ஆப்கானிஸ்தான் - டச் டவுன் இன் பிளைட்...

ப்கானிஸ்தான் என்றதும் நமக்கெல்லாம் சட்டென நினைவுக்கு வருபவை கச்சா எண்ணெய், அமேரிக்கா, ஆயுத குவியல்கள், ஒசாமா பின்லேடன், ஓபியம், தாலிபான்கள், தலை அறுப்பு மற்றும் போர் சூழல்கள் இவைகள்தான். ஒரு தகவலுக்காகவோ, திரைப்படம் மற்றும் டாக்குமெண்டரி, குறும்படங்களுக்காகவோ அல்லது வேறு தேடல்களுக்காகவோ ஆப்கானிஸ்தான் என கூகுளில் கிளிக்கினால் கூட இவைகளே காணக் கிடைக்கும். அதற்கு சற்று விதிவிலக்காக அமைந்திருக்கிறது இந்த குறும்படம்.


ஜெர்மனியை சேர்ந்த பத்திரிக்கையாளர் லூகாஸ் அகாஸ்டின் மற்றும் புகைப்படக்காரர் சல்மா அகாஸ்டின் என்பவர்கள் இணைந்து "அகாஸ்டின் பிச்சர்ஸ்" என்ற பெயரில் பல குறும்படங்களை தயாரித்து வருகின்றனர். நேர்த்தியான காட்சி அமைப்பினாலும் சொல்ல வரும் செய்தியை பார்வையாளரின் சிந்தனைக்கு விட்டுவைக்கும் தந்திரத்தாலும் டாக்குமெண்டரியைப் போல இருக்கும் இவர்களின் Cinematic Vision என சொல்லக்கூடிய குறும்படங்கள் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. அவர்களின் தயாரிப்பில் 2011 -ல் வெளிவந்த குறும்படம்தான் "டச் டவுன் இன் பிளைட்" (Touch Down in Flight).

2006 - 2008 காலகட்டங்களில் ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த லூகாஸ் அகாஸ்டின் தாலிபான்களால் கொல்லப்பட்ட தன் சக ஊழியர் கெயில் வில்லியம்ஸ் என்பவருக்கு இந்த குறும்படத்தை சமர்ப்பணம் செய்திருக்கிறார். முன்பே குறிப்பிட்டதுபோல் போர் சூழல்கள், ஆயுதம், அகதிகள், அனுதாபம் எதுவும் இல்லாமல் வெவ்வேறு கால நிலைகளில் வெவ்வேறு நேரங்களில் தான் பார்த்து ரசித்த ஆப்கானிஸ்தான் மக்களின் அன்றாட நிகழ்வுகளை இதில் பதிவு செய்திருக்கிறார்.

He has made everything beautiful in it's time.
He has also set eternity in the hearts of man.


 Ecclesiastics 3:11

என ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத் தொடரில் தொடங்கும் இந்த குறும்படம், சாதாரண தெருக்களின் ஊடே ஒரு புகைப்பட காட்சிகளை காண்பதுபோல் பல இடங்களையும் பலரது முகங்களையும் கடந்து அழகாக பயணிக்கிறது. குறிப்பாக சிறியவர்கள் பெரியவர்கள் பெண்கள் என குறும்படத்தில் வரும் அத்தனை அசல் முகங்களிலும் அழகு நிறைந்திருக்கிறது. ஆனால் அவர்களின் கண்களில் மட்டும் ஏதோ ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒருவேளை அது அவர்கள் தேடும் கடவுளாகவும் இருக்கக்கூடும்.


📎

  • Afghanistan: Touch Down in Flight.
  • Year - 2011
  • Directed by - Lukas Augustine, Salome Augustine.
  • Music - Lisa Maria Puy.