Plastic Bag - என் கதை.

துணிகள் வாங்கினாலும் சரி, மணிகள் வாங்கினாலும் சரி, மளிகை சாமான்கள் வாங்கினாலும் சரி, மருந்து மாத்திரைகள் வாங்கினாலும் சரி, காய்கறிகள் வாங்கினாலும் சரி, காண்டம் வாங்கினாலும் சரி, நெகிழிப் பை என சொல்லக்கூடிய 'ஒரு கேரிபேக் கொடுங்கள்' என கேட்கும் நுகர்வு கலாச்சாரம் நம்மிடம் பெரும்பான்மையாக இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் உலகம் முழுவதும் சுமார் 160000 நெகிழிப் பைகள் பயன்பாட்டிற்கு வருகிறது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. அதன்படி சராசரியாக ஒரு வருடத்திற்கு 3.5 இலட்சம் கோடி நெகிழிப் பைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். சென்ற வருடம் மட்டும் நாம் 5 இலட்சம் கோடி நெகிழிப் பைகளை பயன்படுத்தி குப்பைகளாக வீசியிருக்கிறோம். இந்த வேகமும் இந்த நிலையும் தொடர்ந்தால் 700 வருடங்களில் இந்த பூமி முழுவதையும் நெகிழிப் பைகளால் நிரப்பிவிடலாம் என அந்த ஆய்வறிக்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


LDPE (Low Density Poly Ethylenes) என்ற பொருளால் தயாரிக்கப்படும் இந்த நெகிழிப் பைகளின் தடிமன் அளவு 2 மைக்ரானுக்கும் குறைவாக இருந்தால் பாதிப்புகள் எதுவும் இல்லை அதனை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம் என்று ஆறுதல் சொல்லப்பட்டாலும் இவற்றின் ஆயுள் வெறும் இரண்டு நிமிடங்களே. மேலும் அவை முழுவதும் மண்ணில் சிதைய கிட்டத்தட்ட ஓராயிரம் வருடங்கள் எடுத்துக் கொள்ளும் என்பதே உண்மை. இந்த விழிப்புணர்வு அறிவு ஒருபுறம் இருந்தும், தடை செய்யப்பட்ட சட்டம் ஒருபுறம் இருந்தும் ஏதோ ஒருவகையில் முடிந்த அளவிற்கு ஒருமுறை இருமுறை பலமுறை என பயன்படுத்திய பின்னறே நாம் அவற்றை தூக்கி எறிகிறோம். அவ்வாறு எங்கோ ஓரிடத்தில் தூக்கியெறியப்பட்டு ஏதோ ஒரு மூலையில் குவியும் நெகிழிப் பைகளுக்கு பின்னால் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் உயிரினங்களின் பாதிப்பும் இருக்கிறது. அதேபோன்று அவைகளுக்கு பின்னால் நம்மில் ஏதோ ஒன்றை தாங்கி, சுமந்து, கசங்கி, அழுக்காகி, நொந்து, நைந்து, கிழிந்து, குப்பைகளாகிப்போன அவற்றின் நீண்ட கதைகளும் இருக்கிறது. அந்த கதைகளில் ஒன்றை கொஞ்சம் விழிப்புணர்வோடு ஒரு நெகிழிப் பை தான் கடந்துவந்த பாதைகளின் வழியே நம்மிடம் கூறினால் எப்படி இருக்கும்? இந்த குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


 📎

  • Directed by - Ramin Bahrani.
  • Written by - Ramin Bahrani & Jenni Jenkins.
  • Music - Kjartan Sveinsson.
  • Year - 2009.
  • Country - USA.
  • Language - English.