மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படங்கள் பகுதி - 1.




ஹா...உ...யா... ய்யீ... அய்... கூஹூம்... அபுஹாய்... உஃபே... வழக்கம் போல ஏதோ விளங்காத கவிதை எழுதியிருக்கிறேன் என நினைக்க வேண்டாம். இவையெல்லாம் மார்ஷியல் ஆர்ட்ஸ் என சொல்லக்கூடிய தற்காப்பு கலை தொடர்பான திரைப்படங்களின் சண்டைக் காட்சிகளின் போது வெளிப்படும் சப்தங்கள் ஆகும். கை காலை வைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏதேதோ வித்தை காட்டி எதிராளியை துவம்சம் செய்து அடித்து நொறுக்கும் அத்தகைய திரைப்படங்களுக்கு பாரபட்சமில்லாமல் நாம் அனைவருமே ரசிகர்கள்தான். அந்த வகையில் அடியேன் ரசித்த ஒரு இருபது மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படங்களைப்பற்றி அறிமுகமாக, அடக்க ஒடுக்கமாக, சுருக்கமாக, யாரையும் வம்பிழுக்காமல் (ஹி.ஹி) எழுதலாம் என நினைக்கிறேன்.

One Armed Swordsman.


ஹாலிவுட்டில் எடுக்கும் திரைப்படங்கள் மட்டுமே உலக அளவில் பார்வையாளர்களையும் வசூலையும் ஈர்த்துக் கொண்டிருந்த தருணத்தில் சீனாவை சேர்ந்த "சாங் சேஹ்" என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும் முதல்முறையாக சீனாவையும் தாண்டி வசூல் சாதனையையும் ஏற்படுத்தியது. வசூல் சாதனை என்பது மூன்று நாட்களுக்கு ஒரு டிக்கெட்டின் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் என வைத்து முட்டாள் ரசிகனிடமிருந்து பைசா புடுங்கும் பஞ்ச தந்திர வேலையல்ல. ஒரு திரைப்படம் சதாரண வெகுஜன மக்களிடமும் சென்றடைவதே முழுதான வசூல் சாதனையாகும். ஹாங்காங்கை சேர்ந்த "ஷா பிரதர்ஸ் ஸ்டியோ" தயாரித்த இந்த திரைப்படம் அந்த சாதனையை செய்தது. இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி படத்தின் நாயகன் ஜிம்மி வாங்கிற்கு மட்டுமில்லாமல் உலக அளவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படங்கள் வெளிவரவும் புகழ் பெறவும் திருப்புமுனையாக அமைந்தது. சீனாவின் தற்காப்பு கலையில் முக்கியமான ஒன்றான "வுக்ஷியா" என்ற கலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இதில் சண்டைக் காட்சிகளை தவிர்த்து அழகான காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் என அனைத்தும் நிறைந்திருந்தது. 1967 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு பின் அதன் தொடர்ச்சியாக Return of the One Armed Swordsman, The New One Armed Swordsman போன்ற படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Enter The Dragon.


மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படங்களின் சூப்பர் ஸ்டார் என்றால் அது புரூஸ்லீதான். அவரது பெயரைக் கேட்டாலே நாடி நரம்பெல்லாம் நிஜமாகவே அதிரும். அசாதாரண சட்டைக்காட்சிகள் அனைத்தும் அவருக்கு அ- சாதாரணம். அன்றும் இன்றும் பல தலைமுறைகள் தாண்டி என்றும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் நடித்த திரைப்படங்களில் மிக முக்கியமானது என்டர் தி ட்ராகன் திரைப்படம். 1973 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் பெரிய கதையெல்லாம் ஒன்றும் இல்லை என்றாலும் புரூஸ்லீயின் டூப் போடாத சண்டைக் காட்சிகளும் அவரது மேனரிசமும் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக இறுதிக் காட்சியில் அவர்போடும் சண்டையும் அதற்குபின் வெற்று உடம்புடன் அவர் தோன்றும் தோற்றமும் இன்றளவும் பல திரைப்படங்களில் காப்பியடிக்கப்பட்டு வருகிறது. சாதாரண எலிக்குட்டிகள் கூட சட்டையை கழற்றி உடலில் எண்ணெயைத் தடவிக் கொண்டு முகத்தில் தக்காளி சட்ணியை ஊற்றி அகில இந்திய புரரூஸ் லீ என சொல்லிக்கொண்டு திரிவதெல்லாம் இந்த திரைப்படத்திற்கும் புரூஸ்லீக்கும் கிடைத்த வெற்றியாகும். List of ever green movie என்ற சென்ற நூற்றாண்டின் நூறு திரைப்படங்களின் பட்டியலில் இந்த திரைப்படமும் இருக்கிறது. அது பெருமையாக இருந்தாலும் இந்த படம் வெளிவந்த ஆறு நாட்களில் புரூஸ்லீ மறைந்தார் என்பதுதான் கொடுமையானது. இந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் வில்லனின் அடியாளாக ஒருவர் வந்து புரூஸ்லீயிடம் அடிபட்டு விழுவார். அப்போது அவர் விழுந்தாலும் இன்று மார்ஷியல் ஆர்ட் திரைப்படங்களின் நம்பர் ஒன்னாக விழாமல் இருக்கிறார். அவர்தான் ஜாக்கி சான்.

Drunken Master.


புரூஸ்லீயின் மறைவிற்கு பிறகு அவரை பின்பற்றி அவரது ஸ்டைலில் பலர் சினிமாவில் வந்து போனார்கள் ஆனால் யாரும் "சாங் காங் சான்" என்ற இயற்பெயர் கொண்ட ஜாக்கிசானைத் தவிர சொல்லிக்கொள்ளும் படியாக நிலைக்கவில்லை . ஜாக்கியும் ஆரம்பத்தில் புரூஸ்லீயை காப்பியடித்தாலும் பிறகு வந்த காலங்களில் நகைச்சுவை கலந்த குங்ஃபு மற்றும் "ஹாபிகோடோ" எனப்படும் தற்காப்பு கலையை நகைச்சுவையோடு கலந்து "அக்ரோபாட்டிக்" எனப்படும் தனி சண்டை பாணியாக அமைத்து புரூஸ்லீக்கு அடுத்த இடத்தை பிடித்தார். 1960 லிருந்து சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் அவர் நடித்து வந்தாலும் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த டிரங்கன் மாஸ்டர் திரைப்படமே அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. சீனாவில் வாழ்ந்த தற்காப்பு கலைஞர், சிந்தனைவாதி, நாட்டுப்புற ஹீரோ, மருத்துவர் மற்றும் புரட்சியாளரான "வோங்ஃபீ- ஹங்" என்பவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரை மனதில் கொண்டு இந்த திரைப்படத்தை எடுத்திருந்தனர். கிட்டத்தட்ட சீன தற்காப்பு கலையில் உள்ள அனைத்து சண்டை பிரிவுகளையும் ஜாக்கி இந்த திரைப்படத்தில் தனது பாணியில் சிரமப்பட்டு இந்த பிரபஞ்சத்தில் யாருமே செய்யாத சண்டைக் காட்சிகள் என அலட்டிக்கொள்ளாமல் செய்திருப்பார். அதற்காக அவர் தனது இடது கண்ணின் பார்க்கும் திறனில் பாதியை இழக்கவும் நேர்ந்தது.

Five Deadly Venom's.


ஷா பிரதர்ஸ் ஸ்டுடியோ என்பது சீனாவின் புகழ்பெற்ற திரைப்படம் தயாரிக்கும் நிறுவனமாகும். 1958 ஆம் ஆண்டு ஷா சகோதரர்களால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சிங்கப்பூரை தலைமையாக கொண்டு மார்ஷியல் ஆர்ட் திரைப்படங்களை வெளியிட்டு வந்தனர். உலக அளவில் சீனா தயாரிப்பின் திரைப்படங்களை வெளிக்கொண்டு வந்தவர்களும் இவர்களே. அந்த காலத்தில் இந்த தயாரிப்பு நிறுவனத்தை நோக்கி படையெடுத்த சீனா தற்காப்பு கலைஞர்கள் ஏராளம். அவர்களில் "வெனோம் மோப் (Venom Mob)" என்ற குழுவும் அடக்கம். லூ பெங், வேய் பாய், சுன் சியான், குவே சுய், லோ மாவ் என்ற தைவானைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் இணைந்த இந்த குழு தற்காப்பு கலை நடனம் நடிப்பு என அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களது திறமையை ஷா பிரதர்ஸ் நிறுவனம் தங்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு சரியாக பயன்படுத்திக் கொண்டனர். அந்த குழுவும் பல இயக்குனர்களுக்கு கீழ் சிறந்த படங்களில் பணியாற்றத் தொடங்கினர். மேலும் சண்டைக் காட்சிகளில் "வெனோம்" என்ற தனி பாணியையும் உருவாக்கினர். அதன்படி இந்த ஐவரும் பூராண், தேள், பல்லி, பாம்பு, தேரை என்ற ஐந்து பிரிவுகளில் ஒரு திரைப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லனுக்கான சண்டைக் காட்சிகளை அமைத்தனர். இலர்களது இந்த தனித் தன்மை அனைவரையும் கவர அதனை மையமாக வைத்தே "பைஃவ் டெட்லி வெனோம்" என்ற இந்த திரைப்படத்தை எடுத்திருந்தனர். 1978 -ல் வெளியான இந்த திரைப்படத்தில் வெனோம் மோப் குழுவைச் சேர்ந்த அந்த ஐவரும் நடித்து பின்நாட்களில் மேலும் புகழ் பெற்றனர்.

Legend of Fox.


அதே ஷா பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதே வெனோம் மோப் குழுவை வைத்து 1980-ல் வெளிவந்து திரைப்படம்தான் இந்த "லிஜன்ட் ஆஃப் பாஃக்ஸ்". ஹாங்காங்கை சேர்ந்த பத்திரிக்கையில் "லூயிஸ் ஷா" என்ற எழுத்தாளரின் கைவண்ணத்தில் தொடராக வெளிவந்த "தி யங் பிளையிங் பாஃக்ஸ்" என்ற நாவலின் கதையைத்தான் திரைப்படமாக எடுத்திருந்தனர். (சீனாவில் நாவல் எழுதினால் கூட சண்டை போடுகிறார்கள் இங்கு நாவல் எழுதுகிறவர்கள்தான் சண்டை போடுகிறார்கள்). வழக்கம்போல அப்பாவை கொன்றவனை பழிவாங்கும் அதே பழைய ஜெய்சங்கர் காலத்து கதைதான் என்றாலும் வெனோம் மோப் குழுவின் சண்டைக் காட்சிகள் இந்த திரைப்படத்தை பெரும் வெற்றிபெறச் செய்தது. மேலும் இந்த திரைப்படத்தின் நாயகனான "சின் சியு கோ" -விற்கு இது இரண்டாவது திரைப்படமாக அமைந்தாலும் இன்றுவரை அவர் சினிமாவில் நிலைத்து நிற்க பெரிதும் உதவியது.