யாழ் - சிவயநம.




ங்ககாலத்தில் தமிழால் இசையால் பாடல்களால் மக்களை மகிழ்வித்த "பாணர்கள்" என்பவர்களைப் பற்றி என்தமிழ் என்ற பகுதியில் எழுதியிருந்தேன் அதற்கான தகவல்களை திரட்டும்போதுதான் இந்தப் பாடல் எதேச்சையாக கிடைத்தது. பாணர்கள் பல இசைக் கருவிகளை வாசிக்க கற்றிருந்தனர் அதில் குறிப்பிடும்படியாக "யாழ்" எனும் நரம்பு இசைக் கருவியின் வாத்தியத்தில் அவர்கள் கைதேர்ந்தவர்களாக விளங்கினர். இந்த யாழ் எனும் இசைக் கருவியே இன்று புழக்கத்திலிருக்கும் வீணை, சித்தார், மேண்டலின் போன்ற நரம்பு இசைக் கருவிகளுக்கு முன்னோடியாகும். மேலும் தமிழர்கள் வாசித்த முதல் இசைக் கருவி இதுதான் என்று நம்பப்படுகிறது. யாழ் கருவியை வாசிக்கும் பாணர்களின் ஒரு பிரிவினர் யாழ் பாணர்கள் என அழைக்கப்பட்டனர். இலங்கை நாட்டின் முக்கிய பகுதியான யாழ்பாணம் என்ற இடத்தில் பண்டைய காலத்தில் இந்த பாணர்களின் பிரிவினர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். அதனால்தான் அந்த பகுதிக்கு யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்ததாக வரலாறும் இருக்கிறது. அத்தகைய பாணர்களின் வரலாற்றையும் சிறப்பு வாய்ந்த யாழ் எனும் இசைக் கருவியின் பெருமையையும் அழகான ஓவியத்துடன் நமக்கு காட்டுகிறது இந்தப் பாடல்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழரான எம்.எஸ். ஆனந்த் என்பவர் இலங்கையை கதைக்களமாகக் கொண்டு 2014 ஆம் ஆண்டு "யாழ்" எனும் திரைப்படத்தை எடுத்திருந்தார். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை சிவா மற்றும் ஸ்ரீராம் என்பவர்கள் இணைந்து பாடியிருக்கின்றனர். எஸ். என் அருணகிரி என்பவர் இதற்கு இசையமைத்திருக்கிறார். பாணர்களின் வரலாற்றை, யாழின் பெருமையை காட்சிகளாக விளக்கும் அந்த ஓவியத்தை வரைந்தது யார்? மற்றும் "வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள்" என்ற தொடங்கும் பாடலின் வரிகள் யாருடையது? இவற்றைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை இருந்தும் இவை இரண்டும் இணைந்த இந்தப் பாடல் மெய் சிலிர்க்க வைக்கிறது.



பாடல் வரிகள். 

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...
வாள் கண்டு சாயாத
தலையெங்கள்
தலையெங்கள்
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..
வேல் கண்டு சாயாத
படையெங்கள்
படையெங்கள்
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..
"குளப்பு வழி அன்ன
கவடுபடு பத்தல்
விளக்கு அழல் உருவின்
விசிஉறு பச்சை
எய்யா இளஞ்சூற்
செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளைவாழ் அலவன் கண் கண்டு
அளைவாழ் அலவன் கண் கண்டு"
மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்..
யாழ் கண்டு நாமிங்கு
நாள் கண்டு
கோள் கண்டு
வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா..
உள் கண்டு வெளிகண்டு
உள்ளுக்கும்
உள்கண்டு
உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா..
மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்
"துளைவாய் தூர்ந்த
துரப்பு அமை ஆணி
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண் நா இல்லா அமைவரு வறுவாய்
பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின்
மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின்
ஆய்திணை யரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்"
மேல் அந்து போனாலும்
தோல் வெந்து போனாலும்
சூல் கொண்டு வருவோமே சிவசங்கரா..
நாள் வந்த பின்னந்த
நாள் வந்த பின்னெங்கள்
யாழ் கொண்டு வருவோமே சிவசங்கரா..
"கேள்வி போகிய நீள் விசித் தொடையல்;
மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன,
அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி;
ஆறு அலை கள்வர் படை விட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை"
மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்
தீ என்று சொன்னாலும்
தீபங்கள் என்றாலும்
தீ என்பதொன்றுதான் சிவசங்கரா..
நான் என்று சொன்னாலும்
நீ என்று சொன்னாலும்
நம் சக்தி ஒன்றுதான் சிவசங்கரா..
சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...