சிட்னி - ஒரு நாடோடியின் கதை பகுதி - 7.





1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள் பிரான்ஸிலிருந்து வந்த அந்த துக்கச் செய்தியை கேட்டு 75 வயதான சாப்ளின் உடைந்துபோய் அப்படியே நார்க்காலியில் சாய்ந்தார். பதறிப்போன அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரைச் சூழ அவருக்கு தனிமை தேவைப்பட்டது. அனைவரும் அவரைவிட்டு சற்று விலகிச் செல்ல அவர் தன் பால்ய கால நினைவுகளில் மூழ்கத் தொடங்கினார். அவரது இமை மூடிய கண்களிலிருந்து நீர் கசிய உதடுகள் மெல்ல அந்த பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தது. சிட்னி ... சிட்னி...என் அண்ணா..

சாப்ளினை விட மூன்று வயது மூத்தவர் அவரது அண்ணன் சிட்னி.
சாப்ளினுக்காவது அவரது தந்தை யாரெனத் தெரியும் அவரது அன்பு கிடைக்கப் பெறாவிட்டாலும் சாப்ளின் என்ற குடும்பத்தின் பட்ட பெயரும் அவர் மூலம் சில காலங்கள் ஜீவானம்சமும் கிடைத்து வந்தது. ஆனால் சாப்ளினின் அண்ணனான சிட்னிக்கு அந்த கொடுப்பினை வாய்த்ததில்லை. சிறுவயதில் மேடையில் பாடிக்கொண்டிருந்த இவர்களின் தாய் ஹென்னா, "சிட்னி ஹாக்ஸ்" என்பவர் மூலம் 1885 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் நாள் சிட்னியை பெற்றெடுத்தாள். பிறகு சார்லஸ் பென்சரை மணந்து கொண்டு சாப்ளின் என்ற மகத்தான கலைஞனை உலகிற்கு தந்தாள். ஆனால் சிட்னி ஹென்னாவிற்கு முறைகேடாக பிறந்தவர் என சாப்ளினின் வரலாற்றை எழுதிய சில ஆசிரியர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ சாப்ளின் குடும்பத்தில் மூத்தவன் இந்த சிட்னி.

மூத்தவர்களாக பிறக்கும் ஒவ்வொருவரின் தலையிலும் ஒரே வாசகம்தான் எழுதப்படும் அது "உன் குடும்பம்"

- இது சிட்னிக்கும் விதிவிலக்கல்ல என்பதற்கேற்ப தனது பத்து வயதிலேயே பேப்பர் போடுவனாக தனது குடும்ப பொறுப்புகளை சுமக்கத் தொடங்கினான். கணவனை விட்டு பிரிந்த ஹென்னா மற்றும் சாப்ளின் இருவரின் பொருளாதாரமாகவே சிறுவன் சிட்னி விளங்கினான். ஒரு காலகட்டத்தில் தன்னால் இதற்குமேல் வறுமையை சமாளிக்க முடியாது என உணர்ந்த இவர்களின் தாய் இருவரையும் லேம்பத் என்ற அனாதைகளுக்கான பள்ளியில் சேர்த்திருந்தாள். அங்கு வயதிற்கேற்ப சாப்ளினும் சிட்னியும் பிரிக்கப்பட்டு பள்ளிப்பாடங்களை கற்கவும் மீதி நேரங்களில் சிறுசிறு வேலைக்கும் அனுமதிக்கப் பட்டிருந்தனர். தாம் அனாதையாக்கப்பட்டதை சிட்னி கூட தாங்கிக் கொண்டாலும் சாப்ளினுக்கு அது ஒருவித கவலையை அளித்திருந்தது. தன் வகுப்பு மற்றும் கொடுக்கப்பட்ட சமையல் வேலை போக சாப்ளினுக்கு பிடிக்கும் என ரொட்டித் துண்டுகளையும் கேரட்களையும் சிட்னி யாருக்கும் தெரியாமல் கொண்டு வருவான். அந்த காலகட்டத்தில் சாப்ளினுக்கு நண்பனாய் ஆறுதலாய் இருந்தவன் சிட்னி.

அனாதை விடுதியில் சிறிதுகாலம் வாழ்க்கை ஓட இவர்களின் தாய் ஹென்னாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. அரசாங்கம் இந்த சிறுவர்களின் நலனைக் கருதி அவர்களை சாப்ளினின் தந்தை சார்லஸ் சாப்ளின் பொறுப்பில் ஒப்படைத்தது. அனாதை விடுதியை விட மிகக் கொடுமையான சித்தியின் கொடுமை இந்த சிறுவர்களைத் தொடர்ந்தது. சித்தி லூயிஸின் கொடுமையை தாங்காத சிட்னி ஒருநாள் கத்தியைக் காட்டி அவளை மிரட்டிய சம்பவம் கூட அங்கு நிகழ்ந்தது. இந்த காலகட்டத்தில் சாப்ளினுக்கு சிட்னி பாதுகாவலனாக விளங்கினான். மீண்டும் தெருவோர வாழ்க்கை எடுபிடி வேலை என இவர்கள் துரத்தப்பட இளமைப் பருவம் தொடங்கிய புதிதில் சாப்ளினுக்கு "பிளாக்மோர்" எனும் நாடகக்குழுவில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஹேர்லக் ஹோம்ஸ் கதையை நாடகமாக எடுத்த அந்த குழுவில் சிட்னியும் இணைந்திருந்தான். அவனுக்கு அங்கு வில்லன் வேடம் கொடுக்கப்பட்டது. சாப்ளினைப் போல சிட்னிக்கும் நாடக ஆசை இருந்தது ஆனால் வறுமை அதற்கு குறுக்கிட்டிருந்தது. அடுத்து சாப்ளின் நடித்த "ஜிம் ஏ ரோமான்ஸ் ஆப் கோகேன்" என்ற நாடகம் படுதோல்வி அடைய அதிஷ்டவசமாக அதில் பேப்பர் போடும் சிறுவனாக நடித்த சாப்ளினின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இந்த நாடகத்தை கடுமையாக விமர்சித்த லண்டன் டாபிக்கல் டைம் பத்திரிக்கை சாப்ளினை வெகுவாக புகழ்ந்து தள்ளியிருந்தது. அந்த சம்பவம் சாப்ளினை வெகு உயரத்திற்கு கொண்டு சென்றது. ஆனாலும் சிட்னிக்கு நாடகம் நடிப்பு என்ற கனவு கனவாகவே இருந்தது அவன் இன்னமும் எடுபிடி வேலைகளை செய்து கொண்டிருந்தான். சாப்ளின் என்ற கலைஞன் உருவாகி வளர்ந்து நாடகத்தில் புகழ்பெற்று சினிமாவிற்காக அமேரிக்கா சென்று நடிகனாக பரிமாற்றம் அடையும் வரை இளைஞனான சிட்னி கிடைத்த வேலைகளை செய்துகொண்டு லண்டனில் வசித்து வந்தான்.


எதையும் மறக்காத பழக்கம் கொண்ட சாப்ளினிடம் இருந்து 1914 ஆம் ஆண்டு சிட்னிக்கு ஒரு கடிதம் வந்தது அதில் உடனே புறப்பட்டு அமேரிக்கா வரவும் என எழுதியிருந்தது. சாப்ளின் அப்போது அமேரிக்காவில் மாபெரும் நடிகனாக வளரத் தொடங்கியிருந்தார். அவரது ஒரு ரீல் திரைப்படம் மூலம் அதிஷ்டம் கூரையை அல்ல வானத்தை கிழித்துக் கொண்டு கொட்டத் தொடங்கியது. தன் தம்பியின் வேண்டுதல்படி அமேரிக்கா வந்த சிட்னியை வரவேற்ற சாப்ளின் தன்னை நிர்வாகிக்கும் முழு பொறுப்பையும் அவரிடம் கொடுத்தார். படங்களை தேர்வு செய்வது, பட அதிபர்களிடம் வியாபாரம் பேசுவது, கால்சீட், கணக்கு வழக்கு, ஒப்பந்தம் போன்ற சகலத்தையும் சிட்னி கவணிக்கத் தொடங்கினார். மேலும் தன் தம்பியுடன் இணைந்து A Dogs Life, Pay Day, The Pilgrim போன்ற சில திரைப்படங்களிலும் தலை காட்டினார். சாப்ளினால் நடிக்க இயலாத பட வாய்ப்புகளும் அவர் மறுத்த திரைப்பட நிறுவனங்களும் சிட்னியை தேடி வந்தது. King Queen Jocker, The Perfect Flapper, Charley's Aunt, The Man on the Box, The Better Ole போன்ற திரைப்படங்களில் நடித்து தனது நாடக ஆசையையும் நடிகன் என்ற இடத்தையும் அவர் தக்க வைத்துக்கொண்டார். சினிமாவைத்  தாண்டி தொழில்துறையிலும் இவர்களின் வளர்ச்சி அபரிவிதமாகவே இருந்தது. "Syd Chaplin Airline" என்ற பெயரில் தனியாக விமான சேவை தொடங்கும் அளவிற்கு அவர்களின் பொருளாதாரம் வளர்ந்தது. சிறுவயதில் தான் கப்பலில் எடுபிடியாக வேலை செய்தபோது கிடைக்கும் பணத்தை எறும்பு போல் சேமிக்கும் பழக்கத்தை அப்படியே சிட்னி தன் நிர்வாகத்திறனிலும் கடைபிடித்தார். ஒரு சிறிய ரொட்டித் துண்டிற்காகவும் தலைகோதும் ஆறுதல் ஸ்பரிசத்திற்காவும் ஏங்கிய இரண்டு அநாதை சிறுவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியிருந்தது. இருந்தும் சிட்னி- சாப்ளின் இருவருக்கும் இருந்த பரஸ்பரம் அப்படியேதான் இருந்தது. 


1953 ஆம் ஆண்டு குடியுரிமை இல்லை, கம்யூனிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டு சாப்ளின் அமேரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். அவரது சொத்துக்கள் முழுவதும் பரிமுதல் செய்யப்பட்டு அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டது. சிட்னிக்கும் இது பொருந்தியதால் அவரும் அமேரிக்காவை விட்டு வெளியேரும் நிலைக்கு தள்ளப்பட்டார். பிறகு வந்த காலங்களில் சாப்ளின் சுவிட்சர்லாந்திலும் சிட்னி பிரான்ஸிலும் தங்கள் கடைசி காலத்தை கழித்தனர்.

சாப்ளினுக்கு சிட்னி அண்ணன் மட்டுமில்லாது ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்தவர், சிறந்த தோழன், பாதுகாவலன், நிர்வாக அதிகாரி என சகலமுமாக இருந்தவர் அதற்கு மேலும் அவர் சாப்ளினுக்கு தாயுமானவனாக விளங்கினார். சாப்ளினின் வாழ்க்கையை அறிந்துகொள்ள முற்படுபவர்கள் அவரது அண்ணனான சிட்னியின் வாழ்க்கையை சாதாரணமாக கடந்துவிட முடியாது. ஏனென்றால் சாப்ளின் என்ற கலைஞனின் வாழ்க்கையினூடே சிட்னி நிழலாகத் தொடர்ந்தவர். அந்த சிட்னியின் மறைவுச் செய்தியைக் கேட்டுதான் வயதான சாப்ளின் கலங்கிப்போய் இருந்தார், அவர் நினைவுகளை அசைபோட்டபடியே சிந்தனையில் மூழ்கியிருந்தார். இன்னமும் அவர் வாய் அந்த பெயரை உச்சரிப்பதை தொடர்ந்து கொண்டே இருந்தது. சிட்னி...சிட்னி...என் அண்ணா.

துணுக்குச்செய்தி. 

"...சிட்னி, சாப்ளின் இவர்களைத் தவிர்த்து அவர்களது தாய் ஹென்னாவிற்கு "வீலர் டிரைடன்" (Wheeler Dryden) என்ற மகனும் உண்டு. தங்களைப் போலவே அனாதையாக்கப்பட்ட அவரை சாப்ளின் அரவணைத்திருந்தார். கடல்போல் விரிந்திருந்த தன் சினிமா சாம்ராஜ்ஜியத்தில் மாற்று தந்தைக்கு பிறந்திருந்தாலும் தன் தம்பிக்கும் ஓர் இடத்தை கொடுத்திருந்தார். சாப்ளினின் The Great Dictator மற்றும் Monsieur Verdoux திரைப்படத்தில் உதவி இயக்குனராக பனிபுரிந்து பிற்காலத்தில் நடிகராகவும் இயங்குனராகவும் விளங்கி சாப்ளினின் பெயரை டிரைடன் காப்பாற்றினார். அமேரிக்காவில் சாப்ளின் விட்டுச்சென்ற சில சொத்துக்களையும் திரைப்பாட நிறுவனத்தையும் அவர் பாதுகாத்து வந்தார்..."

சாப்ளினின் திரைப்பட வரிசையில் அடுத்து.

39. In the Park (1915).


40. The Jitney Elopement (1915).


41. The Tramp (1915).


42. By the Sea (1915).


43. Work (1915).


44. A Women (1915).