கடைசி முகலாயன்.



கி.பி.1857 -ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் நாள் மீரட் நகரில் தொடங்கிய சிப்பாய் கிளர்ச்சி அல்லது சிப்பாய் கலகமே இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சுதந்திரம் என தொடங்கப்பட்ட முதல் போராட்டமாக கருதப்படுகிறது. மீரட்டில் தொடங்கிய இந்த போராட்டம் மத்திய மலைப் பகுதியின் வழியாக உ.பி, ம.பி என கடந்து டெல்லி வரை பரவியது. டெல்லியில் பரவிய போராட்டத்தை கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசு அப்போது தளபதி "வில்லியம் ஓட்சன்" என்பவரை நியமித்திருந்தது. அவரது தலைமையிலான படை டெல்லி முழுவதும் தேடுதல் வேட்டை தொடங்க கலவரக்காரர்கள் பலர் கொல்லப்பட்டனர் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இறுதியில் டெல்லியில் ஏற்பட்ட கலவரத்திற்கு பொருப்பாக கருதப்பட்ட அந்த முக்கிய நபர் ஹிமாயூன் கோட்டையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்க ஆங்கிலேய படை அந்த கோட்டையையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. அதிலும் ஆங்கிலேய படையே வெற்றி பெற ஹிமாயூன் கோட்டையிலிருந்து அந்த முக்கிய நபரை கைது செய்து இழுத்து வந்தனர்.

அந்த முக்கிய நபருக்கு வயது 82 இருக்கும் ஏற்கனவே முதுமையில் வலுவிழந்த அவரை தளபதி வில்லியம் ஓட்சன் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். அவர்மீது ஏதோ கருணை கொண்ட ஆங்கிலேய நீதிமன்றம் பெரிய தண்டனை எதுவும் கொடுக்காமல் அவரை பர்மாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. அவரும் வேறு வழியில்லாமல் வலியோடு தனது மனைவிகளில் ஒருவரான "பேகம் சீனத் மஹல்" என்பவரை கூட்டிக்கொண்டு பர்மாவிற்கு சென்றார். ஆங்கிலேய அரசு அவருக்கு கொஞ்சம் மாதா மாதம் கருணைத் தொகையும் வழங்க சில வருடத்தில் அந்த முக்கிய நபர் கவலைப்பட்டே இறந்து போனார். அவரது கவலைக்கு காரணம் இருந்தது. அவரது முன்னோர்கள் கணவாய் வழியே நுழைந்தாலும் இவர் பிறந்து தவழ்ந்து வளர்ந்து தளர்ந்தது எல்லாமே இந்தியாவில்தான். இந்தியாதான் அவருக்கு தாய்நாடு தந்தைநாடு ஒன்றுவிட்ட பெரியப்பா சித்தப்பா அத்தைநாடு எல்லாமுமே. அதுமட்டுமில்லாது அவரது முன்னோர்கள் பலர் இந்தியாவின் பல பகுதியை ஆண்டிருக்கின்றனர் ஏன்! இந்தியாவையே ஆள நினைத்திருக்கின்றனர். இந்தியாவின் தலை-மையாக கருதப்பட்ட டில்லி இவர்களின் வம்சாவழியின் கட்டுப்பாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு மேலாக இருந்தது. மேலும் இவரது வம்சா வழியைச் சேர்ந்தவர்கள் பலர் புகழ்பெற்றவர்களாய் வாழ்ந்து டெல்லியிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் உள்ள சமாதிகள் மசூதிகள் மற்றும் நினைவு மண்டபங்களில் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் அவரது முன்னோர்கள் ஒருவரின் கள்ளக் காதலிக்கு உலகமே அதிசயமாக போற்றும் நினைவுச் சின்னம் கூட இருக்கிறது. அந்த முக்கிய நபருக்கும் வயதான நிலையில் தாமும் அதுபோல் இந்தியாவில் அதுவும் டெல்லியில் அதைவிட டெல்லியில் உள்ள சஃபர் மஹாலில் சமாதியாகும் கனவு இருந்தது. அதற்குள் சுதந்திரம் சிப்பாய் கலகம் ஈரவெங்காயம் என வாழ்க்கை நகர அவரது கனவு கனவாகவே முடிந்தது. இத்தனைக்கும் அவர் ஆங்கிலேயர்களிடம் பிடிபடும் வரை பல வருடங்களாக டெல்லியை ஆண்டு கொண்டிருந்தார். தன் முன்னோர்களைப் போல டெல்லியை அவரும் கைக்குள் வைத்திருந்தார்.

கி.பி.1838 ஆம் ஆண்டு முதல் டெல்லியை ஆண்ட இவருக்கு தன் முன்னோர்களைப் போல ஒட்டுமொத்த இந்தியாவை ஆளும் ஆசையெல்லாம் ஒன்றும் கிடையாது. தினமும் அரண்மனையும் அந்தப்புரமும் சுத்தபத்தமாக இருக்கிறதா? வேளா வேளைக்கு சாப்பாடு தயாராகிறதா? தினசரி நாளிதழ்களைப் போல் வழுக்கி விழுந்தவர்கள் ஓடிப்போனர்வர்கள் உருண்டு விழுந்தவர்களின் சுவாரசிய வழக்கு செய்தி ஏதாவது இருக்கிறதா? என பார்த்துவிட்டு அக்காடா என ஐந்தாறு மனைவிகளுடன் ஆட்சி செய்து வந்தார். பொரிகடலை விற்க இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்களை கூட ஆரம்பத்தில் இவர் எதிர்க்க வில்லை. டெல்லிக்கு வந்தாயா? பானிபூரி விற்றாயா? அங்கு ஸ்கிப்பிங் விளையாடும் என் குல பெண்களுக்கு என வசணம் பேசாமல் அவர்களுக்கு கட்ட வேண்டிய வரியை வட்டியை கிஸ்தியை கராராக கட்டிவிட்டு சமத்து ராஜா என பெயர் எடுத்திருந்தார். பிறகு வந்த காலங்களில் சனி பகவான் அவரது ஜாதக கட்டத்தில் கபடி விளையாட சிப்பாய் கலக போராட்டத்தில் ஈடுபட்டு பர்மாவிற்கு நாடுகடத்தப்பட்டு அங்கேயே சமாதியானார். அவரது சமாதி கூட பர்மாவில் ரங்கூனுக்கு அருகில் "சுவேதாகன் பகோடா" என்னும் இடத்தில் பகதூர் ஷா தர்ஹாவில் இன்றும் இருக்கிறது. அவரது முன்னோர்களான மற்ற அரசர்களுக்கு காட்டு மானையும் நாட்டு மானையும் துரத்தி துரத்தி வேட்டையாடும் பழக்கம் இருக்க, அந்த முக்கிய நபருக்கு கஸல் என சொல்லக் கூடிய கவிதை எழுதும் பழக்கம் அரிதாக அமைந்திருந்தது. தான் ஆட்சி காலத்தில் புகழ்பெற்ற கவிஞர்களை தன் கூடவே வைத்திருந்த அவர் பேஸ்புக் கவிஞர்களைப் போல தினமும் பல கஸல் கவிதைகளை கிறுக்கித் தள்ளினார். மேலும் தான் சாகும் நேரத்தில்

Kitna hai badnadeeb zagar
Dafn ke liye
Do gaz zameen bi
Mil na saki kuye yaar mein.

எத்தனை அதிஸ்டசாலி சஃபார்
புதைப்பதற்கு
ஆறடி நிலம் கூட
கிடைக்கவில்லை
என் அன்புக்குறிய நாட்டில்.

என அழகான ஏக்க கவிதையை அவர் எழுதியிருந்தார். அவரது கவிதைத் தொகுப்புகள் பலவற்றை ஆங்கிலேயர்கள் அழித்துவிட ஏதோ ஒன்றிரண்டு மட்டுமே தற்போது "குல்லியத் - இ- சஃபர்" என தொகுக்கப்பட்டிருக்கிறது.

தன் முன்னோர்களைப் போல பெரிய பெரிய சாதனை எதுவும் செய்யாத இவரும் வரலாற்றில் முக்கிய இடத்தில் இருக்கிறார். அதில் அவருக்கு கடைசி இடமே கிடைத்திருக்கிறது. அவர்தான் பல ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட, இந்திய அரசியல் அமைப்பில் மட்டுமல்லாது வாழ்க்கை முறையிலும் மதத்திலும் மாற்றங்களை கொண்டுவந்த மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்தின், தைமூர் வம்சத்தின் கடைசி அரசராவார். அந்த முக்கிய நபர்தான் "அபுசஃபர் சிராசுதீன் முகமது பகதூர் ஷா சஃபார்" என்ற பெயர் கொண்ட பகதூர் ஷா சஃபார். மேலும் நிழல்படம் என சொல்லக் கூடிய போட்டோ எடுத்துக்கொண்ட முதல் கடைசி முகலாய அரசரும் (The Last Mughal) அவர்தான்.

ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வருபவரை நாம் கொண்டாடுகிறோம். இரண்டாவது மூன்றாவது இடம்பிடிப்பவர்களைக் கூட நாம் நினைவில் வைத்திருப்போம். ஆனால் கடைசியாக வருபவரை நாம் கண்டுகொள்வதே கிடையாது. உண்மையைச் சொன்னால் கடைசியாக வருபவரும் வீரரே. அவருக்கென அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க கூடும், அது இல்லாமலும் போகக் கூடும். அதைவிட அவரது தோல்விக்கு பின்னால் ஏதாவது ஒரு வீழ்ந்த கதை இருக்கக்கூடும். அதுபோல மொகலாய அரசர்களின் பட்டியலில் கடைசியிலிருக்கும் பகதூர் ஷா சஃபாருக்கு பின்னாலும் ஒரு கதை ஒரு வரலாறு இருக்கிறது. அதனைப் பற்றி நமக்கு கிடைத்த குறிப்புகள் வெகு குறைவானதே. அவர் எப்படி ஆட்சிக்கு வந்தார்? எவ்வாறு ஆட்சி செய்தார்? சிப்பாய் கலக போராட்டத்தில் ஏன் கலந்து கொண்டார்? என்பதைப் பற்றியும், டெல்லி சாம்ராஜ்யம் வீழ்ந்த வரலாற்றை பற்றியும் தெரிந்துகொள்ள தெளிவான எளிமையான வரலாற்று புத்தகமும் வெகு குறைவானதே. அந்த குறைகளை இந்த புத்தகம் போக்குகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த வரலாற்று ஆசிரியர், பத்திரிக்கையாளர் ஆராய்ச்சியாளரான "வில்லியம் டால்ரிம்பிள்" என்பவர் பல கள ஆய்வுகளை மேற்கொண்டு இந்த புத்தகத்தை ஒரு புனைக்கதையாக எழுதியிருக்கிறார். டெல்லி வீழ்ந்த கதையையும், முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியையும், பகதூர் ஷா சஃபாரின் வாழ்க்கையையும் கொட்டாவி வரலாறாக இல்லாமல் கதையாக சுவாரசியம் குறையாமல் இதில் பதிவு செய்திருக்கிறார். இந்த மாதத்தை வரலாற்றிற்காக ஒதுக்குவோம் என தேடிப் பிடித்த இந்த ஆங்கில புத்தகத்தை வழக்கம்போல அந்த பழுப்பு நிற டிஸ்னரியை வைத்துக்கொண்டு வாசித்து முடித்தேன். அடடா அழகான கதையாக சலிப்புத் தட்டாமல் நகரும் ஒரு சாம்ராஜ்யம் வீழ்ந்த வரலாற்றை தமிழில் யாராவது மொழிபெயர்த்தால் எவ்வளவு அழகாக இருக்கும்? என்ற ஆசையோடு தங்களுக்கும் அறிமுகப் படுத்துகிறேன்.

The Last Mughal :
The Fall of Delhi 1857
William Dalrymple
Penguin Publishers
(Snapdeal).