ட்வீட்டியும் சில்வெஸ்டரும்.

டாம் & ஜெர்ரி, ரோட் ரன்னர் & ஈகொயோட், பாப்பாய் & ப்ளூட்டோ வரிசையில் பிரபலமான எதிரும் புதிருமாக முட்டிக்கொள்ளும் கார்டூன் கதாபாத்திரம் என்றால் ட்வீட்டி & சில்வெஸ்டரை சொல்லலாம். வார்னர் பிரதர்ஸின் லூனி டூன்ஸ் கார்டூன் தொடரில் எப்போதாவது இந்த ஜோடி சேட்டை செய்வதை காணலாம். ட்வீட்டி ஒரு மஞ்சள் நிற தேன்சிட்டு பறவை. கொஞ்சம் வெகுளி மற்றும் அப்பாவியான அது 1942 -ல் எ டேல் ஆஃப் டூ கிட்ஸ் என்ற கார்டூனில் முதன் முதலாக அறிமுகமானது. ஆரம்பத்தில் தனியாகவும் மற்ற லூனி டூன்ஸ் கதாபாத்திரங்களுடனும் நடித்து வந்த அது 1947-ல் சில்வெஸ்டருடன் முதன் முதலாக இணைந்தது. சில்வெஸ்டர் ஒரு கருப்பு நிற காட்டுப்பூனை. டாமிற்கெல்லாம் அண்ணனான அது 1945 -ல் லைப் வித் ஃபெதர்ஸ் என்ற கார்டூனில் அறிமுகமாகி பின்பு ட்வீட்டியுடன் இணைந்து சண்டைபோட்டு அடிஉதை வாங்கி ரசிக்க வைத்தது. இந்த ஜோடியை ரசிக்காத கார்டூன் ரசிகர்கள் இல்லை என சொல்லலாம். அதிலும் ட்வீட்டி நமக்கு நன்கு பரிச்சியமானதே. சாதாரண கார்டூனாக 1996 வரை கலக்கிய இந்த ஜோடி தற்போது 3D தொழில்நுட்பத்தில் கார்டூன் நெட்வொர்க் சேனலில் அரிதாக காணமுடிகிறது.


அறுபதை சராசரி வைத்தால்கூட அரை வாழ்க்கை வாழ்ந்தாகியாயிற்று. இருந்தும் இன்னுமும் சிறுபிள்ளைத்தனம் குறையவேயில்லை. அந்த சிறுபிள்ளைத்தனத்தோடு தொலைக்காட்சி சேனலாகட்டும் திரைப்படங்களாகட்டும் அடியேனின் தேடுதல்களில் முதல் சாய்ஸ் கார்டூன்கள்களாக இருக்கும். அத்தகைய தேடுதலின் போது எதேச்சையாக இந்த ஜோடி கிடைத்தது. அடடா! எப்போதோ பார்த்து ரசித்தது என கிடைத்ததையெல்லாம் அள்ளிப்போட்டு நிரப்பி வைக்கும் இந்த பக்கங்களில் அவற்றை சேமித்து வைக்கவும் தோன்றியது. அப்படி அடியேன் சேமித்த ட்வீட்டி & சில்வெஸ்டர் கார்டூன்கள் சில தங்களின் பார்வைக்கும்.