லண்டன் பயணமும் முதல் காதலும் - ஒரு நாடோடியின் கதை பகுதி - 5.




பறவைபோல் உலகமெங்கும் சுற்றினாலும் தன் சொந்த ஊருக்கு நினைவுகளை அசைபோட்டபடியே திரும்புவது சுகமான பயணமாக அமையும். அப்படியொரு பயணம் 1921 -ஆம் ஆண்டு சாப்ளினுக்கு கிடைத்தது. தந்தையை இழந்து, தாயை மனநல காப்பகத்தில் அனுமதித்து, பசியோடும் வறுமையோடும் நாடோடியாக தெருக்களில் சுற்றித் திரிந்து, பேப்பர் போடுபவனாக பூ விற்பவனாக ஹோட்டல்களில் எடுபிடிவேலை செய்பவனாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு, கிடைத்த சந்தர்ப்பத்தில் அழுகையை மறைத்து அரிதாரம் பூசி, நாடகக்குழுவில் பத்தோடு பதினொன்னாவது ஆளாக ஒட்டிக்கொண்டு அமேரிக்கா வந்து திரைப்படங்களில் நடித்து பேரும் புகழும் சம்பாதித்து பத்து வருடங்கள் கழிந்த பின் தன் சொந்த நாடான லண்டன் புறப்பட அவர் தயாராகிக் கொண்டிருந்தார்.

இடைப்பட்ட இந்த பத்து வருடங்களில் சாப்ளின் புகழின் உச்சியை அடைந்திருந்தார். உச்சி என்றால் சிகரத்தின் விளிம்பு. அமேரிக்கா மட்டுமல்லாமல் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகன் அவர், அரண்மனை போன்ற வீடு, தினம் ஒரு உடை, மேசை வழியும் சாப்பாடு, வாய் கொப்பளிக்க உயர்வகை மது, வகைவகையான கார்கள், கூப்பிட்டவுடன் ஓடிவரும் வேலையாட்கள், கட்டில் சுகத்திற்கு கணக்கில்லாத பெண்கள், அதனையும் தவிர்த்து எங்கு சென்றாலும் ஈ போல மொய்க்கும் ரசிகர்கள் என அனைத்தும் அவரிடம் இருந்தது. இருந்தும் சாப்ளின் அப்போதும் தனியனாகத்தான் இருந்தார். பசியைவிட கொடுமையானது தனிமை அந்த இரண்டுமே அவருக்கு பலமுறை வாய்க்கப் பட்டிருக்கிறது. இதனையும் தவிர்த்து திருமணமான இரண்டே வருடங்களில் முதல் மணைவியையும் பிரிந்திருந்தார் அவர்களுக்கு பிறந்த குழந்தையும் இறந்திருந்தது.

*I always like walking in the rain, So no one can see me Crying*

என அனைத்தையும் மறந்து உலகையையே சிரிக்க வைத்த சாப்ளினை சுமந்து கொண்டு ஒலிஸிஸ் என்ற பிரம்மாண்ட கப்பல் நிலக்கரி புகையை கக்கியபடி லண்டனை நோக்கி புறப்பட்டது. சாப்ளின் சற்று இளைப்பாற கப்பலின் மேல்தளத்திற்கு வந்து தனது லண்டன் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தார். அதற்கிடையில் லண்டனில் தான் தங்கப்போகும் நாட்களில் சந்திக்க வேண்டிய முக்கிய நபர்களின் பட்டியலும் அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. மகாராணி தொடங்கி அரசியல்வாதிகள் சினிமா பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் என அனைவரும் நட்பு ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் அந்த பட்டியலில் இருக்க, உறவுகள் என சொல்லிக் கொள்ளும்படி யாரும் அங்கும் இல்லாதது சாப்ளினுக்கு வருத்தத்தை அளித்தது. ஆம், நான் இப்போதும் தனியன்தான் என அவர் மனதிற்குள் நினைத்த வேலையில், வானில் கடந்துபோகும் மேகம் திடீரென மலை முகட்டை உரசிவிட்டு சிறிது மழைத்துளிகளை கொட்டிவிட்டு செல்வதைப் போல "ஹெட்டி" அவரது நினைவுக்குள் மோதினாள்.

சாப்ளின் தனது 19 -வது வயதில் லண்டனின் புகழ்பெற்ற நாடக அரங்கமான எம்பையர் விடுதியில் ஒரு நடன ஒத்திகையின் போது சந்தித்த பெண்தான் இந்த ஹெட்டி. பார்த்ததும் அவளிடம் மனதை பரிகொடுத்த அவரால் அவளின் காதலைப் பெறமுடியாமல் போனது. முதலில் ஹெட்டி சாப்ளினுடன் பழகினாலும் பிறகு அவரை முழுவதும் நிராகரித்திருந்தாள். தன்னிடம் எது இல்லை? ஆம் எதுவுமே இல்லை என்ற எண்ணம் அப்போது சாப்ளினுக்கு தோன்றியது. ஒருநாள் அனைத்தையும் அபகரிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையும் உதித்ததது. பிறகு வருடங்கள் கழிந்தன சாப்ளின் லண்டனிலிருந்து அமேரிக்கா வந்தார்.

முதல் காதல் முழுவதையும் கசக்கி பிழிந்துவிடும் அதற்கு அடுத்து தோன்றுவதற்கெல்லாம் வெறும் சக்கையே மிஞ்சும் என்பதற்கேற்ப சாப்ளினின் வாழ்வில் ஹெட்டிக்குபின் பல பெண்கள் கடந்து போனார்கள். ஆனால் அவர்களிடம் சாப்ளின் ஹெட்டியையே தேடினார். தன்னை நிராகரித்து ஒதுக்கினாலும் வாழ்வின் ஒருமுறையாவது மறுபடியும் ஹெட்டியை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் அலையடித்துக் கொண்டே இருந்தது. தான் உலகின் மிகப்பெரிய சக்தியாக மாறிக் கொண்டிருக்கிறோம் என தெரிந்தும் சாப்ளின் தன் வளர்ச்சியினூடே ஹெட்டியை தன் முதல் காதலை தேடிக்கொண்டே இருந்தார். கடைசியில் லண்டனில் No5, Tilney Street, Mayfair, என்ற முகவரியில் தன் கணவருடன் ஹெட்டி வசிப்பதான செய்தி அவருக்கு சில வருடங்களுக்கு முன் கிடைத்திருந்தது. உடனே அந்த முகவரிக்கு மலர்கொத்து ஒன்றை அனுப்பியிருந்தார். ஆனால் அதற்கு பதிலும் அதன் பிறகு எந்தவொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை. மீண்டும் ஹெட்டியை தேடிய காலங்களில் அவளது சகோதரனான ஆர்த்தர் (Arthur) என்பவரைப்பற்றி தகவல் அவருக்கு கிடைக்க, இந்த லண்டன் பயணத்தில் ஆர்த்தரை சந்திக்க சாப்ளின் முன்னமே ஏற்பாடு செய்திருந்தார். அந்த முதல் காதல், அந்த முதல் காதலி, ஹெட்டியின் நினைவுகள் கப்பலின் மேல்தளத்தில் நின்றுகொண்டிருந்த சாப்ளினை மழையாக நனைத்திருந்தது.

இத்தனை நாட்களாக எங்கு இருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? என்ன செய்கிறாள்? என்ற சிந்தனைக்கு காரணமான அவளை கண்டுபிடித்துவிட்டேன். பார்க்கும் எல்லா பெண்களிடம் தேடிய அந்த அந்த பார்வையை மீண்டும் காணப் போகிறேன். நான் தனியன் இல்லை ஆம்! லண்டனில் எனக்கென்று ஒரு உறவு இருக்கிறது அதனை சந்திப்பேன், அதனை சந்திக்கத்தான் இதே வந்துகொண்டிருக்கிறேன் என்ற உற்சாகம் சாப்ளினுக்கு பிறந்தது. அதனை ஆமோதிப்பது போல் புகைபோக்கியிலிருந்த சங்கு இரண்டுமுறை ஊத ஒலிஸிஸ் கப்பல் லண்டனை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

சாப்ளின் லண்டனில் ஹெட்டியின் சகோதரனை சந்தித்தாரா? அவர் மூலம் ஹெட்டியை கண்டுபிடித்தாரா? என்ன நடந்தது? என்பதை ஹெட்டியுடன் சாப்ளினின் முதல் காதல் அனுபவத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம். 

துணுக்குச் செய்தி.. 

1921- ஆம் ஆண்டு சாப்ளினின் இந்த லண்டன் பயணம் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. முன்பு குறிப்பிட்டதுபோல் நட்பு ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் புகழ்பெற்றவற்களை சந்தித்து பழகும் வாய்ப்பினை அவர் பெற்றார். வெறும் கோமாளியாகவும் நடிகனாகவும் இருந்த அவருக்கு உலக ஞானமும் கிடைக்கப்பெற்றது இந்த பயணத்தில்தான். அதைவிட சாப்ளின் லண்டனில் இறங்கியவுடன் அவரைக் காண காத்திருந்த லட்சக்கணக்கான ரசிகர்களின் கூட்டம் அவர் மனதில் எண்ணற்ற கேள்விகளை எழுப்பியிருந்தது. எதற்காக இந்த கூட்டம்? எதைக் காண இவர்கள் காத்திருக்கிறார்கள்? என்னிடம் என்ன உள்ளது? நான் என்ன செய்துவிட்டேன்?. அதற்கான பதிலை சாப்ளின் பிறகு தான் தயாரித்த படங்களின் வழியே காட்டியிருந்தார்.

சாப்ளினின் திரைப்பட வரிசையில் அடுத்து.

27. The New Janitor (1914).


28. Those Love Pangs (1914).


29. Dough and Dynamite (1914).



30. Gentlemen of Nerve (1914).


31. His Musical Career (1914).


32. His Trysting Place (1914).