பாடும் மீன்கள்.


ஞாயிற்றுக்கிழமை எந்த நேரத்தில் எந்தமொழி டிவி சேனலை திறந்தாலும் யாராவது ஒருவர் மைக்கை கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக குழந்தைகள் இதில் அதிகம். அடுத்த தலைமுறையில் பாடல்களுக்கு பஞ்சமிருக்கலாம் ஆனால் பாடுபவர்களுக்கு பஞ்சம் வராது என நினைக்கிறேன். இது ஒருபுறம் இருந்தாலும் பாடுவது என்பது அற்புதமான ஒரு கலை. அந்த கலை மனிதர்களாக பிறந்த நமக்கு மட்டுமே சொந்தம் என நினைத்தால் அதுதான் தவறு. சில பறவைகளும் மீன்களும் கூட நன்றாக பாடும் தன்மை கொண்டிருக்கின்றன. பறவைகள் பாடும் என்பது நமக்குத் தெரியும் கேட்டும் இருக்கிறோம் ஆனால் மீன்கள் பாடுமா என்றால்? பாடும் என கண்டுபிடித்திருக்கின்றனர். அந்த கண்டுபிடிப்பிற்கு நமது உலகமகா உத்தம வில்லன் ஹிட்லர் ஒருவிதத்தில் உதவியிருக்கிறார்.


இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் ஜெர்மனியின் யு - போட் என்ற படகு தண்ணீருக்கு அடியில் பல எதிரி நாட்டு கப்பல்களுக்கு தண்ணிகாட்டிக் கொண்டிருந்தது. அதை கண்டுபிடித்து அழிப்பது என்பது அப்போது பெரும்பாடாக இருந்தது. அந்த யு - போட் படகை நீருக்கடியில் கண்டுபிடிக்க அமேரிக்கா ஹைட்ரோஃபோன் என்ற கருவியை பயன்படுத்தியது. சாதாரணமாக உபயோகப்படுத்தும் மைக்ரோஃபேன் கருவியைப் போன்ற இந்த ஹைட்ரோஃபோன் கருவி கடலுக்கடியில் ஏற்படும் பல சப்தங்களை பதிவு செய்தது. அதில் மீன்கள் போடும் சப்தங்களும் பதிவாகியிருந்தது. ஆரம்பத்தில் மீன்கள்தானே அது அப்படித்தான் சப்தம் போடும் அவைகளுக்குள் அரசியல் பிரச்சனைகள் ஏதாவது இருக்கக்கூடும் என நினைத்திருந்தனர். பின்னாட்களில் அந்த கருவி பதிவு செய்தவைகளை காப்பி கட் பழகாத நல்ல இசை வள்ளுநர்களிடம் காட்டி ஆராய்ச்சி செய்தபிறகுதான் அவை வெரும் சப்தம் அல்ல நல்ல சங்கீதம் என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பாடும் மீன்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர டாம்செல் (Damsel) , காட் (Cod), ஹோடாக் (Haddock) போன்ற மீன்களும் டால்பின்களும் திமிங்கிலங்களும் நன்றாக பாடும் என கண்டுபிடித்திருக்கின்றனர்.

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் டாம்செல் என்ற மீன்கள் எழுப்பும் சப்தம் மனதை வருடும் மெல்லிய பாடல்களின் மெட்டுக்களைப் போன்று இருக்கும். பெரும்பாலும் இவைகள் தனிமையில் மோகன், முரளி அளவிற்கு சோகமாக பாடி ஆழ்கடலில் அலைகின்றன. ஹோடாக் என்ற மீனின் சப்தம் பழைய யமஹா மோட்டார் சைக்கிளின் சப்பத்தை ஒத்திருக்கும் கேட்பதற்கு எரிச்சலூட்டினாலும் அவையெல்லாம் அந்த மீன்களின் அற்புதமான காதல் தேன் சொட்டும் பாடல்களாகும். காட் மீன்கள் ஒருவித முனகல் போன்ற சப்பத்தை எழுப்பும் அந்த முனகல் அனைத்தும் பதினோருமணி சமாச்சார பாடல்கள் எனவும் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கின்றனர். டால்பின்களைப் பற்றி சொல்லவே வேண்டாம் ஜாலி மூடில் சீட்டியடிக்கும் இவைகள் ...புதிய வானம் புதிய பூமி... என உலகம் சுற்றும் வாலிபன் வாலிபியாக பாடித் திரிகின்றன. இவைகளைவிட கடல்வாழ் உயிரினங்களிலேயே நன்றாக பாடக் கூடியது தலைவர் திமிங்கிலம்தான், சொல்லப் போனால் டைட்டில் வின்னரும் இவைகள்தான். அமேரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் உலகின் பல கடற்பகுதியில் வாழும் 480 திமிங்கிலங்களின் சப்தங்களை சேகரித்தனர். அவைகளை ஆராய்ந்து பார்த்தபோது திமிங்கிலங்கள் எழுப்பும் சப்தங்களில் தாளம் லயம் சுருதி இத்யாதி என அனைத்தும் ஒரு ஒழுங்கமைப்பாக இருப்பது தெரியவந்தது. திமிங்கிலங்கள் குழுக்களாக வாழ்பவை ஒவ்வொரு குழுவும் ... அன்பு மலர்களே...நம்பி இருங்களேன்... நாளை நமதே... அளவிற்கு தனித்தனி குடும்ப பாடலை வைத்திருக்கின்றன. குழுவிலிருந்து ஒரு திமிங்கிலம் பிரிந்து சொன்றாலோ அல்லது தொலைந்து போனாலோ உடனே சினிமா பாணியில் அந்த தனித்துவமான பாடலைப் பாடி பிரிந்ததை ஒன்று சேர்க்கும் திறமையும் அவைகளிடம் இருக்கிறது.

ஆக மீன்களும் நன்றாக பாடும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. பின்வரும் காலங்களில் அவைகள் ஏதாவது ஒரு சூப்பர் டூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட வாய்ப்பிருக்கிறது. நாமும் ஜான் திமிங்கிலத்திற்கும் ரோஸி டால்பினுக்கும் டேவிட் ஹோடாக்கிற்கும் ஓட்டுப் போட்டு காப்பாற்றும் சந்தர்ப்பமும் இருக்கிறது.