கண் தெரியாத இசைஞன்.



நடைபாதைகளில் ஊதுபத்தி அல்லது கீ செயின் விற்பவர்கள், சிக்னலிலும் மின்சார இரயிலிலும் பழைய பாடல்களைப் பாடி யாசகம் கேட்பவர்கள், சுரங்கப்பாதையிலும் சந்தைப் பகுதியிலும் புல்லாங்குழல் அல்லது ஆர்மோனியம் வாசிப்பவர்கள், மேலும் பல தருணங்களில் சிலர் என பார்வையற்றவர்களை நம் வாழ்வில் சந்தித்திருப்போம். சில  சில்லரைகளையும் அனுதாபங்களையும் வீசிவிட்டு கடந்துபோகும் நமது பார்வையில் அவர்களது வாழ்க்கை மிக சிறியதாகவும் இருள் நிறைந்ததாகவும் தோன்றக் கூடும். ஆனால் அவர்களின் உலகம் நம்மை விட பறந்து விரிந்தது அதைவிட மிகத் தெளிவானது. பார்வையற்றவர்களுக்கு காதுகளே கண். ஒளியை அவர்கள் ஒலியாக உணர்கின்றனர். மேலும் வாசனையாலும் தொடு உணர்வு ஸ்பரிஸ்சத்தாலும் கற்பனையில் இந்த உலகை அவர்கள் காண்கிறார்கள். அந்த ஒலியில் உணர்வில் கற்பனையில் சாதித்த பார்வையற்றவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அப்படி இசையில் சாதித்த பார்வையற்ற ஒருவனின் கதைதான் இந்த புத்தகம் "கண் தெரியாத இசைஞன்".  

ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் பணக்கார குடும்பம் ஒன்றில் நள்ளிரவில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையின் தாய் ஈன சுரத்தில் மயங்கிக் கிடக்க ஓயாது ஒலிக்கும் குழந்தையின் அழுகுரல் கேட்டு திடுக்கிட்டு விழிக்கிறாள். உடல் வலியால் முணகிய படி குழந்தை ஏன் இப்படி அழுகிறது? என தன்னை கவணிக்கும் தாதியிடம் அவள் கேட்கிறாள். எல்லாம் இயற்கை என தாதியிடமிருந்து பதில் வர, குழந்தை அழுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் பிறந்து தவழ்ந்து வளர்ந்து தளர்ந்து கடைசியில் இடுகாடு வரை செல்லும் இன்ப துன்பம் நிறைந்த வாழ்வியலுக்கு அஞ்சியே அழுகையுடன் பிறக்கிறது. அதிலும் இந்த குழந்தையின் அழுகை அந்த இளம் தாய்க்கு இனம் புரியாத அச்சத்தைக் கொடுக்கிறது. அவள் மீண்டும் மீண்டும் தாதியிடம் அந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கிறாள்.

குழந்தை ஏன் இப்படி அழுகிறது?.

நாட்கள் நகருகிறது. பிறந்த குழந்தைக்கு பார்வை முதலில் மங்கலாகத் தெரியும் என்பதை கடந்து அந்த குழந்தையின் வெறித்த பார்வையின் மீது தாய்க்கு சந்தேகம் எழுகிறது. ஒருவேளை அப்படி இருக்குமோ என்ற அவளது கலக்கம் பின்நாட்களில் உறுதியாகிறது.

குழந்தை பிறவியிலே குருடு.

குணப்படுத்த இயலாது பார்வையற்றவனாய் பிறந்த அந்த குழந்தையோடு சேர்ந்து அந்த மிகச் சிரிய குடும்பத்தின் சந்தோசமும் இருளில் மூழ்குகிறது. பியோதர் என பெயர் சூட்டப்பட்ட அந்த குழந்தையின் குறையை அதற்குத் தெரியாமல் வளர்க்க அவள் தாய் முடிவு செய்கிறாள். குழந்தை பியோதரும் ஒலியால் உணர்வுகளை உறவுகளை தெரிந்து கொள்கிறான். அவனது தாயையும் தவிர்த்து கோபக்காரராக கருதப்படும் அவனது மாமா, ஒலியின் வடிவில் கலையையும் இலக்கியத்தையும் நாட்டின் வரலாற்றையும் வேறு மொழிகளையும் அவனுக்கு கற்றுத் தருகிறார். மேலும் அவன் தன் வீட்டில் வேலை செய்யும் குதிரை லாயக்காரன் மூலம் புல்லாங்குழல் இசையை முதன்முதலாக உணர்கிறான். அதனில் மனதை பறிகொடுக்கும் அவன் இசையில் கவணம் செலுத்தி தான் இதுவரை உணர்ந்த நுண்ணிய ஒலிகளை இசையாக பார்க்கத் தொடங்குகிறான். இசையில் ஆர்வமுற்ற பியோதருக்கு அவனது தாய் பியானோ ஒன்றை பழக்குகிறாள். பியோதரின் இருண்ட உலகம் இசையால் நிறைய அவனது வாழ்வில் தன் சக வயதை ஒத்த சிறுமி ஒருத்தி நுழைகிறாள். தனது தாய், தாய் மாமன், குதிரை லாயக்காரன், தன் தோழி, தனக்கு தெரிந்த இசை என தன்னைச் சுற்றியிருப்பவைகளோடு பியோதர் ஒலியால் அதன் உணர்வால் இந்த உலகை காண்கிறான். அவற்றோடு வளர்ந்து கண் தெரியாத இசைஞனாய் தன் முதல் இசை அரங்கேற்றத்தை நிகழ்த்துகிறான்.

1886 - ஆம் ஆண்டு ரஷ்யாவில் வெளிவந்த 'ருஸ்கியே வேடமோஸ்தி' என்ற பத்திரிக்கையில் தொடராக வெளிவந்த இந்த கதையை 'விளாதிமிர் கலக்தியோனவிச் கொரலென்கோ' என்பவர் எழுதினார். கட்டுரைகள், விமர்சன கடிதங்கள், நாட்குறிப்புகள், சிறுகதைகள் என தன் எழுத்தால் ரஷ்யா மட்டுமல்லாமல் உலக இலக்கியத்திற்கும் பங்காற்றிய அவரின் சிறந்த படைப்பு இந்த கதை கண் தெரியாத இசைஞன். விளாதிமிர் கொரலென்கோ தன் வாழ்நாளில் இந்த கதையை பலமுறை திருத்தம் செய்து பல பத்திரிக்கைகளில் வெளியிட்டிருக்கிறார். அவரது படைப்பு திருத்தம் மற்றும் மொழியைத் தாண்டி நூற்றாண்டு கடந்து சுவை மாறாமல் அப்படியே இருக்கிறது. இது ஒரு கற்பனைக் கதை என்றாலும் ஒளியைத் தேடும் வேட்கை கொண்ட பார்வையற்றவர்களின் வாழ்க்கையை அது நம் முன் நிறுத்துகிறது. பியோதர் என்ற கண் தெரியாத ஒருவனோடு பயணிக்கும் கதை அவனுக்கு கிடைத்த அதிஷ்டங்களோடு மனித தன்மையையும் மகிழ்ச்சியையும் அதை அடையக் கூடிய வழிகளையும் அலசிப் பார்க்கிறது. மேலும் இந்த கதை பார்வையற்றவர்களின் அக உலகத்தில் கலைநயமிக்க சொற்களுடன் ஊடுருவிப் பார்க்கிறது. இந்த புத்தகத்தின் கதையை வாசித்த பின் நடைபாதைகளிலோ, சிக்னலிலோ, மின்சார இரயிலோ, வேறு சில இடங்களிலோ நாம் சந்திக்கும் பார்வையற்றவர்களின் பிம்பம் நிச்சயம் மாறக்கூடும். தவறாமல் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.