நம்பிக்கை.

ல்ல நேரம் கெட்ட நேரம் என்பதைப்பற்றி சென்ற கதையில் பார்த்தோம். நல்லது கெட்டது என எல்லாவற்றிற்கும் நேரம் காலம் பார்ப்பது என்பது நமது நம்பிக்கையுடன் தொடர்புடைய காரண காரியங்களாகும். 'அட! அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா மனசு இருந்தா போதும்' என நடப்பதை இயல்பாக  எடுத்துக்கொள்வதற்கும் இந்த நம்பிக்கைதான் காரணம். "நம்பிக்கையே வாழ்க்கை".

நம்பிக்கை என்னும் அச்சாணியில்தான் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. விருட்சமாக வளரும் உறவுகளை எடுத்துக்கொண்டால் நம்பிக்கைதான் அதற்கு ஆணிவேர். அந்த ஆணிவேருக்கு நீர் ஊற்றி முழுமையாக பராமரித்தால் கிளைகள் எத்தனை முறிந்தாலும் கவலைக்கு இடமில்லாமல் உறவுகள் துளிர்விடும். மருத்துவத்தை எடுத்துக்கொண்டால் நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கைதான் முதல் மற்றும் மிகச் சிறந்த அருமருந்தாக இருக்கிறது.

சரி! இந்த நம்பிக்கை என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்?...... அதைப் பற்றிதான் இன்றைய கதை......கதைக்குள் நுழைவோம்......


நம்பிக்கை என்பது மனதோடு  தொடர்புடைய உளவியல் சார்ந்த ஒன்று. அதனால் அது தெளிவாகவும் தீர்க்கமாகவும் முழுமனதோடும் நிரம்பியிருக்க வேண்டும். சொல்லப்போனால் நம்பிக்கைக்கு குழந்தைத்தனமான மனது வேண்டும்.

மாவீரன் அலெக்ஸ்சாண்டரைப் பற்றி நமக்கு ஓரளவிற்கு தெரிந்திருக்கும். ஒருமுறை அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஊரிலிருக்கும் மருத்துவர்களால் அதனை குணப்படுத்த இயலாமலும் போனது. கடைசியில் தனது எதிரி நாட்டின் கைதியாக இருக்கும் மருத்துவர் ஒருவரின் அருமை பெருமைகளை கேள்விப்பட்ட அலெக்ஸ்சாண்டர் தனது உடலை பரிசோதிக்க அவரை விடுதலை செய்து அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவிட்டான். மருத்துவரும் அவனை பரிசோதித்துவிட்டு நோயினை கண்டறிந்து சில நாட்களுக்கு பிறகு மருந்துகளை தயார்செய்து கொண்டுவந்து கொடுத்தார். ஆனால் மருத்துவர் எதிரி நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவர் கொண்டுவந்த மருந்தினை எடுத்துக்கொள்ளும் முன் அரண்மனையில் இருந்த அனைவரும் அலெக்ஸ்சாண்டரை எச்சரிக்கை செய்தனர். அதில் எதிரி நாட்டின் சூழ்ச்சிகள் ஏதாவது இருக்கும் என அஞ்சினர். இதனை பொருட்படுத்தாத அலெக்ஸ்சாண்டர் மருத்துவரின் மீது கொண்ட நம்பிக்கையால் அந்த மருந்தினை உட்கொள்ள சில நாட்களில் அவன் நோய் முழுவதும் குணமாகியது. எதிரி நாட்டு மருத்துவனே என்றாலும் அவர்மீது அலெக்ஸ்சாண்டர் முழு நம்பிக்கை வைத்திருந்தான். அந்த நம்பிக்கையே அவனை உயிர்பிழைக்கச் செய்ததோடு வரலாற்றில் இடம்பெறவும் செய்தது. ஒருவேளை அவன் தான் வைத்த நம்பிக்கையில் சந்தேகப்பட்டு அரைமனதோடு குழப்பத்தோடு இருந்திருந்தால் அவனது வரலாறு பாரசீக நாட்டு மன்னன் ஒருவனின் கதைபோல் ஆகியிருக்கும்.

அந்த பாரசீக நாட்டு மன்னனின் கதைதான் என்ன?...... அதையும் பார்த்துவிடலாம்.

ஒரு காலத்தில் பாரசீக நாட்டை யூனான் என்ற மன்னன் ஆண்டுவந்தான். கண்ட கண்ட வரிகளை வசூலிக்காமல், தனிப்பட்ட இனத்தையோ மதத்தையோ வஞ்சிக்காமல், மக்களுக்கு இம்சை கொடுக்காமல், குறிப்பாக ஊர்சுற்றித் திரியாமல் நல்ல முறையில் அவன் ஆட்சி செய்துவந்தான். நல்லவனாக இருந்ததால் என்னவோ அவனுக்கு ஒருமுறை தொழுநோய் தொற்றிக் கொண்டது. அவனும் போகாத இடம், பார்க்காத ஆள், கேட்காத வைத்தியம் இல்லை என்பதற்கேற்ப இருந்தான். கடைசியில் நாடோடி மருத்துவர் துபான்என்பவரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவிட்டான். மருத்துவர் துபானும் அரண்மனைக்கு வந்து மன்னனை பரிசோதித்துவிட்டு அவனுக்கான மருந்தினை தயார் செய்தார். ஆனால் அந்த மருந்தினை மன்னன் மற்றும் வேறு யாருக்கும் தெரியாமல் அவர் கொடுக்க நினைத்தார்.

மருத்துவர்களின் மருந்து தயாரிப்புமுறை ரகசியமானது. அதிலும் இது ராஜ வைத்தியம். மேலும் ஆட்சியாளர்களுக்கு மருத்துவம் பார்ப்பது என்பது அப்பல்லோ சமாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டது.  அதனால் மருத்துவர் துபான் இதற்கு ஒரு வழியை கண்டுபிடித்தார்.

மன்னன் யூனானுக்கு தினமும் காலையில் போலோ என்ற விளையாட்டை விளையாடும் பழக்கம் இருந்தது. அதனை அறிந்துகொண்ட மருத்துவர் துபான் மன்னன் விளையாடும் போலோ மட்டையிலும் அதன் பந்திலும் தான் தயாரித்த மருந்தை தெரியாமல் தடவிக் கொடுக்க, தினமும் விளையாடி தீர்த்த மன்னனுக்கு தொழுநோய் சில நாட்களில் முற்றிலும் குணமாகியது. பின்வந்த காலங்களில் மருத்துவர் துபானின் ரகசியத்தை தெரிந்து கொண்டு அவருக்கு மன்னன் பொன்னும் பொருளும் கொடுத்து தன் அரண்மனையில் முக்கியஸ்தராக வைத்திருந்தான்.

நாட்கள் கடந்தது. அரண்மனையில் மருத்துவர் துபானின் வளர்ச்சி சிலருக்கு எரிச்சலை ஊட்டியது. அதிலும் மன்னன் யூனானின் தலைமை அமைச்சரும் அவரது அடிவருடிகளும் மருத்துவரைப் பற்றி இல்லாதது பொல்லாததை எல்லாம் சொல்வதெல்லாம் உண்மையாக தினமும் அவனிடம் சொல்லி வந்தனர். முதலில் இதனை நம்ப மறுத்த மன்னன் பிறகு மருத்துவரின் மீது சந்தேகப்படத் தொடங்கினான். சந்தேகம் முற்றி சந்தைக்கு வர மருத்துவர் துபானுக்கு அவன் மரண தண்டனையையும் விதித்தான்.

உயிரை காப்பாற்றிய தன்மீது நம்பிக்கை வைக்காமல் தனக்கு மரண தண்டனை கொடுத்தது மருத்துவர் துபானுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் மன்னன் கட்டளைக்கு இனங்க அவர் அதற்கு சம்மதித்தார். மேலும் தன்னிடம் உள்ள சில மருத்துவ குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை அரண்மனையில் ஒப்படைக்கச் செய்தார். மரண தண்டனை கொடுக்கும் நாளும் வந்தது.

மன்னனின் கண்ணெதிரே மருத்துவர் துபான் இழுத்துவரப்பட கடைசியாக அவர் மன்னனிடம் ஒரு புத்தகத்தை நீட்டினார்.  'இதன் மகத்துவத்தை தெரிந்துகொள்ள என் தலை வெட்டப்பட்ட பின்பு அதனை ஒரு தங்கத் தட்டில் நிறுத்துங்கள்....பிறகு இந்த புத்தகத்தை பிரித்து நான்காம் பக்கத்தில் எழுதியிருப்பதை வாசியுங்கள்..... அப்போது வெட்டப்பட்ட என் தலை உங்களுடம் பேசும்..... என ஒரு வேண்டுகோளையும் விடுத்தார். மன்னனும் அதற்கு சம்மதிக்க மருத்துவர் துபானின் தலை வெட்டப்பட்டு தங்கத்தட்டில் வைக்கப்பட்டது.

மருத்துவர் கொடுத்த புத்தகத்தை மன்னன் புரட்ட அதன் பக்கங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு சீராக புரட்ட இயலாமல் இருந்தது. மன்னன் தன் கைவிரல் நுணியை வாயில் வைத்து எச்சிலைத் தடவி புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி நான்காம் பக்கத்திற்கு வந்தான். ஆனால் அந்த பக்கத்தில் எதுவும் எழுதப்படாமல் இருந்தது. இந்நிலையில் ...மன்னா தயவு செய்து இன்னும் சில பக்கங்களை புரட்டுங்கள்....என வெட்டப்பட்ட மருத்துவரின் தலை பேசத் தொடங்கியது. வெட்டப்பட்ட தலை பேசத் தொடங்கியதும் மன்னன் உட்பட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். தலை சொன்னதுபோல் கைவிரல் நுணியை வாயில் வைத்து எச்சிலைத் தடவி புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மன்னன் புரட்ட அடுத்தடுத்த பக்கங்களும் வெறுமையாகவே இருந்தது. மன்னனுக்கு கோபமும் சந்தேகமும் வர, மன்னா தயவு செய்து இன்னும் சில பக்கங்களை புரட்டுங்கள்....என வெட்டப்பட்ட மருத்துவரின் தலை மீண்டும் பேசத் தொடங்கியது. மன்னனும் அதனைத் தொடர புத்தகத்தின் அனைத்து பக்கங்களை புரட்டியும் அதில் எதுவும் எழுதப்படாமல் வெறுமையாகவே இருந்தது. இந்தமுறை வெட்டப்பட்ட மருத்துவரின் தலை கொஞ்சம் கூடுதலாகப் பேசியது.

'மன்னா என்மீது சந்தேகம் கொண்டு என்னை தண்டித்தீர்கள்.... இந்த புத்தகத்தில் எழுதியிருப்பவை உங்கள் அறிவுக்கு தெரியப்போவதில்லை..... ஆனால் இதன் பலனை நீங்கள் நிச்சையம் அனுபவிக்கப் போகிறீர்கள்..... உதவி செய்த ஒருத்தனின் மீது நம்பிக்கை இழந்த உங்களை பழிவாங்க இந்த புத்தகத்தின் பக்கங்களில் விஷத்தினை தடவி வைத்திருந்தேன்..... ஒவ்வொரு முறையும் அதை நீங்கள் உங்கள் கைவிரல் நுணியை கொண்டு வாயில் வைத்து எச்சிலைத் தடவி புரட்டியபோது அது உங்கள் உடலுக்குள் சென்றிருக்கும் என நினைக்கிறேன்.... சிறிது நேரத்தில் நீங்களும் மரணத்தை தழுவப் போகிறீர்கள்..... மரணத்தின் மீதாவது முழு நம்பிக்கை வையுங்கள்.... என சொல்லிவிட்டு வெட்டப்பட்ட மருத்துவரின் தலை அக்மார்க் வில்லன் சிரிப்பை சிரித்துக்கொண்டே சாய்ந்தது.

சிறிது நேரத்தில் அந்த பாரசீக மன்னன் யூனானின் கதையும் சாய்ந்தது.