இலியட்.



வதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே....

சர்ச்சை வேண்டாம்.... ஆளை இழுத்து உருவான இராமாயணமாகட்டும்,
ஆடை இழுத்து உருவான மகாபாரதமாகட்டும் உலகின் பழம்பெரும் புராண இதிகாச காவிய காப்பிய கதைகளின் ஒருவரி கதைச் சுருக்கம் 'ஒரு பெண் அவளுக்கான போராட்டம்' என்பதாகவே இருக்கும் அதனை கருத்தில் கொண்டுதான் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே எனத் தொடங்கினேன். உலகில் தோன்றிய எந்த காப்பியமும் இதற்கு நிகரில்லை என வர்ணிக்கப்படும் இலியட்டின் கதையும் இத்தகையதே.

இந்த காப்பியத்தின் கதை மூவாயிரம் சொச்சம் வருடங்களுக்கு முந்தையது. அக்காலகட்டத்தில் ஒருநாளில் டிராய் என்ற நாட்டின் இளவரசனான பாரிஸ் என்பவன் அரசாங்க வேலைக்காக கிரேக்கத்தில் உள்ள ஸ்பார்ட்டா என்ற பகுதிக்குச் செல்கிறான். அங்கு தற்செயலாக ஸ்பார்ட்டாவின் அரசனான மெனிலயஸ் என்பவனின் மனைவியான ஹெலனை காண்கிறான். கிரேக்கத்தின் முதன்மை கடவுளான ஜீயூஸிர்க்கும் லீடா என்ற பெண்ணிற்கும் முட்டையிலிருந்து பிறந்ததாக கருதப்படும் பேரழகு கோழியான (கோழியோ, வாத்தோ, மயிலோ, பென்குயினோ) ஹெலனை கண்டதும் பாரிஸ் மொத்தமுமாக உருகிப்போகிறான். ஹார்மோன்களின் புண்ணியத்தில் பிரச்சனை தொடங்க அவளை கடத்திச் சென்று தனது நாட்டில் உள்ள இலியம் என்ற ஊரில் சிறை வைக்கிறான். பாரிஸும் பேரழகு நிறைந்தவன் என்றும், ஹெலனுக்கும் பாரிஸுக்கும் இத்யாதி உண்டு என்றும், அவளே அவனுடன் விரும்பிச் சென்றதாகவும் சொல்வதுண்டு. எது எப்படியோ? இருட்டிய உண்மை ஹெலனுக்கே வெளிச்சம்.

இதற்கிடையில் ஹெலனை மீட்க அவளது கணவனான மெனிலயஸ் தன் அண்ணன் அகமெம்னன் என்பவனின் உதவியை நாடுகிறான். கிரேக்க நாட்டின் படைகளுக்கெல்லாம் ஒட்டுமொத்த தளபதியான அகமெம்னன் பெரும் படையை திரட்டிக்கொண்டு டிராய் நகரத்தை முற்றுகையிடுகிறான். கிட்டதட்ட 1186 பெரும் கப்பல்களுடன் நுழைந்த கிரேக்க படையை டிராய் நகரத்தின் மாபெரும் மதில் சுவர்கள் தடுத்து நிறுத்த முற்றுகை பல வருடங்கள் நீடிக்கிறது. பெரும் போரும்  தொடங்குகிறது.

அச்சேன்ஸ் என அழைக்கப்படும் கிரேக்க படையில் மன்னன் பாரிஸ்,
தளபதி அகமெம்னை இவர்களை சேர்த்து மைமிடோன்சின் தலைவன் அக்கிலிஸ், இதகாவின் அரசன் ஒடிஸியூஸ், மற்றும் அஜாக்ஸ்-இளைய அஜாக்ஸ், டயமீடிஸ், பெட்ரோக்குலஸ் நெஸ்டர், மேலும் பலர் பங்குபெறுகிறார்கள். ட்ரோஜன்கள் என அழைக்கப்படும் டிராய் நாட்டு படையில் இளவரசன் பாரிஸுடன் அரசன் ஹெக்டர், ஈனியாஸ், ஐனோயா, டைபோபஸ், பிரியம், பாலிடாமஸ், அகனார், சார்பெடன், க்லாக்கஸ் போன்றவர்கள் பங்குபெறுகிறார்கள். இதனையும் தவிர்த்து கிரேக்க கடவுள்களான  அஃப்ரொடைட்டி (வீனஸ்), அப்பல்லோ, ஏரிஸ், அதீனி, க்ரோனஸ், ஃப்யூரிகள், ஹயடிஸ், ஹெஃபைஸ்டஸ், ஜீயூஸ், ஹீரா போன்றவர்களும் தீட்டீஸ், போன்ற தேவதைகளும் இருதரப்பிற்கும் சாதகபாதகமாக இருக்க அனைவரின் தயவால் ஏகபோகமாக ஏகப்பட்ட தலைகள் உருள போர் தீவிரமடைகிறது. ஆரம்பத்தில் ஹெலன் என்ற பெண்ணிற்காகத் தொடங்கிய ட்ரோஜன் போர் என அழைக்கப்படும் இந்த போர் பின்னர் மைமிடோன்சின் படைத் தலைவன் அக்கிலிஸின் கோபமாக மாறி பத்தாண்டுகள் வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இலியட் என்ற இந்த மாபெரும் காப்பியம் அந்த பத்தாண்டு காலகட்ட ட்ரோஜன் போரின் இறுதியான ஐம்பது நாட்களின் நிகழ்வை கவிதையாக விவரிக்கிறது.

இலியட் என்ற இந்த காப்பியத்தை எழுதியவர் ஹோமர். இவர் கிருஸ்து பிறப்பதற்கு 700 ஆண்டிற்கு முன்பு வாழ்ந்தவர் என நம்பப்படுகிறது. அயோனா என்ற கிரேக்க கடற்கரைதான் (தற்போது துருக்கிக்கு அருகில்) ஹோமர் பிறந்த ஊர் என்றும், அவர் கண்பார்வையற்றவர் என்றும், இருந்தும் இலியட், ஒடிஸி என்ற இரண்டு மாபெரும் காப்பியங்களை படைத்தார் என்றும் நம்பிக்கை உள்ளது. ஹோமர்தான் இந்த காப்பியத்தை எழுதினாரா? அல்லது பலர் எழுத இவர் தொகுத்தாரா? ஹோமர் என்ற ஒருவர் இருந்தாரா? என்ற ரா சந்தேகங்களும் ஒருபுறம் இருக்க ஒரு கவிஞனின் பார்வையில் கிரேக்க நாகரீகத்தையும், வரலாற்றையும், அதன் பெருமையையும், சுவாரசியத்தையும், மூவாயிரம் வருடங்கள் பழமையான ஒரு இலக்கியத்தின் சுவையையும் இந்த இலியட் காப்பியத்தின் மூலம் உணர முடிகிறது.

இந்த காப்பியம் 15693  க்கும் மேற்பட்ட கிரேக்க மொழி கவிதைப் பாடல்களைக் கொண்டு 24 பகுதிகளாக பிரிக்கப்பட்டு படைக்கப்பட்டிருக்கிறது. உலகின் பழம்பெரும் காப்பியமான இது பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழில் முதல்முறையாக உரைநடை வடிவில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்மொழியில் அவ்வாறு செய்வது அத்தனை சுலபமான காரியமில்லை என்பதை உணர்ந்து இந்த காப்பியத்தை நாகூர் ரூமி அவர்கள் சிரத்தையுடன் திறன்பட மொழிபெயர்த்துள்ளார்.

கிரேக்க மொழி, மனதில் நிற்காத அனேகப்பட்ட கதாபாத்திரங்கள், நம்பகத் தன்மையான்ற  மாயாஜாலங்கள், மொழிபெயர்ப்பின் சில சிக்கல்கள் இவற்றை தாண்டி நின்று நிதானமாக வாசித்தால் இந்த காவியத்தின் பிரம்மாண்டம் விவரிப்பிற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.
தவறாமல் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.