வீரம்.

 
புறப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக் கொண்டது புறநானூறு. அதில் பெரும்பாலான பாடல்கள் பண்டைய தமிழர்களின் வீரத்தையே பறைசாற்றுகின்றன. கவணிக்க இங்கு வீரம் என்பது கல்லைத் தூக்குவதும், காளையை அடக்குவது அல்ல. (அவையெல்லாம் Secondary வீரங்கள். பொழுதுபோக்கிற்காக, அத்தை மகள் மாமன் மகள் மற்றும் சில கண்ணியர்களின் மனதின் Favorite லிஸ்டில் இடம்பிடிக்க செய்யப்படும் புஜபலபராக்கிரம வேலைகள்). இங்கு வீரம் என்பது போர்க்களத்தில் புரிந்த சாகசங்களைப் பற்றியதாகும்.

முப்படைகள் வந்தாலும் போர்க்களத்தில் எதிர்த்து நின்று எதிரியை வென்ற பாகுபலி மன்னர்களும், தோற்றுப் போனாலும் போராடி குதிரையிலோ, தேரிலோ அமர்ந்தபடியே சிவலோகப் பதவியை அடைந்த மன்னர்களும் புறநானூற்று காலத்தில் நாட்டை ஆண்டு வந்திருக்கிறார்கள். கூடலும், கூடல் நிமிர்த்தமுமாக காதலோடு கொஞ்சிக் குழாவிக் கொண்டிருந்தாலும் போர் என வந்துவிட்டால், ஏன்? எதற்கு? எப்படி? நாடு இருக்கிற நிலைமையில் இதெல்லாம் அவசியமா? என கேள்வி கேட்காமல், சேகுவாரா டிசர்ட் மாட்டிக்கொண்டு பேரணிக்கு புறப்படுவதைப் போல வேட்டியை மடித்துக்கொண்டு(அந்த காலத்தில் வேட்டி இருந்ததா என்ற சந்தேகம் உள்ளது) ஆண்கள் போர்க்களம் சென்றனர். கள்வன், காதலன், கணவன், டார்லிங், பப்பி, டாமி, புஜ்ஜி என்று தன் மனம் கவர்ந்தவனைப் பற்றி சொல்வதைவிட, என் ஆளு "சிறந்த போர் வீரன்". என சொல்லிக் கொள்வதையே கட்டிய பெண்கள் பெருமையாகக் கருதினர். உன் மகன் புறமுதுகிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டு, அப்படி எதுவும் இருக்காது என்மகன் வீரன் அவன் முதுகில் காயம்பட்டு இறந்திருந்தால் அவனுக்கு பால் புகட்டிய என் மார்பகத்தை வெட்டி எரிவேன் என்று போர்களத்திற்கு ஆவேசமாகச் சென்ற வீரத்தாய் புறநானூற்று காலத்தில் வாழ்ந்திருக்கிறாள். படித்த பண்டிதர்கள், புலவர்கள், அரசியல்வாதிகள், அரண்மனை அல்லக்கைகள், வசதிவாய்ப்பில் செழித்தவர்கள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் இவர்களை விட ஒரு போர் வீரனை மக்கள் மிகவும் மதித்தனர். மொத்தத்தில் புறநானூறு கூறும் வீரம் என்பது தன் உயிரை பெரிதாக நினைக்காமல் தன் நாட்டையும் தன் இனத்தையும் அதனைச் சார்ந்த வாழ்வியலையும் பேணிக் காக்கும் ஒருவனது அறமாகும்.

சங்க இலக்கியம் - புறநானூறு
பாடல் - 86
பாடியவர் - காவற்பெண்டு
திணை - வாகைத்திணை
துறை - ஏறாண் முல்லை

அத்தகைய வீரமிகுந்த காலத்தில் ஒரு நாட்டில் போர் சூழல் நிலவுகிறது. போர்க்களத்திற்கு அனுப்ப ஆட்களைத்தேடி அரண்மனை பணியாளர் ஒருவன் மக்கள் வசிக்கும் தெருப்பகுதிக்கு வருகிறான். தெருவில் இருக்கும் காவற்பெண்டு என்ற பெண்மணியில் வீட்டில் வந்து நின்று உன் மகன் எங்கே இருக்கிறான்? என கேட்கிறான். அந்தப் பெண்மணி நவீன தாயாக இருந்திருந்தால் "அவனா! எங்கையாவாது முட்டுசந்து இல்ல, டாஸ்மாக்ல இருப்பான் போய் பாரு" என பதில் அளித்திருப்பாள். அதனையும் தவிர்த்து "அவனா! மொட்டைமாடி இல்ல மரத்துக்கு மேல ஜியோ டவருக்காக உட்கார்ந்திருப்பான் போய் பாரு" என பதில் கொடுத்திருப்பாள். ஆனால் அது சங்க காலம். அதிலும் அந்த பெண்மணி "காவற்பெண்டு" சங்ககால பெண் புலவர்களில் ஒருவர். அதனால் உன் மகன் எங்கே என கேட்டதும் அவருக்கு கோபம் வந்துவிட்டது. என் மகன் எங்கிருக்கிறான் என எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற வயிறு புலி தங்கிவிட்டு சென்ற குகையைப் போன்றது. போர் தொடங்கியது அவனுக்குத் தெரியும், அவன் இருக்குமிடம் நிச்சயம் போர்க்களமாகத்தான் இருக்கும் என வீரத்தோடு பாடியதாக அமைந்தது இந்தப் பாடல்.

சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்
யாண்டுளனோ என வினவுதி என் மகன்
யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க் களத்தானே.


பொருள்.

எனது சிறிய வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றிக்கொண்டு "உன் மகன் எங்கு உள்ளான்? என கேட்கிறாய். என் மகன் எங்கு இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற என் வயிறு புலி தங்கிவிட்டு போன கல் குகையைப் போன்றது. அத்தகைய புலிபோல வீரம் கொண்டவனை போர்க்களத்தில் தான் காண முடியும்.