மாற்றம்.


மாற்றம் என்ற ஒற்றைச் சொல்லே மாறாதது" என்பதற்கேற்ப இந்த உலகம் தோன்றியதிலிருந்து பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அதிலும் சென்ற நூற்றாண்டில் உலகம் கண்ட மாற்றம் அபரிவிதமானது. குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலக நாடுகளின் வரைபடங்களில் ஏற்பட்ட மாற்றம் மனித வாழ்க்கையையும் மாற்றியமைத்தது. இன்று உலகமும் மனித நாகரீகமும் வேறொரு பரிணாமத்தை நோக்கி நடைபோட்டு சென்றாலும் இதுவரை மாற்றமடைந்த மாற்றத்தையும் நாம் கடந்து வந்த பாதையையும் கதையாகவோ, புத்தகமாகவோ, திரைப்படமாகவோ அல்லது வேறுவழியிலோ திரும்பிப் பார்த்து உணர்தல் என்பது அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் ஒரு சுயசரிதை போல் இருக்கும் இந்த புத்தகம் சீனாவில் கடந்த ஐம்பதாண்டு காலம் நிகழ்ந்த மாற்றங்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் "மோ- யான் (Mo Yan)". குவான்-மோ-ய என்ற இயற்பெயர் கொண்ட இவர் சீனாவில் உள்ள ஷான்-தொங் மாநிலத்தில் காவ்-மீ என்னும் ஊரில் 1955 ஆம் ஆண்டு பிறந்தார். 1966 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சீனாவில் பண்பாட்டு புரட்சி தொடங்கியபோது இவர் பள்ளியைவிட்டு மாடு மேய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். 18 வயதில் பருத்தி ஆலையில் வேலை, பிறகு இராணுவப்பணி என இவரது வாழ்க்கை தொடர, 1984 - ல் எழுத்தாளராக அடையாளம் காணப்பட்டார். 1986- ல் இவர் எழுதிய 'சிவப்புச் சோளம்' என்ற நாவல் சர்வதேச வரவேற்பை பெற தான் கைவிட்ட படிப்பைத் தொடர்ந்து இன்று சீன இலக்கியத்தில் மட்டுமல்லாமல் அரசியல் நிகழ்வுகளிலும் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். சிவப்புச் சோளம் (Red Sorghum) , பூண்டுப் பாடல்கள் (The Garlic Ballads), தளரச் செய்யும் வாழ்வும் சாவும் (Life and Death are Wearing Me Out), மது தேசம் (The Republic of Wine), பெரிய மார்புகளும் அகன்ற இடுப்புகளும் (Big Breasts and Wide Hips), தவளை (Frog) போன்ற புகழ்பெற்ற நாவல்களையும் பல குறுநாவல்களையும் மோ- யான் படைத்திருக்கிறார். அவரது குறுநாவல்களின் தொகுப்பான போகப்போக நகைப்புதான் (Shifu: You'll Do Anything for a Laugh) என்பதில் இடம்பெற்ற ஒன்பது கதைகளில் ஒன்றுதான் இந்த புத்தகம் மாற்றம் (Change).

மோ-யான் இந்த புத்தகத்தை சுயசரிதை வடிவிலிருக்கும் ஒரு குறு நாவலாக வடிவமைத்திருக்கிறார். கதையின் நாயகனாகவும் கதை சொல்லியாகவும் அவரே முன்நிற்கிறார். அவர் இந்த புத்தகத்தில் சீனாவில் கடந்த ஐம்பதாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களை முக்கிய நிகழ்வுகள், ஆட்சி மாற்றங்கள், தலைவர்களின் கதை என நேரடியாகச் சொல்லாமல் கற்பனையும் நிஜமும் கலந்து இயல்பான ஒரு உலகை உருவாக்கி பதிவு செய்திருக்கிறார். ஒரு கிராமம், ஒரு பள்ளிக்கூடம், ஒரு பள்ளித் தோழன், ஒரு பள்ளித் தோழி, சில அன்றாடம் பார்க்கும் மனிதர்கள், ஒரு பழைய காஸ்-51 டிரக் வண்டி இவற்றை வைத்துக்கொண்டு படு இயல்பாக பள்ளிப்பருவத்து குழந்தைத் தனத்துடன் கிராமத்து வயல்வெளியில் ஆலமர நிழலில் கடலையை கொறித்து காலாட்டிக் கொண்டே கதை சொல்வது போல் எழுதியிருக்கிறார். அந்த கதை முழுவதும் மெல்லிய விமர்சனங்களை வைத்துக்கொண்டே போகிறார். அந்த விமர்சனங்கள் சீன அரசையும் கம்யூனிசத்தையும் தலைவர் மாவோவையும் கலாச்சார புரட்சியையும் மறைமுகமாக பாராட்டவும் கேலி செய்யவும் தவறவில்லை. இந்த புத்தகம் காட்டும் சீனாவின் ஐம்பதாண்டு மாற்றத்தின் பரிமாணங்கள் நமக்கு சிறியதாக தோன்றினாலும் அதனை அசைபோட்டு பார்க்கும்போது பிரம்மாண்டத்தை உணர முடிகிறது. ஒரு சமூகத்தில் வாழும் சாதாரண மனிதர்களின் வாழ்வை உற்றுப் பார்ப்பதன் மூலம் ஒரு நாட்டின் வரலாற்று மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும் என இந்த புத்தகம் உணர்த்துகிறது. 
  • மாற்றம்
  • மோ-யான்
  • தமிழில் - பயணி (ஸ்ரீதரன்)
  • காலச்சுவடு பதிப்பகம்.