ஒரு பயணம்.




ஆக்ஷன் வகையறா தெலுங்கு சினிமாக்களிலாவது எதாவது ஒரு பழிவாங்கும் கதை இருக்கும் இந்த திரைப்படத்தில் அதுகூட கிடையாது. விறுவிறு சுறுசுறு அடுத்தது என்ன? இருக்கையின் நுணிக்கு இட்டுச் செல்லும் திரைக்கதை இதில் அறவே இல்லை. கண்ணைக் கவரும் காட்சிகள் வாயைப் பிளக்கும் பிரம்மாண்டம் இதில் கிடையாது. இசை பாடல்கள் ஒளிப்பதிவு என தொழில்நுட்ப வேலைகள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. சொல்லும் கருத்து அல்லது அறிவிக்கும் செய்தி என ஒரு புண்ணாக்கும் இந்த திரைப்படத்தில் இல்லை. ஆனால் ஏதோ ஒருவித தாக்கம் இந்த திரைப்படம் முடியும்போது ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை (பில்டப்புகள் தானே ஒரு திரைப்படத்திற்கு அவசியம்). சரி, இனி இந்த திரைப்படத்தின் ஓட்டத்திற்கு வருவோம்.



அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த கனரக வாகனம் ஓட்டுநரான ரூபன் என்பவருக்கு அவரது முதலாளியிடமிருந்து ஒரு கட்டளை வருகிறது. அதன்படி தனது கனரக வாகனத்தில் மரச் சாமான்களையும் ஜசின்டா என்ற பெண்மணி மற்றும் அவரது ஐந்துமாத குழந்தையும் ஏற்றிக்கொண்டு பராகுவே நாட்டிலிருந்து அர்ஜென்டினா நாட்டில் உள்ள புவெனஸ் ஐரிஸ் என்ற நகரை நோக்கி அன்றையநாள் பயணத்தை தொடங்குகிறார். நீண்ட அமைதிக்குப்பின் ரூபனும் அவருடன் வரும் அந்த பெண் ஜசின்டாவும் ஒருவரையொருவர் தங்களைப்பற்றி அறிமுகப் படுத்திக்கொண்டு உரையாடத் தொடங்குகின்றனர். வழியில் எல்லையைத் தாண்டும் தருணத்தில் ஜசின்டா தன்னிடம் அர்ஜென்டினா செல்ல தற்காலிக உரிமை இருப்பதாகவும் அங்கு வேலை தேடும் காரணமாக தன் தோழியை சந்திக்கச் செல்வதாகவும் அங்குள்ள காவலாளிகளிடம் தெரிவிக்கிறாள். பயணமும் தடையின்றி தொடர்கிறது. இதற்கிடையில் அவளின் குழந்தை பசியால் அழ ரூபன் ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்துகிறார். மேலும் ஜசின்டா மற்றும் அவளது குழந்தை இருவரும் பாதுகாப்பாகச் செல்ல பேருந்து எதாவது கிடைக்குமா என தேடுகிறார். நேரம் கடந்துவிட்ட நிலையில் இனிமேல் பேருந்து எதுவும் இல்லை என தெரிந்துகொண்டு அங்கிருந்து அவர்கள் புறப்படுகின்றனர். இரவு நெருங்கும் வேளையில் வாகனத்தை ஓட்டும் ரூபனுக்கு உறக்கம் வரத் தொடங்குகிறது, இதனை கவணிக்கும் ஜசின்டா வாகனத்தை நிறுத்திவிட்டு ரூபனை உறங்கச் சொல்கிறாள். ரூபன் தன் வாகனத்தின் சக்கரங்களுக்கு அடியிலும் ஜசின்டாவும் அவளது குழந்தையும் வாகனத்திற்குள்ளும் அன்றைய இரவை கழிக்கின்றனர்.

அடுத்தநாள் இருவரும் பயணத்தை தொடர புவெனஸ் ஐரிஸ் நகரம் நெருங்கும் வேளையில் ரூபன் தனது தங்கையின் வீடு என ஒரு வீட்டின்முன் தனது வாகனத்தை நிறுத்துகிறார். தங்கையின் பிறந்த நாளுக்காக பரிசு பொருட்களை முன்னமே வாங்கி வைத்திருக்கும் அவர் பூட்டியிருக்கும் அந்த வீட்டைக் கண்டு வருத்தமடைகிறார். இதனை அறிந்துகொண்ட ஜசின்டா சிறிதுநேரம் அங்கு காத்திருக்கும் யோசனையை கூறுகிறாள். அந்த தருணத்தில் இருவரும் அருகிலிருக்கும் ஏரி ஒன்றில் நேரப் பொழுதை பேசிக் கழிக்கின்றனர். தொலைந்த நேரத்திற்குபின் ரூபனின் தங்கை வீட்டிற்கு திரும்பவரும் அவர்கள் கொண்டுவந்த பரிசை கொடுத்துவிட்டு புறப்படுகிறார்கள். மீண்டும் இவர்களின் பயணம் தொடர்கிறது. சிறிது நேரத்திற்கு பின் ஜசின்டா தான் தேடிவந்த தோழியின் வீட்டை அடைகிறாள். மேலும் தனது உறவுகள் சிலர் அங்கிருப்பதை தெரிந்து கொண்டு மகிழ்ச்சியடைகிறாள். ரூபன் தன் வேலையில் ஒன்று இனிதே முடிந்த மகிழ்ச்சியில் அங்கிருந்து புறப்பட ஆயத்தமாகிறார். மேலும் வழிப்போக்காக பயணத்தில் வந்தாலும் ஜசின்டாவிடம் நட்பை தொடர அடுத்த வாரம் இதுபோல் ஒரு பயணம் செய்ய அழைப்பு விடுக்கிறார். ஜசின்டாவும் அதற்கு சம்மதிக்க இருவரின் புன்னகையுடன் திரைப்படம் முடிகிறது.

மேலே குறிப்பிட்டதுபோல் இந்த திரைப்படத்தில் கதை திரைக்கதை தொழில்நுட்பம் பிரம்மாண்டம் என எதுவும் கிடையாது. ஆனால் திரைப்படம் முடியும் தருணம் 'எதையாவது நிரப்பிக்கொள்' என ஒரு வெள்ளை காகிதத்தை நீட்டுவதைப்போல் ஏதோவொரு வெறுமை சூழ்ந்து கொள்கிறது. இத்தகைய திரைப்படங்களை "White Paper Film" என சொல்லுவார்கள். சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன், வொயிட் பலூன், தி மிரர், வேர் இஸ் மை பிரண்ட் ஹோம் போன்ற பெரும்பாலான ஈராணிய திரைப்படங்கள் இந்த சாயலைக் கொண்டிருக்கும். அந்த வரிசையில் இந்த திரைப்படமும் சேருகிறது. நீங்கள் உன்னத சினிமாவை ரசிப்பவராக இருந்தால் இந்த திரைப்படத்தையும் அது நீட்டும் வெள்ளை காகிதத்தையும் தவறவிடாதீர்கள்.



Las Acacias.

Directed by - Pablo Giorgelli.
Written by - Pablo Giorgelli and Salvador Roselli.
Cinematography - Diego Poleri.
Country - Argentina.
Language - Spanish.
Year - 2011.