இனிப்பும் கசப்பும்.




ரு இனிப்பான தகவல்....அதனுடன் ஒரு கசப்பான தகவல்.... இந்த இனிப்பு கசப்பு இது இரண்டும் தேவையான அளவு கலந்த காஃபி போல சுவையானதுதான் நம் வாழ்க்கை. அதனால் இன்று ஒரு இனிப்பான அதனுடன் ஒரு கசப்பான சுவையான தகவல் உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கிறேன்.

முதலில் இனிப்பான தகவலை பார்க்கலாம்.....

கரும்பிலிருந்து பெறப்படும் நாட்டுச் சர்க்கரை அல்லது சீனி என்ற வெள்ளை சர்க்கரை மற்றும் பனை வெல்லம் இவற்றை நாம் இனிப்பு சுவைக்காக பயன்படுத்தி வருகிறோம். சில நாடுகளில் பீட்ரூட், உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு,  போன்றவற்றிலிருந்து பெறப்படும் சர்க்கரையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சாக்கரின் என்ற செயற்கை வேதிப்பொருள் இயற்கைக்கு மாற்றாக இனிப்பிற்கு உள்ளது என நமக்கு நன்றாகத் தெரியும். இவற்றைவிட அதிகமான இனிப்பைத் தரக்கூடிய புரதப்பொருள் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுதான் தாமமடைன் (Thaumatin) என்ற டேலிம் (Talim) புரதம்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியாரா லியோன் மற்றும் ஜெயர் போன்ற நாடுகளில் விளையும் கடாம்ஃபி (Kstemfe - Thaumatococcus Daniellii) என்ற தாவரத்தின் இலைகள் மற்றும் பழங்களிலிருந்து இந்த புரதம் இயற்கையாகவே கிடைக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் பழங்காலத்திலிருந்து இந்த தாவரத்தை பயன்படுத்தினாலும், 1970 ஆம் ஆண்டு டேர் அண்ட் லைல் என்ற நிறுவனம் தொழில் ரீதியாக இந்த புரதத்தை விற்பனை செய்ய அது உலகிற்கு தெரிய வந்தது. மற்ற இனிப்பு பொருள்களை விட 2000 மடங்கு சுவையான இந்த புரதம் குறைவான கலோரியை கொண்டது மேலும் Flavor Enhancer என சொல்லக்கூடிய வாசனை ஊக்கியாகவும் இது செயல்படுகிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் விளையும் இந்த தாவரத்தை தற்போது ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் பயிர்செய்யத் தொடங்கிய நிலையில் சிலநாடுகளில் இதன் புரதத்தைக் கொண்டு குளிர்பானங்கள், சூயிங்கம், கால்நடை தீவனங்களை தயாரித்து வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை CFTRI (Central Food Technological Research Institute) என்ற நிறுவனம் இதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற இனிப்பு பொருட்களை காட்டிலும் சற்று தாமதமாக சுவையை உணரக்கூடிய இந்த புரதம் கூடிய விரைவில் கரும்பு மற்றும் பனை வெல்லங்களை அழித்து நம்மை இனிக்கச் செய்யலாம்.

அடுத்து கசப்பான தகவலுக்கு வருவோம்....

உலகிலேயே மிகவும் கசப்பான பொருள் என்றால் அது டெனட்டோனியம் சாக்கரைட் (Denatonium Saccharide - C28H33N3O4S) என்ற வேதிப் பொருளாகும். இதன் தன்மை ஒருமடங்கு பொருளை நூறு மில்லியன் பங்கு நீரில் கரைத்தாலும் வாயில் வைக்க முடியாத அளவிற்கு உலகமகா கசப்பாக இருக்கும். 1958 -ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் உள்ள மேஃப் பார்லன் ஸ்மித் என்ற ஆய்வு நிறுவனத்தில் மயக்கவியல் ஆய்வுகளில் இந்த வேதிப்பொருள் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.  கசப்பானவற்றில்தான் மகத்துவம் ஒளிந்திருக்கிறது என்பதற்கேற்ப இந்த வேதிப் பொருளால் மிகுந்த பயனும் இருக்கிறது. இந்த வேதிப்பொருள் எத்தனால் மெத்தனால் போன்ற ஆல்கஹால் நிறைந்த டாஸ்மாக் சமாச்சாரங்களை நாம் தொடாமல் இருக்க உதவுகிறது. மேலும் பூச்சி மற்றும் சிறு விலங்குகளை விரட்டவும் மருத்துவ துறையிலும், சோப்பு, ஷாம்பு நெயில்பாலிஸ், பெயிண்ட் தாயாரிக்கும் தொழில் துறையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனைப்போலவே இதனுடன் தொடர்புடைய இதன் தம்பியான மற்றொரு வேதிப்பொருளும் மிகுந்த கசப்புத்தன்மை கொண்டது. டெனட்டோனியம் பென்சோயேட் (Denatonium Benzoate - C28H34N2O3) என்ற பெயர் கொண்ட இதன் கசப்பு தன் அண்ணனைவிட ஐந்து மடங்கு சற்று குறைவானது.