ஹூஞ்சா இன மக்கள்.



டெங்கு" என்ற பெயரைக் கேட்டாலே லேசாக ஜுரம் வந்து ஓடிச்சென்று பிளட் டெஸ்ட் எடுத்து பாசிட்டிவ்வா நெகட்டிவா என பார்க்கும் அளவிற்கு பயம் தற்போது நம்மில் நிலவுகிறது. தினம் ஒரு டஜன் அளவிற்கு ஏற்படும் மரணங்களைப் பற்றி செய்திகளில் படிக்கும் போதும், பார்க்கும் போதும் மலேரியா, பிளேக், அம்மை, காலரா, வரிசையில் டெங்குவும் வரலாற்றில் இடம் பிடித்து விடுமோ என்ற நடுக்கமும் இருக்கிறது. எதையாவது குடித்தால் தீரும் என்ற நம்பிக்கையைத் தவிர இதற்கு மருந்து இதுவரை இல்லை. இதயநோயும் புற்றுநோயும் சர்க்கரை வியாதியும் ஸ்டேட்டஸ் நோய்களாக மாறிவிட்ட நம்மிடத்தில் டெங்கு போல் புதிதாக பிறக்கும் இன்ஸ்டன்ட் நோய்கள் வருவதும் போவதும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இதற்கெல்லாம் ஆளும் அரசையும், அதிகாரிகளையும், மருத்துவ வியாபாரிகளையும் குறை கூறினாலும் எல்லா கஷ்டங்களுக்கும் எல்லா நஷ்டங்களுக்கும் நாமேதான் காரணமாக இருக்கிறோம். நம்மிடம் இருக்கும் அரசியலில் தெளிவில்லை, நமக்கிருக்கும் அதிகாரத்தினால் ஒரு பயனும் இல்லை, இயற்கையைப் பற்றிய புரிதல் நமக்கு அறவே இல்லை, சுத்தம் சுகாதாரம் சுக்கு மிளகு திப்பிலி இவற்றைப் பற்றிய கவலை எதுவும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் நம் வாழ்க்கை பாடத்தில் அறிவு இயலில் தோற்று நிற்கிறோம். இந்த சமயத்தில் "ஹூஞ்சா" இன மக்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றியும் கொஞ்சம் பொறாமையோடு தெரிந்து கொள்வது அவசியம் எனப் படுகிறது.

யார் இந்த ஹூஞ்சா இன மக்கள்? அவர்களது வாழ்க்கை முறைதான் என்ன? அவர்களுக்கு நோய்கள் என்பதே வராதா? சுத்தம் சுகாதாரம் இவற்றை மறந்து விளம்பரங்களில் மயங்கி கடைகளில் விற்கும் புற்றுநோய் போன்ற நோய்களை இவர்கள் வாங்க மாட்டார்களா? நல்ல டாக்டர், எவ்வளவு கூட்டம், எங்களுக்கு 265 -வது டோக்கன் கிடைத்தது என மருத்துவமனை சென்றதைக் கூட பெருமை அடித்துக்கொள்ளும் பழக்கம் அவர்களுக்கு கிடையாதா? அவர்கள் என்ன கடவுளின் குழந்தைகளா? அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள நம் பங்காளி தேசத்திற்கு பயணிக்க வேண்டும் வாருங்கள்.   


வடக்கே ஆப்கானிஸ்தான் - வடகிழக்கில் சீனா - தென் கிழக்கில் ஜம்மு காஷ்மீர் என கலவர பூமிக்கு இடையில், யாசின் - இஷ்கோமன் பள்ளத்தாக்கிற்கு நடுவில், பாகிஸ்தானின் உச்சியில் இருக்கும் கைப்புள்ள பிரதேசம்தான் "ஜில் ஜீட் பால்டிஸ்டான்". காதல் கை கூடி ஹீரோவும் ஹீரோயினும் தாராளமாக உருண்டு புரண்டு டூயட் படும் அளவிற்கு அழகு நிறைந்த 72971 ச.கி.மீ பரப்பளவு கொண்ட இந்த பிரதேசத்தில் சுமார் 1800000 மக்கள் வாழ்கிறார்கள். அந்த பிரதேசத்தில் இருக்கும் "ஹூன்ஜா நகர்" என்ற பகுதியில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த மக்களே ஹூஞ்சா இன மக்கள் என அழைக்கப்படுகின்றனர். "புருஷாஸ்கி" எனப்படும் மொழி பேசும் இவர்கள்தான் உலகின் மிகவும் ஆரோக்கியமான மனிதர்களாக கருதப்படுகின்றனர். இயற்கையை அழிக்காமல் புதிதாய் எதையும் உருவாக்காமல் ரசாயணம் கலக்காத உணவுகளை சாப்பிடாமல் வேர்வை சிந்தும் உடல் உழைப்பை மட்டும் முக்கிய ஆதாரமாகக் கொண்டு வாழும் இவர்களை எந்த நோயும் தாக்குவதில்லை. தங்கள் இருக்கும் இடத்தின் அமைப்பு ஒருபுறம் இருந்தாலும் தங்களது உணவு பழக்கங்களில் இயற்கையாக விளையும் பழங்கள்  காய்கறிகள் தானியங்கள் பால் முட்டை இறைச்சி மற்றும் வால்நட்டுகளை எடுத்துக்கொள்ளும் இவர்கள் 70 வயது வரை இளமையாக இருக்கின்றனர். இதயநோயும் புற்றுநோயும் சர்க்கரை வியாதியும் என்னவென்று தெரியாத இவர்களில் ஒரு சதத்தை தாண்டி அடுத்த செஞ்சுரி போடும் நோக்கில் வாழும் டெண்டுல்கர் தாத்தாக்களும் சேவாக் பாட்டிகளும் பலர் இருக்கின்றனர். மேலும் நாற்பது வயதில் கலவியும் கர்பப்பையும் சுருங்கும் சராசரி விகிதத்தை தாண்டி 65 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களும் இவர்கள் இனத்தில் வசிக்கின்றனர். இஸ்லாம் மதத்தை பெரிதாக நம்பும் இவர்கள் இயற்கையை போற்றவும் தவறுவதில்லை. ஏழை பணக்காரன் பாகுபாடின்றி கைகொடுத்து தங்கள் இனத்தில் உறவுமுறையில் மட்டுமே திருமணம் கொண்டு இவர்கள் கலப்பில்லாத சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக மேற்கத்திய கலாச்சாரதை பின்பற்றாது பழமைவாதத்தை வைத்துக் கொண்டு அதையே அடிப்படையாக எடுத்துக் கொண்டு இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை நடத்துகின்றனர். அதனால்தான் இந்த நவீன யுகத்திலும் இவர்கள் உலகின் மிகவும் ஆரோக்கியமான மனிதர்களாக பார்க்கப் படுகின்றனர். நான்காம் நூற்றாண்டில் இவர்கள் வசிக்கும் நகரத்திற்கு அலெக்சாண்டர் வருகை தந்ததால் அவர்களின் வழித்தோன்றல் நாங்கள் என கருதும் இங்கு வாழும் மக்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று உள்ளது. அது 'இயற்கையோடு இணைந்து வாழ்" என்பதாகும். அதுவே நமது அடுத்த தலைமுறை இனத்திற்கும் இன்றைய தலைபோகிற  பயத்திற்கும் மருந்தாக அமையும் எனத் தோன்றுகிறது.