றேன், கங்கையில் குளித்தேன், அகோரிகளை சந்தித்தேன், கஞ்சா இழுத்தேன் என கிறுக்கித் தள்ளும் இலக்கியவா(ந்)தி கட்டுரைகளை தவிர்த்துப் பார்த்தால் தமிழில் பயணங்களைப் பற்றிய எளிமையாக யாவருக்கும் விளங்கும் புத்தகம் எதுவும் இல்லை என்ற குறை இருந்தது. பயணச் சரித்திரம் என்ற இந்த புத்தகம் அந்த குறையை போக்குகிறது. தவறாமல் வாசித்துப் பாருங்கள்.