☰ உள்ளே....

தொடர்வண்டி வாழ்க்கை.

நாசிக்குள் நுழையும்
சேற்று வாசனையில்
மெல்ல கண் விழிக்க,
சூரியன் மறைத்திருந்த
கருப்பு மஞ்சள்
திரை விலகி
அவள் உடுத்தியிருக்கும்
பச்சைப் புடவை
பரவலாகத் தெரிய,
குளத்தில் தேங்கியிருக்கும்
தண்ணீரையும்
தாமரை அல்லியையும்
நீந்தும் இரைக்காக
காத்திருக்கும்
மீன்கொத்தியையும்
கொக்கையும்
சாம்பல் நிற
மடையானையும்
ரசித்தபடி
சன்னலை வெறித்தபடி,
மேயப் புறப்பட்ட
ஆடு மாடு கோழி
குருவி குளவி வண்டு என
அஃறிணையோடு
அடிக்கடி தடதடக்கும்
சிறிய பெரிய
வாய்க்காலையும்
ஆளில்லா கேட்டையும்
கடந்து,
திருநெல்லிக்காவலில் ஏறும்
பண்டம் விற்பவர்களிடம்
சுண்டல் பனங்கிழங்கு
வேர்க்கடலை
அரிசி முறுக்கு என
ஒன்றை வாங்கி
அசைபோட்டுக் கொண்டு,
"வழிநெடுக வீற்றிருக்கும்
மரம் போல் மனமும்
ஓரிடத்தில்
நிலையாக நின்றாலும்
காட்சிப்பிழையாக
உடலை மட்டும்
நகர்த்துகிறது காலம்" என்ற
மகா சிந்தனையோடு,
ஸ்டேஷன் நெருங்குகையில்
படிக்கட்டுகளில் நின்று
ஆழ்ந்து ஒருமுறை
அதற்கும் ஒருமுறை
மறுமுறை இது
எங்க ஊர் காற்றென
கர்வத்தோடு
மூச்சிழுத்து உள்செலுத்தி,
பயணிகள் கவனத்திற்கு
அழகு பெண்குரலோடு
சூடான வடை
சமோசா டி காபி
குரலையும் கேட்டபடி
நிதானமாக வண்டி
நிற்குமுன் இறங்கி,
அரசமரத்தடியில்
அமர்ந்திருக்கும்
சித்தி விநாயகரை
நலம் விசாரித்து
ஒரு சலாம் போட்டுவிட்டு,
சார்! ரிக்ஷா வேணுமா?
சார்! ஆட்டோ வேணுமா?
சார்! டாக்ஸி?
கேட்பவர்களுக்கு
ஒரு நட்பை
ஒரு சொந்தத்தை
பார்த்த தொணியில்
வேண்டாம் என்பதையும்
மனதார புன்னகைத்து
பதிலளித்து,
தலையில் குல்லா
கழுத்தில் மப்ளர்
அவர் வயதிற்கு
பொருத்தமில்லாத
டிசர்ட்டுடன் காத்திருக்கும்
அப்பாவுடன்
ஸ்கூட்டரில் ஏறி,
எங்கங்கோ
சுற்றித்திரிந்து விட்டு
சொந்த கூட்டிற்குத் திரும்பும்
அந்த கடைசி மணிநேர
பயண சுகத்திற்காக
பல்லாயிரம் மைல்
தூரத்திலிருந்து
இனிதே புறப்படுகிறது
தொடர்வண்டி
வாழ்க்கை.