தனிமையின் தாபங்கள்.




காதலோ,நண்பர்களோ, உறவினர்களோ யாரும் உடனில்லாதபோது நாம் தனிமையை உணர்கிறோம். ஏனெனில் அன்பும், அது தரும் தனிமை உணர்வும் பிரிக்கமுடியாதவை. இளம் வயதில், நடுத்தர வயதில், முதுமையான கடைசி காலத்தில் வயதிற்கேற்ப தனிமை வேறுபடுகின்றன. அன்பைத்தேடும் அந்த தனிமை உணர்வுடன் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் வசிக்கும் நான்குபேரின் கதைதான்  "Be with me ".

உண்மையான அன்பு எங்கே இருக்கிறது என் அன்பே?உன் கதகதப்பான இதயத்தில் - என எழுத்துக்கள் டைப்ரைட்டரில் தளர்ந்த கைகள் டைப் செய்ய திரைப்படம் துவங்குகிறது. கண் தெரியாத வாய் பேசமுடியாத அறுபது வயதான தெரஸா சிறுவர்கள் பள்ளியில் பணிபுரிகிறாள். கனவனை இழந்த அவள் வீட்டில் தனிமையில் இருக்கும் நேரத்தில் தன் வாழ்க்கை கதையை டைப்ரைட்டரில் எழுதிக்கொண்டிருக்கிறாள்.


பள்ளி மாணவியான ஜாக்கி கம்பியூட்டரில் உள்ள விசைப்பலகையில் உள்ள எழுத்துக்களை அழுத்தி இன்டெர்நெட்டில் சேட்டிங் செய்கிறாள் "நெருக்கமான நட்பில் நம்பிக்கை இருக்கிறதா?"  என டைப் செய்கிறாள். "ஆம்" என பதில் வருகிறது. உடனே இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்துகொள்கின்றனர். அவளுக்கும் சாம் என்ற பெண்ணுக்கும் நட்பு தொடங்குகிறது.

பலசரக்கு கடை வைத்திருக்கும் அந்த முதியவர் காலையில் எழுகிறார். தன் மனைவி இறந்தபின் யாருமற்ற வீட்டில் தனியாகத் தன் கடையில் இருக்கிறார். உணவை சமைத்து எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போகிறார். தன் நினைவிலிருக்கும் மனைவிக்கு உணவை ஊட்டுவதாக கற்பனை செய்துகொண்டு அங்கேயே உட்கார்ந்திருக்கிறார். இரவானதும் உணவை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்புகிறார்.

நடுத்தர வயதை சேர்ந்த திருமணமாகாத காவலாளி காக்சென் நண்பர்கள் யாரும் இல்லாததால் தன் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறான். தான் வேலை செய்யும் அடுக்குமாடி அலுவலத்தில் புதிதாக ஒரு பெண்ணைப் பார்க்கிறான் அவளது அன்பைப்பெற முயற்சிக்கிறான். அவளுக்கென ஒரு வாழ்த்து அட்டை தயார்செய்து காதலைச் சொல்ல காத்திருக்கிறான்.

இப்படி அந்த நகரத்தின் அன்றைய இரவில் நான்கு பேரும் விதவிதமான தனிமையில் இருக்கிறார்கள். சொந்த கதை எழுதும் தெரசாவிற்கு வயதான பலசரக்கு கடை வைத்திருக்கும் வயதானவருக்குமிடையே அவரது மகன் மூலம் அறிமுகம் கிடைக்கிறது. ஜாக்கி-சாம் நட்பில் விரிசல் விழுகிறது சாம் ஜாக்கியை வெறுக்கத்தொடங்குகிறாள். காவலாளி அந்த பெண்ணிண் நினைப்பிலே தூங்காமல் விழித்திருக்கிறான். தனிமைக்கொண்ட இரவுகள் நகர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நால்வருக்குமிடையே நிகழும் தனிமைதான் படத்தின் கதையே. 

நகர வாழ்க்கையில் அன்பிற்கான ஏக்கத்தையும், தனிமையையும் இப்படம் நுணுக்கமாகப் பதிவு செய்கிறது.நால்வர் கதையும் துண்டுத்துண்டாக வரிசையின்றி அடுக்கி கடைசியில் ஒரே புள்ளியில் இணைக்கிற திரைக்கதை பிரம்மிக்க வைக்கிறது.தெரசா சான் என்கிற பெண்ணின் சுய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அவரையே நடிக்க வைத்து ஒரு உண்மைக் கதையும் இரண்டு கற்பனைக் கதையையும் கலந்துக்கொடுத்திருக்கிறார் இயக்குனர் எரிக் கூ (Eric khoo) .மிகக் குறைவான வசனங்களுடன் வாழ்க்கையின் இயல்பான தன்மைகளோடு எடுக்கப்பட்ட சிங்கப்பூர் நாட்டுப்படம். பல விருதுகளை வென்றது தவறாமல் பாருங்கள்.