உயிரினங்களின் சில வினோதங்கள்.

டப்பதை எல்லாம் பார்க்கும் போது ஒரு விலங்காக பறவையாக மீனாக புழு பூச்சியாக பிறந்திருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. இனப்பெருக்கத்திற்கும் உணவிற்கும் வாழிடங்களுக்கும் வக்கத்த நிலையில் அவைகள் இருந்தாலும், சூடு, சுரணை, வெட்கம், மானம், ரோசம், சுயபுத்தி, அன்பு, காதல், கருணை கொண்ட ஒரு சிங்கமாக, யானையாக, நரியாக, ஆடு கோழி வாத்து குருவி தவளை ஓனான் பாம்பு பல்லி திமிங்கிலமாக, அல்லது எது நிகழ்ந்தாலும் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் தன்னையும் தன் இனத்தையும் ஜீவித்துக் கொள்ளும் ஒரு கரப்பான் பூச்சியாக வாழ்ந்துவிட்டு போகலாம் என்றுதான் தோன்றுகிறது. ஈனப் பிறவி எடுத்தாயிற்று. சரி!.. விசயத்திற்கு வருவோம். 


விலங்குகள் பறவைகள் மீன்கள் பூச்சிகள் புழுக்கள் என இந்த உலகில் வாழும் சிறிய பெரிய அனைத்து உயிரினங்களின் படைப்பிலும் தனித்தன்மைகள் ஒளிந்திருக்கிறது அதில் சில வேடிக்கை நிறைந்ததாகவும் வினோதமாகவும் இருக்கின்றது. அதனைைப் பற்றி  சுவாரசியமாக பார்க்கலாம் வாருங்கள். 

இதயத் தலையன்.


பூச்சியா - மீனா? நடக்குதா - நீந்துதா? என்ற குழப்பத்தில் கடல் நீரிலும் நன்னீரிலும் வசிக்கும் அதிசய படைப்பு இறால்கள். இந்த இறால்களுக்கு இதயம் எங்கிருக்கிறது எனத் தெரியுமா? இறால்களுக்கு இதயம் அதன் தலையில் இருக்கிறது. உடற்கூற்றின் படி இறால்களுக்கு தலை மற்றும் வால் என இரண்டு பகுதிகள் மட்டுமே உண்டு. 'என்ன நைனா உடம்பு எப்படி இருக்கு?' என இறால்களை பார்த்து கேட்க முடியாது. அதன்படி சேஃபலோ தோராக்ஸ் (Cephalo thorax) என்ற பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் தலையின் பின்புறம் அதன் இதயம் அமைந்திருக்கிறது. இதயம் மட்டுமல்லாமல் அதன் சிறுநீரகமும் அங்குதான் இருக்கிறது. 'ஓ மைடியர், யூ ஆர் மை ஹார்ட்' என தலையின் பின்புறம் கையை வைத்து 'ஐ எம் லவ் இன் & லைவ் இன் வித் யூ' என காதலை புரபோஸ் பண்ணும் ஒரு இறாலை கற்பனை செய்து கொள்ளுங்கள். 

பாக்ஸர்.


அதே இறால் வகைகளில் இந்தோ பசிபிக் கடலில் வாழும் பீக்காக் மாண்டிஸ் (Peacock mendes shrimp) என்ற ஒருவகை இறாலுக்கும் இதயம் தலையில்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தவகை இறால்கள் சிறந்த பாக்ஸரும் கூட. எதிரிகளிடமிருந்து  தற்காத்துக் கொள்ள இயற்கை அதற்கு இந்த தற்காப்பு கலையை கற்றுக் கொடுத்திருக்கிறது. தங்களுக்கு ஆபத்து நிகழும் நேரத்தில் இந்தவகை இறால்கள் தங்களின் கை போன்ற அமைப்பால் எதிரிகளை தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் போது அந்த தாக்குதலின் வேகம் சுமார் 80 கி.மீ  அளவை கொண்டிருக்கும். அதாவது ஒரு .22 காலிபர் துப்பாக்கியின் குண்டு வெளிப்படும் அழுத்தமான 340 பவுண்ட் அழுத்தத்தை ஒத்திருக்கும். நீருக்கடியிலேயே இந்த வேகம் என்றால் பாக்ஸர் இறால்களின் கையால் குத்துபடும் எதிரியின் நிலை?..நிச்சயம் இறுதிச்சுற்றுதான். 

தூங்குமூஞ்சி. 


உலகிலேயே படு ஸ்லோ ஆசாமி நத்தைகள்தான். மூச்சுவிட, அசைய, ஊர்ந்து போக, சாப்பிட, சூச்சூ-கக்கா போக, அட! ஏன்? தூங்க, தூங்கி விழிக்கக்கூட அவைகளுக்கு எல்லாமே ஸ்லோமோஷன்தான். ஒரு நத்தை குட்நைட் ஸ்வீட் டீரீம்ஸ் சொல்லிவிட்டு தூங்கப் போனால் மறுபடியும் கண்விழிக்க கிட்டதட்ட மூன்று வருடங்களாகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நத்தைகளுக்கு இருக்கவே இருக்கிறது மொபைல் வீடு மன்னிக்கவும் மொபைல் கூடு அந்த கூட்டில் உடலை உள்ளிழுத்துக் கொண்டு தூங்கும் நத்தைகளை காற்று, நீரோட்டம், விலங்குகள், பறவைகள் போன்றவை ஓரிடத்திலிருந்து நகர்த்தி வேறிடத்திற்கு கொண்டு சேர்த்துவிடும். சில மீன்கள் நத்தைகளை விழுங்கி அது செரிக்காமல் சில நாட்களுக்குபின் துப்பிவிடுவதும் உண்டு. ஆனால் தூங்கும் நத்தைகளுக்கு நடந்தது என்ன? எனத் தெரியாது அந்த தருணத்தில் நிகழ்ந்த அனைத்துமே கனவுபோல் தோன்றும். ஆதலால் தூங்கி விழிக்கும் பெரும்பாண்மையான நத்தைகளின் முதல் கேள்வி 'ஆமா! நான் எங்க இருக்கேன்?' என்பதாகவே இருக்கும். 

இங்கிலிஷ் கிஸ். 


நத்தையை விடுவோம் நம் கதைக்கு வருவோம். நாமெல்லாம் தூங்கி விழித்தவுடன் செய்யும் முதல் காரியம் செல்போனை தேடுவதாகவே இருக்கும். தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள், சகோதர சகோதரிகள் என உறவுகளுக்கும் நட்புகளும் எழுந்தவுடன் ஒரு காலை வணக்கம் சொல்லும் பழக்கத்தைக் கூட விடுத்து செல்லோடு செல்லம் கொஞ்சும் நிலைக்கு மாறிவிட்டோம். ஆனால் வட அமேரிக்கா, கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் வாழும் பிரெய்ரி டாக்ஸ் (Prairie Dogs - தரை நாய்) என்ற விலங்குகள் அப்படியில்லை. அவைகள் ஒவ்வொரு நாளையும் முத்தத்தோடு தொடங்குகின்றன. பார்ப்பதற்கு அணில் போன்ற முகமும் கீரிப் பிள்ளை போன்ற உடலும் கொண்ட ஒருவகை எலி இனத்தை சார்ந்த இவைகள் புதிய நாளின் தொடக்கத்தையும் புதிய நட்புகளையும் கட்டிப் பிடித்து முத்தமிட்டு அன்போடு ஆரம்பிக்கின்றன. குடும்பமாக வாழும் இவைகள் 'அட! டெய்லி பாக்குற மூஞ்சிதானே இது' என சலித்துக் கொள்ளாமல் ஒவ்வொரு நாளும் இதை கடைபிடிக்கின்றன. குடும்பமாக மட்டுமல்லாமல் ஒரு சமூகமாக வாழும் இவைகள் மற்றொரு சமூகத்தை சேர்ந்த குழுக்களை சந்திக்க நேர்ந்தாலும் அந்த கட்டிப்பிடி வைத்தியத்தையும் முத்த பரிமாற்றத்தையும் மறப்பதே இல்லை. புதிய உறவுகள் நட்புகள் என்றால் இவைகள் மூக்கோடு மூக்கு வைத்து முத்தமிடுகின்றன. அதுவே நெருங்கிய சொந்தம் என்றால் சொல்லவே தேவையில்லை இங்கிலிஷ் கிஸ்.  

எறும்பாபிமானம்.


எறும்புகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் ஏகப்பட்டவை இருக்கின்றன. அதற்கு ஆப்பிரிக்காவில் வாழும் மாடபெல் (Matabele Ants) என்ற ஒருவகை எறும்பும் விதிவிலக்கல்ல. பெரும் கூட்டமாக வாழும் இந்த எறும்புகளின் வாழ்க்கை சற்று சவால்கள் நிறைந்தது. ஒவ்வொரு நாளும் உணவிற்காக அவைகள் போராடும் நிலையில் அதன் கூட்டத்தில் உள்ள எறும்புகள் சில காயம் படுவதும் இறந்து போவதும் நிகழ்வதுண்டு. இது அனைத்தும் இயற்கையின் விதி என நொந்து கொள்ளாமல் இந்த எறும்புகள் அவ்வாறு காயம்படும் எறும்புகளுக்கு முதலுதவி செய்கின்றன. பலத்த காயம்பட்ட எறும்புகளை தங்கள் இடத்திற்கு தூக்கிச் சென்று அதற்கு முன்பே தயாரித்து வைத்திருக்கும் மருந்துகளை இட்டு குணப்படுத்துகின்றன. மேலும் இறந்த எறும்புகளை அடக்கம் செய்யும் நற்பண்பும் இவைகளுக்கு இருக்கிறது. ஒரு உயிரின் மதிப்பு என்ன என்பதையும், மனிதாபிமானம்??? 'அதுதான் இல்லையே' சரி! எறும்பாபிமானம் என்றால் என்ன என்பதையும் இந்த எறும்புகளிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். 

சரக்கு பார்ட்டி


நமக்கு ஒன்றுவிட்ட பரிணாம சொந்தமான சிம்பன்சி குரங்குகளில் கினியா தீவுகளில் வாழும் சிம்பன்சி குரங்குகளுக்கு மட்டும் மற்றதை காட்டிலும் ஒரு வித பழக்கம் இருக்கிறது. அவைகள் அந்த காட்டில் விளையும் ராஃபியா (Raffia palm) என்ற ஒருவகை பேரிச்சை பழங்களை அழுகிய நிலைக்கு வந்தவுடன் சாப்பிடும் வழக்கத்தை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. மேலும் அந்த பழங்களை சேகரித்து அது அழுகி நொதிக்கும் வரை பத்திரப்படுத்தி வைக்கின்றன. இந்த பழங்களுக்காக அவைகளுக்குள் ஞானப்பழ சண்டைகளும் நிகழ்வதுண்டு. சரி! அப்படி என்ன அதிசயம் அந்த பழத்தில் இருக்கிறது என்றால்? அந்த நொதித்த பழத்தில் 3.1 முதல் 6.1% ஆல்கஹால் நிறைந்திருக்கிறது. இப்போது தெரிகிறதா சரக்கடிக்கும் பழக்கம் எங்கிருந்து வந்ததென்று. 

கொம்பன்.


காண்டாமிருகத்திற்கு மயிறே கொம்பு. மயிறு என்று எழுதினால் கெட்ட வார்த்தை ஆகிவிடும் ஆதலால் காண்டாமிருகத்திற்கு முடியே கொம்பு. மற்ற விலங்குகளின் கொம்புகள் கரோட்டின் என்ற புரதத்தால் ஆனது. ஆனால் அதற்கு சற்று மாற்றாக காண்டாமிருகங்களின் கொம்புகளில் கால்சியம் மற்றும் மெலானின் பொருட்கள் இருக்கிறது. அதனை வைத்து ஆராய்ச்சி செய்ததில் அதன் முடியே கொம்பாக மாறியிருக்கிறது தெரிய வந்துள்ளது. பிறந்த ஆறுமாதங்களுக்கு பிறகே காண்டாமிருகங்களுக்கு கொம்பு வளரத் தொடங்கும். இரண்டு வயதில் 3.3- 5.5 மி.மீ அளவிற்கும், மூன்று வயதில் 8.8 - 13.2 மி.மீ அளவிற்கும், இருபதாம் வயதில் 22 செ.மீ அளவிற்கும் வளரும். இந்த கொம்புகள் புற ஊதாக் கதிர்களை தடுக்கவும் எதிரிகளிடம் சண்டை போடவும் அவைகளுக்கு பயன்படுகிறது.  காண்டாமிருகங்கள் தங்கள் கொம்பை வளரும் பருவத்திலிருந்து கடைசி காலம் வரை அழகுபடுத்தி பாதுகாத்துக் கொள்கின்றன. சண்டைகளிலோ அல்லது நோய்வாய்ப்பட்டோ அதனை இழக்க நேர்ந்தால் மxxx முடியே போச்சு என்றில்லாமல் கவரிமான் போன்று இவைகளும் இறந்துவிடுவதுண்டு. 

நாகாக்க


யாகவராயினும் நாகாக்க என வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.கண்டிப்பாக நாக்கை அடக்கவேண்டும். சிலருக்கு இது புரிவதேயில்லை மைக்கை நீட்டியவுடன் கண்டதை உளறி, செத்துப் போனவர்களையெல்லாம் எழுப்பி, வரலாற்று புத்தகத்திற்கு அட்டைபோட வைத்து, போகட்டும் விடுங்கள். ஆனால் பச்சோந்திக்கு இது உதவாது அது நாகாத்தால் ஸ்வாகாதான். தன் நீளத்தை விட எண்ணிக்கையில் இரண்டு மடங்கு நாக்கு அதற்கு இருக்கிறது இரையை பிடிக்க இறைவன் படைத்த அற்புதம் இது . பச்சோந்தி தன்னுடைய நாக்கை கொண்டு 0.07 நொடி துள்ளியத்தில் இரையை பிடித்துவிடும். அதன் நாவல் 45 கிராம் எடையை அசால்டாக இழுத்து தன் சாப்பாட்டு டேபிளுக்கு மெனுவாக கொண்டுவர முடியும்.